தூத்துக்குடி : தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 5 யூனிட்களில் 3 யூனிட்கள் முடங்கின. இதனால் 630 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் மின்வெட்டு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்கள் உள்ளன. இந்த 5 யூனிட்டுகள் மூலம் தலா 210 மெகாவாட் வீதம் மொத்தம் 1,050 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வந்தது.

ஆனால் முதல் 3 யூனிட்களும் நிர்ணயிக்கப்பட்ட ஆயுட்காலமான 25 ஆண்டுகளைத் தாண்டி இயங்கி வருவதால் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகிறது. தற்போது முதல் 3 யூனிட்களில் அடிக்கடி பழுது ஏற்படுவதும், பின்னர் அவை சீரமைக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. கடந்த ஒரு வார காலத்தில் 3வது யூனிட் மட்டும் 3 முறை பழுதாகியுள்ளது.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு 10 மணி அளவில் 1வது யூனிட் திடீரென பழுதானது. நேற்று அதிகாலை 4 மணி அளவில் 3வது யூனிட்டும், காலை 6 மணி அளவில் 4வது யூனிட்டும் அடுத்தடுத்து முடங்கியது. 5 யூனிட்களில் 3 யூனிட்கள் முடங்கியதால் மொத்தம் 630 மெகாவாட் மின்உற்பத்தி தடைபட்டுள்ளது.

இதற்கு முன் இதுபோல் அனல்மின்நிலையத்தில் 3 யூனிட்கள் ஒரே நேரத்தில் முடங்கியதில்லை. இதனால் தமிழகத்தில் மின்வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 3 யூனிட்களையும் பழுதுபார்க்கும் பணியில் அனல்மின் நிலைய ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply