தமிழகம் முழுவதும் குட்கா, பான் மசாலா வேட்டை: 135 தனிப்படைகள் தீவிரம்

குட்கா, மாவா போன்ற தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் தமிழகத்தில் தடையின்றி விற்பனை செய்யப்படுவதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் புகைப்பட ஆதாரத்துடன் குற்றம் சாட்டினார். இந்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்ய சென்னையில் 2 கூடுதல் ஆணையர்கள் தலைமையில் 135-க்கும் மேற்பட்ட தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படைகள் சென்னையின் மூலை முடுக்கிலும் சென்று போதைப்பொருள் விற்று வருபவர்களை கைது செய்து வருகின்றனர்.

இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கூடுதல் காவல் ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் கூறியதாவது:

போதைப் பொருள் விற்பனையை முற்றிலும் கட்டுப்படுத்த காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 135 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களை 2 கூடுதல் காவல் ஆணையர்கள் மேற்பார்வை செய்வார்கள். 12 துணை ஆணையர்கள் தங்களுக்கு கீழ் உள்ள 48 உதவி ஆணையர்களிடம் மாவா விற்பனை, கைது தொடர்பான அறிக்கையை தினமும் கேட்டு, அதை காவல் ஆணையர் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோக மத்திய குற்றப்பிரிவு போலீஸாரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவார்கள். குட்கா, மாவா உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்தினாலோ, தொடர்ந்து விற்பனை செய்து வந்தாலோ அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று கூறினர்

மேலும் போதைப்பொருள் விற்பனை குறித்த தகவல் அறிந்தால் உடனடியாக பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறை 100-க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றும் அவ்வாறு தகவல் அளிப்பவர்களின் பெயர் மற்றும் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *