shadow

p76a

சித்தர்களும் முனிவர்களும் வழிபட்ட எத்தனையோ சிவாலயங்கள் இன்றளவும் இருக்கின்றன. அத்தகைய சித்தர்களுக்கு தரிசனம் தந்தும், அவர்களின் வாழ்க்கையில் பலப்பல அருளாடல்களை நிகழ்த்தியும் உள்ளார் எம்பெருமான். சித்தர்களின் பொருட்டு சிவபெருமான் தோன்றி அருளாடல்கள் புரிந்திருந்தாலும், அவர்களின் வேண்டுதலுக்கு இணங்கி, அவர்களுக்குத் தரிசனம் தந்த பூமியிலேயே கோயில்கொண்டு, நாளும் தம்மை தரிசித்து வணங்கும் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். அத்தகைய சிவாலயங்கள் சாந்நித்தியம் நிறைந்தவை.

அப்படி ஒரு சித்தர், சித்தமெல்லாம் சிவமயமாக  சிவபெருமான் மீது பேரன்பு கொண்டு வாழ்ந்து வந்தார். கடுவெளிச் சித்தர் என்பது அவர் பெயர்.

‘நந்தவனத்திலோர் ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி – மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி!’

இந்தப் பாடலைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. கடுவெளிச் சித்தரால் கி.பி.16-ம் நூற்றாண்டில் பாடப்பெற்ற பாடல் இது.

எத்தனையோ சிவாலயங்களில் வழிபட்டு, சிவபெருமான்மீது 35 பாடல்களைப் பாடி இருக்கிறார் கடுவெளிச் சித்தர். அப்படி அவர் ஒரு பாடலைப் பாடியதும், சிவலிங்கம் பிளவுபட்டு அதிலிருந்து சிவபெருமான் வெளிப்பட்டதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. ஆம்… தனது பக்தருக்காகச் சிவலிங்கத்தையே பிளந்துகொண்டு வந்து அருள்புரிந்தார் சிவபெருமான். அப்படிப்பட்ட சித்தர் தன் இறுதி நாட்களை ஸ்ரீவாலாம்பிகை உடனுறை பரமநாதரை வழிபட்டு அங்கேயே ஜீவசமாதி ஆனார் என்கிறது ஸ்தல வரலாறு.

கடுவெளிச் சித்தர் மந்திரப் பாடலைப் பாடியதும், லிங்கம் பிளந்து சிவபெருமான்  காட்சி தந்தது இந்தக் கடுவெளி ஊரில்தான். அதற்குச் சாட்சியாக, பிளந்த நிலையில் ஒரு சிவலிங்கம்

இந்தக் கோயிலில் இன்றளவும் இருக்கிறது.

கடுவெளிச் சித்தர் வாழ்ந்து வந்ததாலேயே இந்த ஊருக்குக் ‘கடுவெளி’ என்ற பெயர் வந்தது என்கிறது இன்னொரு தகவல். கடுவெளி என்றால், எல்லையில்லாமல் பரந்து விரிந்த பிரபஞ்சப் பெருவெளி என்பது பொருள். இந்தச் சித்தர் தனது பாடல்களில் கடுவெளியைப் பற்றி அதிகம் குறிப்பிட்டிருப்பதாலேயே இவருக்கு ‘கடுவெளிச் சித்தர்’ என்ற பெயர் வந்ததாம்.

”கடுவெளிச் சித்தர் வாழ்ந்து ஜீவசமாதியான இவ்வூரின் பெயர் ‘கடுவெளிச்சித்ரலாத்தூர்’. இது மருவி ‘கடுவெளிச்சித்தாலாத்தூர்’ என்றானது. சித்தர்கள் ஜீவசமாதி ஆன இடத்தில், சிவலிங்க பிரதிஷ்டை செய்து வணங்குவது மரபு. இங்கும் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறிய அளவில் பரமநாதர் ஆலயத்தையும் நிறுவி, காலங்காலமாக எங்கள் முன்னோர் வழிபட்டு வந்துள்ளனர். 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயிலுக்கு எப்போது கும்பாபிஷேகம் நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. தனித் தனியாக இருந்த ஆவுடையையும் பாணத்தையும் சேர்த்துப் பாலாலயம் செய்து வழிபட்டு வருகிறோம். வாலாம்பிகையின் சிலை முற்றிலும் சிதிலமடைந்த நிலையில் இருக்கிறது. சிவலிங்கத்தோடு  சண்டிகேஸ்வரர் மற்றும் கடுவெளிச் சித்தரின் திருவுருவங்களையும் தற்போது வழிபட்டு வருகிறோம். இந்தப் புனிதமான இடத்தில் சிவாலயமும் தியான மண்டபமும் கட்டும் முயற்சியில் முதற்கட்டப் பணிகளைத் துவக்கியுள்ளோம்” என்கிறார் கோயில் நிர்வாகக்குழு உறுப்பினரான மணிமாறன். இந்தக் கோயிலில் ஒவ்வொரு பௌர்ணமியன்றும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. வெட்டவெளியான பரமேஸ்வரனை மனத்தில் தியானித்து, மனத்தை அவனிடத்தில் ஒருமுகப்படுத்தி வழிபடவேண்டும் என்கிறது கடுவெளி வரலாறு.

கடுவெளிச் சித்தர் இங்கு ஒளி வடிவமாகப் பார்க்கப்படுகிறார். அதனால் ஒவ்வொரு பௌர்ணமியன்றும் இங்கு மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது. இந்த மோட்ச தீபமானது நமது முன்னோர்களின் ஆத்மா சாந்திஅடையவும், அவர்கள் எம்பெருமானின் பாதத்தைச் சரணடையவும் செய்யும் என்பது இந்த ஊர் மக்களின் ஆழ்ந்த நம்பிக்கை.

பதினெண்சித்தர்களில் ஒருவரான கடுவெளிச் சித்தர் வழிபட்ட இந்த ஆலயம் கும்பாபிஷேகம் கண்டு பல நூற்றாண்டுகள் ஆகின்றன. இதற்கு விரைவில் கும்பாபிஷேகம் நடத்த கடுவெளி மக்கள் எம்பெருமான் பரமநாதரிடம் பிரார்த்தித்து, தங்களால் இயன்ற பொருளுதவியை வழங்கி, கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். நாமும் கடுவெளிச் சித்தர் வழிபட்ட பரமநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற நம்மால் முடிந்த உதவிகளைச் செய்வோம்.

கடுவெளிக்கு மட்டுமல்ல பரமநாதர்… அவர் எந்நாட்டவர்க்கும் இறைவன் அல்லவா? அவரின் ஆலயம் விரைவில் கும்பாபிஷேகம் காண நம்மால் இயன்ற அளவுக்கு அள்ளி வழங்குவோம். அந்தத் திருப்பணியில் நம்மையும் ஈடுபடுத்திக் கொள்வோம். எம்பெருமான் நம்மையும் நம் சந்ததிகளையும் எல்லா நலனும் அளித்துக் காப்பார்

Leave a Reply