shadow

1-doctor (1)அரசு மருத்துவமனைகளில் தற்காலிக அடிப்படையில் பணிபுரிய 547 அரசு உதவி டாக்டர்களை தேர்வு செய்வதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி வரும் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்க உள்ளது என்று மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித் துள்ளது.

தமிழக அரசு மருத்துவமனைகளில் பல்வேறு சிறப்பு துறைகளில் பணிபுரிய தற்காலிக அடிப்படையில் 547 அரசு உதவி டாக்டர்கள் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) கடந்த அக்டோபர் மாதம் 25-ம் தேதி வெளியிட்டது. கடைசி நாளான நவம்பர் 16-ம் தேதி வரை சுமார் 900 டாக்டர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த டாக்டர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. தகுதியான நபர்களுக்கு பணிக்கான ஆணை வழங்கப்படும்.

இவ்வாறு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

டாக்டர்கள் சங்கம் எதிர்ப்பு

எழுத்துத் தேர்வு நடத்தாமல் நேர்முகத் தேர்வு மூலமாக டாக்டர்களை தேர்ந்தெடுப்பதில் முறைகேடுகள் நடப்பதற்கு அதிகம் வாய்ப்புள்ளது. அனுபவம் இல்லாத டாக்டர்கள் பணிக்கு வந்துவிடுவார்கள். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை எளிய நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அதனால் எழுத்துத் தேர்வு மூலமாகவே சிறந்த டாக்டர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் (எஸ்டிபிஜிஏ) வலியுறுத்தி வருகிறது.

Leave a Reply