shadow

5 கோடி வேலை வாய்ப்புகள் சாத்தியமா?

இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 35 வயதுக்கு குறைவான வயதுடையவர்கள் 65 சதவீதம். இந்த இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். இவர்களை ஒருங்கிணைத்து இவர்களின் திறன்களை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 1 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்’’. இது 2013-ம் ஆண்டு இறுதியில் ஆக்ராவில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தில் பேசியது.

“தற்போது இந்தியாவில் 5 கோடி பேர் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றனர். 2020-ம் ஆண்டுக்குள் 5 கோடி பேரின் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்’’ என்று தொழிலாளர் அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கடந்த மாதம் தெரிவித்துள்ளார். ஆனால் உண்மையிலேயே தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு எவ்வளவு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் 2020-ம் ஆண்டுக்குள் 5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கமுடியுமா? என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது.

அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு எவ்வளவு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதை புள்ளிவிவரங்களில் தேடும் பொழுது கடந்த 2014-ம் ஆண்டில் மொத்தம் 4.9 லட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது. 2015ம் ஆண்டில் வெறும் 1.35 லட்சம் வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாகியிருக்கின்றன. இது கடந்த ஏழு ஆண்டுகளில் உருவான வேலைவாய்ப்பை விட குறைவானதாகும்.

இதுபோன்ற புள்ளிவிவரங்கள் மோடி அரசாங்கத்துக்கு சாதகமானதாக இல்லை. முக்கியத் துறைகளில் வேலைவாய்ப்பு உருவாக்கம் முடங்கி கிடக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை உற்பத்தி துறை தொடர்ந்து அதிக வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடியது. ஆனால் கடந்த 2016-ம் ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரை உற்பத்தித் துறை, கட்டுமானம், போக்குவரத்துத் துறை, வர்த்தகத் துறை ஆகியவற்றில் 70,000 வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாகியுள்ளன. அதுமட்டுமல்லாமல் மிகப் பெரிய தொழில்துறை நிறுவனமான லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் 14,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருக்கிறது.

உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் ‘மேக் இன் இந்தியா திட்டம்’ கொண்டுவரப்பட்டது. இதுபோன்ற திட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்தாலும் உற்பத்தித் துறையை சார்ந்த பொருட்களின் விற்பனை கடந்த 2015-16ம் ஆண்டில் 3.7 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டில் இந்த சரிவைக் கண்டுள்ளது. இந்த சரிவு தொடருமானால் ஊழியர்கள் பணிநீக்கம் செய்வது தொடரும் என்கின்றனர் வல்லுநர்கள். இப்படி ஒரு சூழ்நிலை நிலவி வருகையில் அதிக அளவு வேலைவாய்ப்பை ஓரிரு ஆண்டுகளில் எப்படி உருவாக்கமுடியும் என்பது கேள்வியாக இருக்கிறது.

சேவைத்துறை இந்தியாவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இ-காமர்ஸ் நிறுவனங்கள், லாஜிஸ்டிக்ஸ் சார்ந்த நிறுவனங்கள் அதிக அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கின. ஆனால் தற்போது இ-காமர்ஸ் துறை லாபத்தில் இயங்காதது, மூலதன நெருக்கடி போன்ற காரணங்களால் பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்துவருகின்றன. கடந்த வாரத்தில் ஸ்நாப்டீல் நிறுவனம் மட்டும் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. அதிக வேலைவாய்ப்பளிக்கும் துறைகளும் தற்போது தொய்வடைந்து வருவதால் பட்டதாரிகளின் நிலை கேள்விகுறியாகியுள்ளது.

அரசு திட்டங்களின் தோல்வி

வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசு இரண்டு முக்கியத் திட்டங்களை கொண்டு வந்தது. பிரதான் மந்திரி வேலை உருவாக்கும் திட்டம், தீன் தயாள் உபாத்யாயா கிராமின் கெளசல்யா யோஜனா என்ற பெயரில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்தத் திட்டங்கள் பெரிய அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு மூன்றாண்டுகளில் இந்த திட்டங்களின் மூலம் மொத்தம் 11 லட்சத்திற்கும் குறைவான வேலைவாய்ப்புகளே இதுவரை உருவாக்கப்பட்டுள்ளன.

இளைஞர்கள் திறனை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு திறன்மிகு இந்தியா திட்டத்தை 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் கொண்டுவந்தது. 2022-ம் ஆண்டுக்குள் 40 கோடி இளைஞர்களை திறன் படைத்தவர்களாக மாற்றும் நோக்கில் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் பல்வேறு துணைத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த ஆண்டு பட்ஜெட்டில் கூடுதல் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் ஓரளவு ஊழியர்களின் திறனை மேம்படுத்தி வருகிறது. ஆனால் இவர்களுக்கான வேலைவாய்ப்பையும் அரசு உறுதிப்படுத்தினால் மட்டுமே திட்டம் வெற்றியடையும்.

அச்சுறுத்தும் பாதுகாப்புவாதம்

உலகம் முழுவதும் பாதுகாப்புவாத கொள்கை தலைதூக்கி வருகிறது. அமெரிக்காவில் விசா கொள்கையில் கடுமையான விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறி இருக்கிறது. சவூதி அரேபியாவில் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை சரிவால் 90 லட்சம் வெளிநாட்டு ஊழியர்களின் நிலை கேள்வி குறியாகி இருப்பது. இப்படி உலகம் முழுவதும் பாதுகாப்பு வாத கொள்கைகள் வலிமையடைந்து வருகின்றன. இது வளர்ந்த நாடுகளுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது.

ஆனால் வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகளுக்கு மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்குச் சென்று இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை ஊழியர்களாக பல்வேறு நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள்.

பணமதிப்பு நீக்கத்தால் பாதிப்பா?

இந்திய ஊழியர்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். முறைசார் தொழிலாளர்கள் அல்லது முறைசாரா தொழிலாளர்கள். பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு கிராம புறத்திலும் நகர்புறத்திலும் உள்ள முறைசாரா தொழிலாளர் கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதிக அளவில் முறைசாரா தொழிலாளர்களை கொண்ட கட்டுமானத்துறை பணமதிப்பு நீக்கத்தால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. புதிய திட்டங்களை அதிக அளவு தொடங்கமுடியவில்லை. முதலீடுகள் பெறுவதிலும் தேக்கம் ஏற்பட்டுள்ளதால் அதிக அளவு ஊழியர்களை வேலைவாய்ப்பில் உட்படுத்த முடியாத நிலை தொடர்கிறது.

2020-ம் ஆண்டு 5 கோடி நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது மிகப் பெரிய இலக்கு. தற்போதைய சூழல் தொடருமானால் இது சாத்தியமில்லை. அதுமட்டுமல்லாமல் உலக பொருளாதாரத்தின் மந்தநிலை, பாதுகாப்புவாத கொள்கையால் ஏற்படும் வேலையிழப்பு, உற்பத்தி துறைவளர்ச்சி குறைவாக இருப்பது போன்ற காரணங்களால் புதிய வேலைவாய்ப்புகளை அதிக அளவில் உருவாக்கமுடியாது. இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளில் வேலைவாய்ப்பு என்பது அனைத்து நாடுகளிலும் மிகப் பெரிய விஷயமாக மாறப் போகிறது.

அதிக எண்ணிக்கையில் பட்டதாரிகள் ஆண்டுதோறும் வெளியேறி வருகின்றனர். இவர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வது என்பது அரசுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கப்போகிறது. உற்பத்தித் துறை வளர்ச்சி, அதிக அளவு அந்நிய முதலீட்டை பெறுவது, தனியார் துறையில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவது, திறன்மிகு ஊழியர்களை உருவாக்குவது போன்றவற்றால் மட்டுமே 5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கமுடியும். மொத்த மக்கள் தொகையில் அதிக அளவு இளைஞர்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தினால் வளர்ச்சி என்ற இலக்கை எளிதாக அடைய முடியும்.

ஆனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தாவிட்டால் மிகப் பெரிய அளவில் சமூக பதற்றம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்பதை அரசு நினைவில் கொள்ள வேண்டும்.

Leave a Reply