வங்க கடலில் உருவான பைலின் புயல் பத்து தினங்களுக்கு முன் ஒடிசா ஆந்திரா மாநிலங்களை தாக்கியது. அப்போது மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டதால் உயிர் இழப்பு தவிர்க்கப்பட்டது.

பைலின் புயலை தொடர்ந்து கடந்த வாரம் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது ஆந்திராவை நோக்கி நகர்ந்தது. இதனால் அங்கு 5-வது நாளாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 1  லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 37 பேர் பலியாகியுள்ளனர். பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.  ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் கனமழை நீடிக்கிறது .

ஸ்ரீகா மாவட்டத்தின் பல கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.  சாலைகள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டுள்ளன. குண்டூர் மாவட்டத்தில் பல ஏரிகள், குளங்கள் நிரம்பியுள்ளன. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பிரகாசம் மாவட்டத்தில் 140 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. தாழ்வான பகுதியில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் 400க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தம் காரணமாக மேலும் 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என விசாகப்பட்டினம் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. சென்னையிலும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவ மழை கடந்த 22ம் தேதி தொடங்கியது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்ந்து வருகிறது. நேற்று இரவு காஞ்சிபுரம், திருவள்ளளூர் பகுதிகளில் 20 செ.மீ வரை மழை பெய்ந்துள்ளது.

ரயில்கள் ரத்து
ஆந்திராவில்  மழை காரணமாக தென்மத்திய ரயில்வே 4 எக்ஸ்பிரஸ் ரயில்களை ரத்து செய்துள்ளது. ஹவுரா எக்ஸ்பிரஸ், ஹவுரா& யஸ்வந்பூர் இடையிலான துரந்தோ எக்ஸ்பிரஸ், மிரியால் கூடா& காக்கிகூடா இடையிலான பாசஞ்சர் ரயில், செகந்திராபாத்& குண்டூர் இடையிலான ஜென்மபூமி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆந்திரா வழியாக செல்லும் ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன.

Leave a Reply