6 நாட்கள் வங்கிகளுக்கு தொடர் விடுமுறையா?

வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடர்ந்து 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வருவதாக பரவிவரும் தகவல்களுக்கு மத்திய நிதித்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் மூன்றாம் தேதி திங்கட்கிழமை முதல் ஒன்பதாம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து 6 நாட்கள் நாடு முழுவதும் தேசிய வங்கிகளுக்கு விடுமுறை வருவதாக ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூகவலைத்தளங்களில் ஒரு வதந்தி பரவி வருகிறது.

இந்த தகவலை சில பத்திரிகைகளும் கேள்விக்குறியுடன் செய்தியாக வெளியிட்டன. இதற்கு மத்திய நிதித்துறை அமைச்சகம் இன்று விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய நிதித்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில். ‘செப்டம்பர் முதல் வாரத்தில் அனைத்து வங்கிகளும் திறந்திருக்கும். வங்கியியல் பணிகள் தங்குதடையின்றி நடைபெறும். 2-9-2018 ஞாயிற்றுக்கிழமை மற்றும் இரண்டாவது சனிக்கிழமையான 8-9-2018 ஆகிய இருநாட்கள் மட்டும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

3-9-2018 அன்று சில மாநிலங்களில் மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை தினமாக இருக்கும். மற்றபடி, நாடு தழுவிய அளவில் வங்கிகள் மூடப்படாது. அந்த நாட்களிலும் அனைத்து மாநிலங்களில் உள்ள ஏ.டி.எம். மையங்கள் திறந்திருக்கும். ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் எவ்வித பாதிப்பும் இருக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *