shadow

1987 மனைக்கு 2007-ன் வழிகாட்டி மதிப்பு பொருந்துமா?

அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்துவதற்காகப் புதிய விதிமுறைகளை உள்ளடக்கிய அரசாணையை தமிழக அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை இந்த மாதம் 4-ம் தேதி வெளியிட்டது. இந்தப் புதிய விதிமுறையில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகச் சட்ட வல்லுநர்கள் சொல்கிறார்கள். புதிய விதிமுறையில் உள்ள சிக்கல்கள் என்ன?

விவசாய நிலங்களை மனைகளாக மாற்றுவதற்கு எதிராகவும் அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளைப் பதிவுசெய்யத் தடை கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2016 செப்டம்பர் 9-ம் தேதி இதுபோன்ற மனைகளைப் பத்திரப்பதிவு செய்யத் தடை விதித்தது. இந்த வழக்கில் இன்னமும் இறுதித் தீர்ப்பு வரவில்லை. ஆனால், நீதிமன்ற வழிகாட்டுதல்படி, வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய விதிமுறைகள் அடங்கிய அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

புதிய விதிமுறைகள்படி அங்கீகாரம் இல்லாத மனைகளை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும். ஒரு வேளை தவறினால் குறிப்பிட்ட மனைக்கு மின்சாரம், தண்ணீர் இணைப்பு, கழிவுநீர் இணைப்பு வழங்கப்படமாட்டாது என்றும் அத்தகைய அங்கீகாரம் இல்லாத மனைகள் பதிவுசெய்யப்பட மாட்டாது என்பது பொதுமக்களால் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மேலும் அங்கீகாரம் இல்லாத மனைப் பிரிவுகளில் வீடு கட்டுவதற்குச் சம்பந்தப்பட்ட துறை அனுமதியும் அளிக்காது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளன.

புதிய விதிமுறையில், மனைப்பிரிவை ஒழுங்குமுறைப்படுத்த, திறந்தவெளிப் பகுதி ஒதுக்கீட்டுக் கட்டணமாக (ஓ.எஸ்.ஆர்.) ஒட்டுமொத்த லே-அவுட்டின் வழிகாட்டி மதிப்பில் 10 சதவீதத்தை வசூலிக்க வேண்டும். மனையானது 2012 மார்ச் 31 வரையிலான காலத்தில் பதிவுசெய்யப்பட்ட இடமாக இருந்தால், பதிவுத்துறை ஆகஸ்ட் 1, 2007-ல் வெளியிட்ட வழிகாட்டி மதிப்புப்படி கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். இதுவே, 2012 ஏப்ரல் 1-க்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட நிலமாக இருந்தால், தற்போது நடைமுறையில் உள்ள வழிகாட்டி மதிப்புப்படி அபராதம் நிர்ணயிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் புதிய விதிமுறையைக் குறை கூறுகிறார் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஷியாம் சுந்தர்.

“புதிய விதிமுறைப்படி அங்கீகாரம் இல்லாத மனையைப் பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியிருந்தாலும் தற்போது ஒழுங்குமுறைப்படுத்த வேண்டியிருக்கும். ஆனால், 1987-ல் வாங்கிய அங்கீகாரம் இல்லாத மனைக்கு 2007-ம் ஆண்டு பதிவுத் துறை வெளியிட்ட வழிகாட்டி மதிப்பின்படி திறந்தவெளி ஒதுக்கீட்டுக்கான கட்டணம் வசூலிப்பது எப்படிச் சரியாகும்? பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட அங்கீகாரமில்லாத மனையில் கட்டப்பட்ட வீட்டுக்கு வரி செலுத்தி, மின் இணைப்பை ஒருவர் பெற்றிருந்தாலும் புதிய விதிப்படி, அது அங்கீகாரமில்லாத மனைப் பிரிவாகவே கருதப்பட வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியென்றால், அந்த வீட்டுக்கான மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, கழிவுநீர் வசதிகள் துண்டிக்கப்படுமா?” என்று கேள்வி எழுப்புகிறார் ஷியாம் சுந்தர்.

தமிழகத்தில் பெரும்பாலான விளை நிலங்கள் பஞ்சாயத்து அங்கீகாரம் பெற்ற மனை என்று சொல்லியே விற்கப்பட்டன. மனைகளுக்கு அங்கீகாரம் வழங்கப் பஞ்சாயத்துகளுக்கு அனுமதி இல்லை என்பது தெரிந்தும் இப்படி மனைகள் விற்கப்பட்டன. ஆனால், பஞ்சாயத்து அங்கீகாரம் என்பதை நம்பிப் பலரும் தவணை முறையிலோ அல்லது குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காகவோ மனைகளை வாங்கினார்கள். ஆனால், இதைப்பற்றிகூடத் தெளிவான அறிவிப்பு இல்லை என்கிறார் ஷியாம் சுந்தர்.

“மனைகளை அங்கீகாரமின்றி விற்ற ரியல் எஸ்டேட்காரர்களுக்கும் அதற்கு உடந்தையாக இருந்த பஞ்சாயத்துத் தலைவர் மீதும் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விதிமுறையில் இல்லை. மாறாக, பஞ்சாயத்து அங்கீகாரம் என்ற நம்பிக்கையில் தெரியாமல் வாங்கியவர் அபராதம் செலுத்த வேண்டும் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்.

அதேசமயம் அங்கீகாரம் வழங்கும்போது பஞ்சாயத்து வளர்ச்சிக் கட்டணம் என்ற பெயரில் குறிப்பிட்ட தொகையைப் பஞ்சாயத்துக்கு டெவலப்பர்கள் செலுத்தியிருப்பார்கள். பஞ்சாயத்துகளுக்கு இதுபோன்ற கட்டணம் செலுத்தியிருந்தால், அதைக் கழித்துக்கொண்டு அபராதம் வசூலித்து, மனைகளை ஒழுங்குமுறைப்படுத்ததலாமே” என்று கூறுகிறார் அவர்.

இன்னமும்கூட விதிமுறைகளில் சில தெளிவற்று இருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. வழக்கின் இறுதி விசாரணை ஜூன் மாதம் நடைபெற உள்ள நிலையில், இந்தக் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப் படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Leave a Reply