shadow

LRG_20151007105958771390

கன்னிவாடி அருகே 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்களின் வாழ்வியல் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.திண்டுக்கல் அருகே குட்டத்துப்பட்டி-கோனுார் இடையே, கரிசல் மண் காடுகளுக்கு இடையே சாம்பல்மேடு அமைந்துள்ளது. இப்பகுதியில் ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது:“குட்டத்துப்பட்டி சமூக ஆர்வலர் தாமஸ் தகவலின்படி, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு புதிய கற்கால தமிழ் மக்களின் வாழ்வியல் தடயங்கள் ஏராளமாக கிடைத்தன. சிதிலமடைந்த பானை ஓடுகள், மண் குப்பிகள், அகல் விளக்கு படிமங்கள், வட்டச்சில்லுகள், உணவுப்பாத்திரங்கள் ஆகியவை உள்ளன. இவை அனைத்தும் (கி.மு.,2000க்கும் முற்பட்ட) இரண்டாம் சங்க காலத்தைச் சேர்ந்தவை. இங்கு கிடைத்து உள்ள இப்பொருட்கள், இரண்டாம் சங்க காலத்தின் இறுதிப்பகுதி முதல் மூன்றாம் சங்க கால இறுதிட்டகாலத்தைச் சேர்ந்தவை. கிடைத்த வட்டச்சில்லில் தே என்னும் தமிழ் பிராமி எழுத்தும், ஒரு தாழியின் கழுத்துப்பகுதியில் பாதி நிலையில் கண்ணுக்கு புலப்படக்கூடிய ஒரு குறியீடும் உள்ளன. இவை மூன்றாம் சங்க காலத்தின் இறுதிப்பகுதியைச் சேர்ந்தவை.

தொடர்ச்சியாக சுமார் 2 ஆயிரத்து 200 ஆண்டுகள் இச்சாம்பல் மேட்டுப்பகுதி, மக்களின் வாழ்விடமாக இருந்திருக்கும்.தொல்லியல் ஆய்வில் ஆஷ் மவுண்ட் என்ற சாம்பல் மேட்டுப்பகுதி புரியாத புதிராகஉள்ளது. வடஇந்திய ஆய்வாளர்கள் இந்தச்சாம்பல் மேடுகளை புராணத்துடன் தொடர்பு படுத்தி வைதீக யாகங்களின் விளைவாகவோ, அசுரர் களின் இழிவுச்சிதைவு களாக இருக்கலாம் என்றும், கருதுகின்றனர். இம்முடிவுகளை ஆய்வு செய்த ஆங்கிலேய தொல்லியல் ஆய்வாளர் ராபர்ட் புரூஸ் பூட், தற்கால அறிவியலுக்கு இவை பொருந்தாதவை என மறுத்தார். இவை உறுதியாக புதிய கற்கால வாழ்வியல் தடயங்கள் என வரையறுத்தார். இவ்வகை சாம்பல் மேடுகள், தமிழகத்தில் கரூர் அருகே டி.கூடலுாரிலும், தென்னிந்தியாவின் லிங்கனப்பள்ளி அருகே குப்பக்கல் என்ற இடத்திலும் கிடைத்துள்ளன. ஆப்பிரிக்காவில் இதுபோன்ற சாம்பல் மேடுகள் இருப்பதை சர்.ஹென்றி ஸ்டேன்லியன் கண்டறிந்தார்.பண்டைய கால தமிழகத்திற்கும், ஆப்பிரிக்க பழங்குடி மக்களுக்கும் இடையே உள்ள நாகரிக தொடர்புகள் இதுபோன்ற சாம்பல் மேடுகளில் அடங்கியுள்ளதை உறுதியாகக்கூற முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply