திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி என்ற ஊரில் தமிழகத்திலேயே முதல்முறையாக ஒரு ரூபாய்க்கு 5 லிட்டர் மினரல் வாட்டர் கிடைக்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனமும், புள்ளம்பாடி பேரூராட்சி நிர்வாகமும் இணைந்து ரூ.10 லட்சம் செலவில் மினரல் வாட்டர் உற்பத்தி செய்யும் திட்டம் தொடங்கப்பட்டு இன்று முதல் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

புள்ளம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் இன்று நடந்த விழாவில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின்  திருச்சி முதன்மை மண்டல மேலாளர் ஜோசப் சாமுவேல் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முக்கிய காரணமாக இருந்த முன்னாள் புள்ளம்பாடி பேரூராட்சி தலைவர் ஜெயப்பிரகாஷ் இது குறித்து கூறும்போது, “கர்நாடகாவில் உள்ள ஒரு கிராமத்தில் தான் இந்த திட்டம் வெற்றிகரமாக நடைபெறுவதை பார்த்தேன். அந்த திட்டத்தை நமது ஊருக்கும் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தில் மணிசங்கர ஐயர் எம்.பி அவர்களை தொடர்பு கொண்டேன். அவரது பரிந்துரையின் பேரில் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் இந்த திட்டத்தை எங்கள் ஊரில் நடைமுறைப்படுத்த நிதியுதவி கொடுத்து உதவியது. இந்த திட்டத்தை செயல்படுத்த மூன்று வருடங்கள் ஆகியுள்ளது” என்று கூறினார்.

இந்த திட்டம் தொடங்கப்பட்டவுடன் ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்று ஒரு ரூபாய்க்கு 5 லிட்டர் மினரல் வாட்டர் பெற்று சென்றனர்.

Leave a Reply