சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விபத்தில் சக்திவேல் குவாரவேலு என்ற இந்தியர் பலியானார். இதையடுத்து அப்பகுதியில் தெற்காசியர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். தீப்பந்தங்களை ஏந்திச் சென்ற கலவரக்காரர்கள் வாகனங்களை தீயிட்டுக் கொளுத்தி தங்கள் எதிர்ப்பை காட்டினர்.
கடந்த 40 ஆண்டு காலத்தில் இல்லாத வகையில் மிகப்பெரிய அளவில் வன்முறை வெடித்ததால் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். போராட்டக்காரர்கள் தாக்கியதில் காவல்துறையினரும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர்.

இந்த கலவரம் தொடர்பாக 24 இந்தியர்கள் உள்ளிட்ட 28 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களில் இந்தியர்கள் 24 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் மீது மிகவும் மோசமான கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களின் காவல் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 17 ஆம் தேதி நடைபெற உள்ளது.

24 இந்தியர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும். குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்தியர்களுக்கு ஆதரவாகவும், தூதரக வசதிகளை செய்து கொடுப்பது பற்றியும் இந்திய தூதரகம், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகத்துடன் பேசி வருகிறது.

Leave a Reply