இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட 35 பேரையும் இலங்கை அரசு செப். 23ல் விடுவித்தது. இதையடுத்து கொழும்பு மெர்கானா சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களை தமிழகத்திற்கு அனுப்ப இலங்கை அரசு நேற்றுமுன்தினம் உத்தரவிட்டது.
இதனால் 35 மீனவர்களும் மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து வரப்பட்டனர். இதுதவிர, ஜூலை 31ல் கைது செய்யப்பட்டு திரிகோணமலை சிறையில் அடைக்கப்பட்டிருந்த புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மற்றும் நாகபட்டினம் மீனவர்கள் 31 பேரை திரிகோணமலை கோர்ட் நேற்று முன்தினம் விடுதலை செய்தது.

இலங்கை அரசு உத்தரவின் பேரில் 31 பேரும் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு நேற்று அதிகாலையில் அழைத்து வரப்பட்டனர். இவர்களை அழைத்து வருவதற்காக 4 விசைப்படகுகளுடன் சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையினர் தயாராக காத்திருந்தனர். நண்பகல் 12 மணியளவில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 66 பேரையும் ஒப்படைத்தனர். அவர்களை அழைத்துக் கொண்டு இந்திய அதிகாரிகள், ராமேஸ்வரத்திற்கு புறப்பட்டனர்.

4 படகுகளும் பிற்பகல் 2.30 மணிக்கு ராமேஸ்வரம் துறைமுகத்தை வந்தடைந்தது. அங்கு 66 மீனவர்களிடமும் மீன்துறை மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சுமார் 2 மாதங்களுக்கு பின் விடுதலையான காரைக்கால், நாகபட்டினம் மீனவர்கள் மற்றும் 29 நாட்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்ட பாம்பன் மீனவர்களை ராமேஸ்வரம் மீன்துறைமுகத்தில் உறவினர்கள் கட்டித்தழுவி கண்ணீர் மல்க வரவேற்றனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *