shadow

images

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

 தமிழகம், புதுவையில் 11 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதிய 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் மே 21-ஆம் தேதி வெளியிடப்பட்டன. தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் மே 29-ஆம் தேதி முதல் வழங்கப்பட்டன.

 இதையடுத்து, இந்த மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஆகஸ்ட் 21 வரை செல்லத்தக்கது. எனினும், மாணவர் நலன் கருதி மூல மதிப்பெண் சான்றிதழ்களை புதன்கிழமை (ஆகஸ்ட் 5) காலை 10 மணி முதல் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 மாணவர்கள் தங்களது பள்ளிகளின் தலைமையாசிரியர்களிடம் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தனித் தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வு எழுதிய மையங்களிலேயே பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply