shadow

வங்கிகளில் உள்ள 90% பணம் யாருக்கு செல்கிறது தெரியுமா? ராகுல்காந்தி

கர்நாடக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில் சூறாவளி பிரச்சாரம் செய்து வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, இந்தியாவில் உள்ள வங்கிகளில் உள்ள 90% பணம், வெறும் 15 பெரும் பணக்காரர்க்ளுக்கு மட்டுமே செல்கிறது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் பேசியதாவது: நாட்டில் 15 தொழில் அதிபர்களின் ரூ.2 லட்சம் கோடி கடனை மோடி அரசு தள்ளுபடி செய்தது. விவசாயிகள் மற்றும் சிறிய தொழில் செய்பவர்களின் கடனை தள்ளுபடி செய்ய பிரதமர் முன்வரவில்லை. விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வது என்பது தவறான சம்பிரதாயம் என்று மத்திய அரசை நடத்துபவர்கள் கூறுகிறார்கள். பெரிய தொழில் அதிபர்களின் கடனை மட்டும் தள்ளுபடி செய்வது சரியா?. வங்கிகளில் உள்ள 90 சதவீத பணம் 15 பெரும் பணக்காரர்களுக்கு செல்கிறது.

கர்நாடகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சி சிறப்பான முறையில் செயலாற்றி உள்ளது. விவசாயிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. ஊழல்வாதிகளான எடியூரப்பா, ரெட்டி சகோதரர்களை அருகில் உட்கார வைத்துக்கொண்டு, மோடி ஊழல் ஒழிப்பு பற்றி பேசுகிறார்.

நீதிபதி லோயா சம்பவத்தில் பா.ஜனதா தலைவர்களுக்கு தொடர்பு உள்ளது. இதை பற்றி மோடி பேசுவது இல்லை. மோடியின் நண்பர்கள் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பி சென்றுவிட்டனர். அதுபற்றியும் மோடி வாய் திறப்பது இல்லை.

சித்தராமையா, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரை பற்றியும், என்னை பற்றியும் மோடி தனிப்பட்ட முறையில் தாக்கி பேசுகிறார். இது பிரதமர் பதவிக்கு நல்லதல்ல. ஆனால் நாங்கள் பிரதமர் பதவிக்கு மரியாதை கொடுக்கிறோம். பெங்களூருவின் வளர்ச்சிக்கு மோடி ரூ.550 கோடி மட்டுமே கொடுத்துள்ளார். இது வெட்கக்கேடானது. காங்கிரஸ் ஆட்சியில் பெங்களூரு வளர்ச்சிக்கு ரூ.10 ஆயிரம் கோடி வழங்கப்பட்டது. அரசியல் சாசனத்தை மாற்றுவதாக பா.ஜனதாவினர் சொல்கிறார்கள். தைரியம் இருந்தால் அரசியல் சாசனத்தை மாற்றி பாருங்கள். பிரதமர் மோடிக்கு கர்நாடக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்

Leave a Reply