தொலைபேசியில் இருவர் பார்த்துக் கொண்டே பேசும் அதிநவீன தொழில்நுட்பத்தை போலந்து நாட்டு நிறுவனம் ஒன்று உருவாக்கி உள்ளது.

இது குறித்து லண்டனிலிருந்து வெளியாகும் “தி டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 1977-ஆம் ஆண்டு வெளிவந்த “ஸ்டார் வார்ஸ்’ திரைப்படத்தில், கதாநாயகியான இளவரசி லேயா, தொலைதூரத்தில் இருந்து லூக் ஸ்கைவாக்கர் என்பவரிடம் முப்பரிமாண வடிவில் தோன்றி பேசுவதாக காட்சி இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில், கதாநாயகி லேயாவின் பெயரில் தொடங்கப்பட்ட “லேயா டிஸ்ப்ளே சிஸ்டம்ஸ்’ என்ற நிறுவனம், அந்தக் கற்பனை தொழில்நுட்பத்துக்கு செயல்வடிவம் கொடுத்து வருகிறது.

அந்நிறுவனம் தயாரித்து வரும் முப்பரிமாண தொலைபேசியில் பேசுவதற்கு, இரட்டை லென்ஸ் கொண்ட ஒரு சிறப்பு கமெரா முன்பு அழைப்பாளர் அமர வேண்டும்.

அவரது உருவத்தை உள்வாங்கிக் கொள்ளும் கமெரா, மறு முனையிலுள்ள நீராவி நிரம்பிய முப்பரிமாணத் திரையில் அழைப்பாளரின் உருவத்தை முப்பரிமாண வடிவில் திரையிடும்.

அந்தத் திரையில் அழைப்பாளரின் அசைவுகளையும், பேச்சுகளையும் எதிர்முனையில் இருப்பவர்கள் உடனுக்குடன் காணவும், கேட்கவும் முடியும்.

அடுத்த ஆண்டுக்குள் முப்பரிமாணத் தொலைபேசியின் மாதிரியைத் தயாரிக்கவும், ஐந்து ஆண்டுகளுக்குள் வர்த்தக ரீதியாக அவற்றைத் தயாரித்து சந்தையில் விற்பனை செய்யவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply