shadow

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர், மருத்துவ உதவியாளர் பணிக்கு அழைப்பு

ambulanceதருமபுரி: பெரியார் மன்றத்தில் வரும் அக்டோபர் 21ஆம் தேதி 108 ஆம்புலன்ஸில் பணியாற்ற மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கு, பி.எஸ்ஸி நர்சிங், விலங்கியல், தாவரவியல், உயிர் வேதியியல், உயிரியல் உள்ளிட்ட அறிவியல் படிப்புகள் அல்லது செவிலியர் படிப்புகள், மருந்தாளுநர், பரிசோதனை நுட்புநர் உள்ளிட்ட படிப்புகளை முடித்த ஆண், பெண் இரு பாலரும் இந்த முகாமில் பங்கேற்கலாம்.
எழுத்துத் தேர்வு, மருத்துவ நேர்முகம், மனிதவளத் துறை நேர்முகம் ஆகியவற்றின்படி தேர்வு செய்யப்படுவோருக்கு 50 நாள்கள் முழுமையான பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக் காலத்தில் தங்கும் வசதி மற்றும் தினசரி உணவுப் படியாக ரூ. 100 வழங்கப்படும்.
ஓட்டுநர் பணியிடத்துக்கு குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பில் தவறியவர்கள், தேர்ச்சி பெற்றவர்கள் 23 முதல் 35 வயதுக்கு மிகாத ஆண்கள் தேர்வு செய்யப்படுவர். 162.5 செ.மீ. உயரம், இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம், பேட்ஜ் பெற்றிருக்க வேண்டும்.
இந்தத் தகுதிகளைக் கொண்டோர் தங்களது அசல் சான்றிதழ்களுடன் நேரில் வர வேண்டும். மாத ஊதியம் ரூ. 11,100. தேர்வு செய்யப்படுவோருக்கு அன்றைக்கே பணிநியமன ஆணை வழங்கப்படும்.
முகாமில் பங்கேற்க வருவதற்கான படிகள் ஏதும் வழங்கப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு 73974 44158, 73977 24804 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply