சென்னை விமானம் நிலையம் வழியாக துபாய், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்படும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

தங்கத்தின் விலை இந்தியாவில் நிலையில்லாமல் இருப்பதாலும், வெளி நாடுகளை விட விலை பல மடங்கு அதிகமாக இருப்பதாலும் தங்கம் கடத்தல் அதிகரித்து வருகிறது. துபாயில் இருந்து இன்று அதிகாலை 5 மணிக்கு சென்னை வந்த ஏர்-இந்தியா விமானத்தில் 30 கிலோ தங்க கட்டிகள் கடத்தப்பட்டன. விமானத்தின் கழிவறையில் தங்கட்டிகளை கடத்தி கொண்டுவரப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துபாயிலிருந்து சென்னைக்கு வந்த ‘ஏர்-இந்திய’ விமான பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் வந்த 3 பேரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்தனர். அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு சென்ற அவர்கள் மேலும் 2 பேரிடமும் பேசிக் கொண்டிருந்தனர். அந்த 2 பேரும் அதே விமானத்தில் டெல்லி செல்ல தயாராக இருந்தனர். இவர்களது பயணத்தில் அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது. அவர்களை மடக்கி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர்களது பெயர் முகமது யூசுப், முகமது யாசின் என தெரிய வந்தது.

துபாயிலிருந்து வந்த 3 பேர் தங்கத்தை கடத்தி கொண்டு வந்ததாகவும், அதை விமானத்தில் கழிவறையில் பதுக்கி வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர். இதில் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக ஏர்-இந்தியா விமானத்திற்கு சென்று கழிவறையை பார்த்தனர். அங்கு தங்க கட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவற்றை கைப்பற்றி மேலும் விசாரணை நடத்தினார்கள். கடத்தப்பட்ட தங்கம் 30 கிலோ என தெரிய வந்தது. அவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.9 கோடி ஆகும்.

ஏர்-இந்தியா விமானம் துபாயிலிருந்து சென்னை வந்து பின்னர் சென்னையிலிருந்து டெல்லிக்கு செல்கிறது. அதை பயன்படுத்தி கழிவறைக்குள் தங்கத்தை பதுக்கி வைத்துள்ளனர். யாருக்கும் சந்தேகம் ஏற்படாதவாறு கடத்தல் கும்பல் மிக கச்சிதமாக இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ளது. சென்னை வந்து இறங்கியதும் முகமது யூசுப், முகமது யாசின் ஆகியோரை டெல்லிக்கு அதே விமானத்தில் பயணம் செய்து கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள தங்க கட்டிகளை எடுத்துக் கொண்டு டெல்லி வழியாக வெளியேற திட்டமிட்டிருந்தனர். சரியான நேரத்தில் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்டதால் பெரும் கடத்தல் தடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகளின் ஆவணங்கள் பரிசோதனை செய்யப்படுவதில்லை. அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி இந்த தங்க கடத்தலில் ஈடுபட இருந்தனர். ஆனால் மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து மிகப்பெரிய கடத்தல் கும்பல் பிடிபட்டுள்ளது.

துபாயிலிருந்து தங்கத்தை கடத்தி வந்த 3 பேர் சென்னை சேர்ந்தவர்கள். மற்ற 2 பேர் கேரளாவை சேர்ந்வர்கள். 5 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கடத்தல் பின்னணியில் யார் உள்ளனர் என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *