shadow

மனித வெடிகுண்டாக மாறிய 3 பெண்கள். நைஜீரியாவில் 86 பேர் பலி.
human bomb
சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஐ.எஸ்.ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதை போல, கிறிஸ்துவர்கள் மற்றும் முஸ்லிம்கள் சமஅளவில் உள்ள நைஜீரியா நாட்டில் இஸ்லாமிய சட்டதிட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வர போகோஹரம் என்ற தீவிரவாத அமைப்பு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. மேலும் அந்நாட்டில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களுக்குள் கும்பலாக நுழையும் இவர்கள், அங்குள்ள மக்களை ஈவிரக்கமின்றி கொலை செய்து வருகிறது. கடந்த ஆண்டு போகோஹரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளின் நிலை என்னவாயிற்று? என்பது இன்னும் தெரியவில்லை.

வடக்கு நைஜீரியாவில் உள்ள சில சிறிய நகரங்களை கைப்பற்றியுள்ள போகோஹரம் தீவிரவாதிகள், தற்போது, வடகிழக்கு மாநிலங்களின் தலைநகரான மைடுகுரியை கைப்பற்றும் நோக்கத்தில் அவ்வப்போது இப்பகுதியில் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மைடுகுரி நகரில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள டலோரி கிராமத்துக்குள் ஆயுதமேந்திய நூற்றுக்கணக்கான போகோஹரம் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் இரவு நுழைந்தனர். அங்கிருந்த வீடுகள் மீது வெடிகுண்டுகளை வீசி கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட அந்த கும்பல், உயிர் பயத்தில் தப்பியோட முயன்றவர்கள் மீது கண்மூடித்தனமாக இயந்திர துப்பாக்கிகளால் சுட்டது.

சுமார் நான்கு மணி நேரம் நீடித்த இந்த தாக்குதல்களில் ஏராளமான குழந்தைகள் உள்பட 86 பேர் குண்டு காயங்களாலும், தீயில் கருகியும் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறிப்பாக அந்த பகுதி பொதுமக்கள் தங்கள் கைக்குழந்தைகளுடன் பக்கத்து கிராமத்திற்கு தப்பியோடிய கும்பலுக்குள் புகுந்த மூன்று பெண் தீவிரவாதிகள், தங்களது உடல்களில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததில் பெரும் உயிரிழப்பு நேரிட்டதாகவும், இந்த தொடர் தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த செய்திகள் சுட்டிக் காட்டுகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்றுவரும் போகோஹரம் தீவிரவாதிகளின் வெறியாட்டத்துக்கு 20 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர். 25 லட்சத்துக்கும் அதிமானோர் அகதிகளாக வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply