shadow

national awardஅறிமுக இயக்குநர் பிரம்மாவின் ‘குற்றம் கடிதல்’, சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றுள்ளது. ‘ஜிகர்தண்டா’ படத்துக்காக, சிறந்த உறுதுணை நடிகராக பாபி சிம்ஹா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

62-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்பட்டது.

இதில், பள்ளிக் கல்வித் துறையின் சீர்திருத்தம், ஆசிரியர் – மாணாக்கர் உறவு, தவறு செய்யும் மாணவர்களைத் திருத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றில் பல்வேறு விவாதங்களைத் தூண்டக் கூடிய ‘குற்றம் கடிதல்’ எனும் படம், சிறந்தத் தமிழ்ப் படத்துக்கான விருதை வென்றுள்ளது.

சிறந்த பாடலாசிரியருக்கான விருதை நா.முத்துக்குமார் பெறுகிறார். ‘சைவம்’ படத்துக்கு பாடல் எழுதியதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

‘ஜிகர்தண்டா’ எடிட்டர் விவேக் ஹர்ஷனுக்கு சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது கிடைத்துள்ளது.

சிறந்த குழந்தைகளுக்கான படமாக, தமிழ்த் திரைப்படமான ‘காக்கா முட்டை’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.

‘ஜிகர்தண்டா’வில் நடித்த பாபி சிம்ஹாவுக்கு சிறந்த உறுதுணை நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.

உன்னி கிருஷ்ணன் மகள் உத்ரா உன்னிகிருஷ்ணன் சிறந்த பாடகிக்கான விருது பெற்றுள்ளார். இவர் ‘சைவம்’ படத்தில் அழகே அழகு பாடலைப் பாடினார்.

சினிமா குறித்த சிறந்த எழுத்துக்கான விருது (பிரைட் ஆஃப் தமிழ் சினிமா) ஜி.தனஞ்செயனுக்கு வழங்கப்படுகிறது.

முக்கிய விருதுகளை வென்றுள்ள குற்றம் கடிதல் மற்றும் காக்கா முட்டை ஆகிய திரைப்படங்கள் இன்னும் திரையரங்கில் வெளியாகவில்லை. எனினும், பல்வேறு திரைப்பட விழாக்களில் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

சிறந்த நடிகர் விஜய்… சிறந்த நடிகை கங்கனா ரணவத்

கன்னட படமான ‘நான் அவனல்ல அவளு’வில் நடித்த விஜய், சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெறுகிறார். ‘குயின்’ படத்தில் நடித்த கங்கனா ரணவத்துக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ப்ரியங்கா சோப்ரா நடித்த ‘மேரிகோம்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. மராத்திய மொழி திரைப்படம் ‘கோர்ட்’ சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply