shadow

1,173 மதிப்பெண்; கட் ஆஃப் 198.5 – மாணவியின் மருத்துவக் கனவைப் பறித்த நீட்

சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த மாணவி ஒருவர் பிளஸ் 2 தேர்விலும் கட் ஆஃப்பிலும் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தும் நீட் தேர்வால் அவருடைய மருத்துவக் கனவு கலைந்துவிட்டது. ‘ என் மகள் பெற்ற மதிப்பெண்ணால் சிறந்த கல்லூரிக்குச் செல்ல முடியும். நீட் தேர்வால் பணம் கட்டிப் படிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்’ என்கின்றனர் மாணவியின் பெற்றோர்.

மேட்டூரைச் சேர்ந்தவர் சரவணக்குமார். தனியார் நிறுவனத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகள் குணவர்ஷினி பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1200 மதிப்பெண்ணுக்கு 1173 மதிப்பெண் வாங்கினார். மருத்துவப் படிப்புக்கான கட் ஆஃப் தேர்வில் 200-க்கு 198.5 மதிப்பெண்ணைப் பெற்றார். ஆனால், நீட் தேர்வில் 720 மதிப்பெண்ணுக்கு 236 மதிப்பெண் பெற்றதால் மருத்துவ படிப்புக்குள் நுழைய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

குணவர்ஷினியிடம் பேசினோம். “சிறுவயது முதலே டாக்டர் ஆகனும்கிறதுதான் என்னுடைய லட்சியம். அதுக்காகவே கடுமையாகப் படித்து 1173 மதிப்பெண் வாங்கினேன். பிளஸ் 2 மார்க்கைப் பார்த்ததும், அப்பா, அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம். ‘தமிழ்நாட்டில் இந்த ஆண்டு நீட் தேர்வு வராது’ என மாநில அரசு சொல்லி வந்தது. வேறு சிலரோ, ‘நீட் தேர்வு கட்டாயம்’ என்றார்கள். இதனால் குழப்பம்தான் ஏற்பட்டது. கடைசியாக, நீட் தேர்வு கட்டாயம்னு உச்ச நீதிமன்றம் சொன்னது. இதனால் நீட் தேர்வுக்கு சரியா படிக்க முடியவில்லை. என்னைப் போல தேர்வு எழுதின பலரும் ரொம்ப கஷ்டப்பட்டாங்க. முன்னாடியே அறிவித்து தேர்வு நடந்திருந்தால், நல்ல மதிப்பெண் வாங்கியிருப்போம். இந்த வருஷம் எந்த அடிப்படையில் மெடிக்கல் சீட் நிரப்புவார்கள் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்” என்றார் வேதனையோடு.

மாணவியின் தந்தை சரவணகுமார் பேசும்போது, ”எந்தத் தேர்வாக இருந்தாலும் முன்கூட்டியே அறிவித்த பிறகுதான் தேர்வு நடத்துவார்கள். ‘இந்த ஆண்டு நீட் வராது’ என அரசு உறுதியாகக் கூறியதால்தான், பயிற்சிக்குப் போகவில்லை. எனவேதான், மாநில அரசின் தேர்வில் மிக அதிகமான மதிப்பெண் பெற்ற குழந்தைகள்கூட நீட் தேர்வில் மிகக் குறைவான மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள். ஆனால், சி.பி.எஸ்.சி பாடத்தில் 50 சதவிகித மதிப்பெண் பெற்றவர்கள்கூட நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கியிருக்கிறார்கள். மத்திய அரசின் நீட் தேர்வால் கிராமப்புற ஏழை குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். எங்களால் பணம் கட்டிப் படிக்க வைக்க முடியாது. மத்திய அரசு, மாநில அரசுக்கு அழுத்தம் கொடுத்து நீட் தேர்வுக்குத் தடை வாங்க வேண்டும்” என்றார் வேதனையோடு.

 

Leave a Reply