shadow

13 வயதில் மென்பொருள் நிறுவனத்தை தொடங்கிய சிறுவன்

துபாயில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆதித்யன் ராஜேஷ் 13 வயது சிறுவன் மென்பொருள் நிறுவனம் ஒன்றை துவங்கி சாதனை படைத்துள்ளார். டிரைநெட் சொல்யூஷன்ஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த மென்பொருள் நிறுவனத்தில் தற்சமயம் மூன்று பேர் பணியாற்றி வருகின்றனர்.

ஆதித்யன் ராஜேஷ் தனது ஐந்து வயதில் கம்ப்யூட்டர் பழகி, ஒன்பதாவது வயதில் மொபைல் செயலி ஒன்றை வெளியிட்ட இந்த சிறுவன் அதன் பின் நிறுவனங்களுக்கு லோகோ மற்றும் வலைத்தளங்களை உருவாக்கி கொடுத்துள்ளார்.

தனது நிறுவனத்தை சட்டப்பூர்வமாக பதிவு செய்ய ஆதித்யன் 18 வயது வரை காத்திருக்க வேண்டும். எனினும், ஏற்கனவே டிரைநெட் சொல்யூஷன்ஸ் நிறுவனம் மற்ற நிறுவனங்களை போன்று இயங்கி வருகிறது. இதுவரை 12 நிறுவனங்களுக்கு டிரைநெட் சொல்யூஷன்ஸ் சார்பில் வடிவமைப்பு மற்றும் குறியீடு பணிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

டிசம்பர் 7, 2017ம் ஆண்டில் டிரைநெட் சொல்யூஷன்ஸ் நிறுவனம் துவங்கப்பட்டது. தற்சமயம் ஏழாம் வகுப்பு பயிலும் ஆதித்யனுடன் டிரைநெட் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தில் 11 மற்றும் 12 வகுப்பு பயிலும் மாணவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தற்சமயம் ஆதித்யன் தனது பள்ளி ஆசிரியர்களுக்காக பிரத்யேக செயலி ஒன்றை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளான். இந்த செயலி ஆசிரியர்களின் பணியை பாதியாக குறைக்கும் அம்சங்களை கொண்டிருக்கும் என ஆதித்யன் தெரிவித்திருக்கிறான். மென்பொருள் நிறுவனம் தவிர யூடியூப் சேனல் மூலம் தனக்கு தெரிந்த தகவல்களை ஆதித்யன் வீடியோ மூலம் பகிர்ந்து கொண்டு வருகிறார்.

Leave a Reply