1-9 வரை ஆல்பாஸ்: +2 எழுத முடியாத மாணவர்களுக்கு மறுதேர்வு: முதல்வர் ஈபிஎஸ் அதிரடி

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் கடந்த சில நாட்களாக மூடப்பட்டு உள்ளது என்பதும் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வீடுகளில் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு முழு ஆண்டு தேர்வு நடைபெற வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரும் நிலமையை அனுசரித்து ஊரடங்கு உத்தரவு நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இதனையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கை முன்னிட்டும், மாணவர்கள் நலன் கருதியும், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப் பள்ளிக்கல்வித்துறைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்

அதுமட்டுமின்றி நேற்று ஒரு சில மாணவர்கள் கொரோனா அச்சம் காரணமாகவும், சரியான பேருந்து வசதி இல்லாத காரணத்தாலும் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது. இந்த செய்திகளை அடுத்து மார்ச் 24 ஆம் தேதி அன்று பிளஸ் டூ தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மட்டும் வேறொரு நாளில் தனியாக தேர்வு நடத்தப்படும் என்றும், இந்த தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்

தேர்வு எழுதாமல் பாஸ் மற்றும் மறுதேர்வுக்கு அனுமதி போன்ற முக்கிய அறிவிப்புகள் மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply