shadow

‘2.0’ திரைவிமர்சனம்

ரஜினியின் கடந்த இரண்டு படங்களான கபாலி மற்றும் காலா ரஞ்சித்தின் சொந்த கருத்தை திணிக்கும் வகையில் இருந்ததால் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. ஆனால் ரஜினி ரசிகர்களின் நாடித்துடிப்பை சரியாக அறிந்த ஷங்கர் இயக்கியிருக்கும் இந்த படம் ரஜினி ரசிகர்களுக்கான விருந்தாக அமைந்ததா? என்பதை தற்போது பார்ப்போம்

பறவைகளை ஆராய்ச்சி செய்யும் அக்சயகுமார், மனிதர்கள் அதிகமாக பயன்படுத்தும் செல்போன்களால் பறவைகள் இனமே அழியும் ஆபத்து இருப்பதை கண்டுபிடிக்கின்றார். பறவை இனம் அழிவது பறவைகளுக்கு மட்டுமின்றி மனிதர்களுக்கும் ஆபத்து என்பதை உணர்ந்த அக்சய், மக்களிடம் இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். ஆனால் அவருக்கு தோல்வியும் அவமானமுமே மிஞ்சுவதால் ஒருகட்டத்தில் மனம் வெறுத்து தூக்கி தொங்கி தற்கொலை செய்து கொள்கிறார். அக்சயகுமாரின் ஆவியும், கோடிக்கணக்கான இறந்த பறவைகளின் ஆவிக்களும் சேர்ந்து ஐந்தாம் சக்தியாக உருவெடுத்து மனிதர்களுக்கு எதிரான போரை தொடங்குகின்றன. இதனை ரஜினி மீண்டும் உயிர்ப்பிக்கும் சிட்டி எப்படி சமாளிக்கின்றது என்பதுதான் இந்த படத்தின் கதை

நீண்ட இடைவெளிக்கு பின் ரஜினியின் உண்மையான, அசத்தலான நடிப்பை காண முடிகிறது. குறிப்பாக சிட்டி மற்றும் ரோபோ 2.0 கேரக்டர்களில் அவருடைய நடிப்பு ரசிகர்களுக்கு கொண்டாட்டம். ஒரு இன்ப அதிர்ச்சியாக 3.0 குட்டி ரஜினியும் உண்டு.

அக்சயகுமாரின் மிரட்டலான நடிப்பை முதல்முறையாக தமிழ் ரசிகர்கள் ரசிப்பார்கள். பக்சி என்ற கேரக்டரில் பறவைகளின் விஞ்ஞானியாக அவருடைய நடிப்பில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. இரண்டாம் பாதியில் ராஜாளியாக அவர் செய்யும் அட்டகாசம் ரஜினிக்கு ஈடான நடிப்பு

எமிஜாக்சன் ரஜினிக்கு உதவி செய்யும் ரோபோ கேரக்டரில் நடித்துள்ளார். ரஜினிக்கே பல இடங்களில் உதவி செய்யும் கேரக்டர் என்பதால் அவருடைய கேரக்டர் வலுவாக அமைக்கப்பட்டுள்ளது.

எந்திரன்’ பட வில்லன் டேனியின் மகனாக நடித்திருக்கும் சுதன்ஷூ பாண்டே மற்றும் உள்துறை அமைச்சர் கேரக்டரில் நடித்திருக்கும் அதில்ஹுசைன் ஆகியோர்களின் நடிப்பு ஓகே

ஏ.ஆர்.ரஹ்மானின் இரண்டு பாடல்கள் படத்தின் கதையோடு இணைந்த காட்சிகளில் வருவதால் படத்தின் விறுவிறுப்பு குறையாமல் உள்ளது. ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட் ஆன ‘இந்திரலோகத்து சுந்தரி’ பாடல் படத்தின் இறுதியில் வைத்தது ஷங்கரின் புத்திசாலித்தனம். ரஹ்மானின் பின்னனி இசை இந்த படத்தை நிச்சயம் தூக்கி நிறுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

நீரவ்ஷாவின் கேமிராவும், அந்தோணியின் படத்தொகுப்பும் உலக தரத்தில் இருப்பது இந்த படத்தின் பிளஸ்களில் ஒன்று

இயக்குனர் ஷங்கரின் நான்கு வருட உழைப்பு இந்த படத்தில் தெரிகிறது. ஒவ்வொரு காட்சிக்கும் அவர் எடுத்துள்ள மெனக்கிடல், அபாரமான அவருடைய கற்பனையை காட்சியாக திரையில் கொண்டு வந்துள்ள நேர்த்தி, வெறும் விஷுவலில் மட்டும் மிரட்டாமல் அழுத்தமான திரைக்கதையுடன் இன்றைய உலகிற்கு தேவையான ஒரு அத்தியாவசியமான கருத்தை கூறிய விதம் என ஷங்கரை பாராட்ட வார்த்தைகளே இல்லை.

ரேட்டிங்: 4/5

Leave a Reply