shadow

இந்திய சட்டத்துறை வரலாற்றில் முதல்முறையாக காணொலி மூலம் வெளிநாட்டு கைதியிடம் விசாரணை
david hadly
கடந்த 2008ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்த்தப்பட்ட கொடூரமான தீவிரவாதத் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி டேவிட் ஹெட்லியை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க போலீசார் கைது செய்து அந்நாட்டு சிறையில் அடைத்து வைத்துள்ளனர். அமெரிக்க போலீஸார் ஹெட்லியை தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில்  இன்று மும்பை நீதிமன்றத்தின் முன்பு காணொலி முறை மூலம் அவர் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இந்திய சட்டத்துறை வரலாற்றில் வெளிநாட்டுச் சிறையில் இருக்கும் கைதி ஒருவர் காணொலி முறை மூலம் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேசியப் புலனாய்வு அமைப்பை சேர்ந்த அதிகாரிகள், டேவிட் ஹெட்லியிடம் மேற்கொண்ட விசாரணையின் தகவல்கள் கசிந்துள்ளது. இந்த விசாரணையில்  மும்பையில் தாக்குதல் நடத்துவதற்கு முன்பே இந்திய குடியரசுத் துணைத் தலைவர் மாளிகை, இந்தியா கேட் மற்றும் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகம் ஆகியவற்றை ஹெட்லி வேவு பார்க்க 8 முறை இந்தியா வந்துள்ளதாகவும், அதில் மும்பைக்கு மட்டும் 7 முறை சென்றதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த அதிர்ச்சி தகவலை பிரபல செய்தி நிறுவனம் ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த தாக்குதல் ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ. ஆகியவற்றின் முழு ஒத்துழைப்புடன்தான் நிகழ்த்தப்பட்டதாகவும் ஹெட்லி தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி  மும்பை தாக்குதலின்போது, பாகிஸ்தான் அரசின் உளவு அமைப்பை (ஐ.எஸ்.ஐ.) சேர்ந்த மேஜர் இக்பால் மற்றும் சமீர் அலி ஆகியோரின் கட்டுப்பாட்டின் கீழ் ஹெட்லி செயல்பட்டதாகவும், பிரிகேடியர் ரிவாஸின் கீழ் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி ஜகியுர் ரஹ்மான் லக்வி இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இன்று காணொலி மூலம் நடைபெறவுள்ள விசாரணையிலும் சில திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply