shadow

vallalar

வானி கூடுதுறை! பவானி, காவிரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி ஆகிய மூன்றும் சங்கமிக்கும் தென்திரிவேணி சங்கமம், பித்ரு தோஷம் நீக்கும் தீர்த்த நீராடல், ஸ்ரீசங்கமேஸ்வரர் – ஸ்ரீவேதநாயகி மற்றும் ஸ்ரீஆதிகேசவபெருமாள்- ஸ்ரீசௌந்திரநாயகி தாயார் தரிசனம்… ஆகிய சிறப்புகள் மிகுந்த இந்தத் தலத்துக்குச் செல்லும் அன்பர்கள், இன்னொரு விசேஷத்தையும் கவனித்திருப் பார்கள்.

 

ஆமாம்! கடந்த சில வருடங்களாக இந்தக் கோயிலில் அன்னதானம் செய்து வருகிறார் அர்த்தநாரிசாமி எனும் அடியவர். தினப்படி வழிபாடாகவும் தனது கடமையாகவுமே இந்த கைங்கரியத்தைச் செய்து வரும் இவருக்கு 103 வயது. 70 வயதில் தொடங்கிய இவரின் சேவை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

 

ஆரம்பத்தில் நெசவுத் தொழிலில் கிடைத்த வருமானத்தில் அன்னதானம் செய்துவந்தவர், இன்றைக்கும் அன்பர்கள் பலரும் தரும் நிதியுதவியுடன் இந்தத் தள்ளாத வயதிலும் இந்தப் பணியை விடாமல் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

 

”எனது பூர்வீகம் ராசிபுரம் அருகே உள்ள அத்தனூர். 45 வருடங்களுக்கு முன் பவானிக்குக் குடிபெயர்ந்தோம். மனைவி வள்ளியம்மாள். எங்களுக்கு நான்கு பிள்ளைகள். எனக்கு வள்ளலார் மீது அதீத ஈர்ப்பும் பற்றுதலும் உண்டு. பசிப்பிணி போக்கிய மகானாயிற்றே! அவரை முன்னுதாரணமாகக் கொண்டு தான் அன்னதானத்தை ஆரம்பித்தேன்” என்கிறார்.

 

எந்தக் காரணத்துக்காகவும் ஒருநாள்கூட அன்னதானம் தடைப்பட்டது கிடையாதாம். மனைவி, மகன் என்று நெருங்கிய உறவுகள் இறந்த தருணத்திலும், தமது உறவினர்களின் உதவியுடன் தனது அன்னதான சேவை தடைப்படாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

 

”தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்துவிடுவேன். குளித்து முடித்து, கோயிலுக்கு நடந்தே செல்வேன். கோயிலில், ஏற்கெனவே தயாராக நான் வாங்கி வைத்திருக்கும் அரிசியை, ஸ்ரீசங்கமேஸ்வரர் சந்நிதியில் வைத்து பூஜை செய்வோம். அதன் பிறகு, அந்த அரிசியை எடுத்துவந்து கோயிலுக்கு அருகில் ஓரிடத்தில், உலையிலிட்டு நானே கஞ்சி தயாரிப்பேன். தினமும் நூறு, நூற்றைம்பது பேர் அன்னக்கஞ்சியை ஸ்வாமி பிரசாதமாகவே வாங்கிச் செல்வார்கள்” என்கிறார்.

 

இவர் அன்னக்கஞ்சி வழங்க ஆரம்பித்த நாளை, வருடம்தோறும் ஆண்டு விழாவாகவே கொண்டாடுகிறார்கள் இப்பகுதி மக்கள். அன்று மட்டும் சுமார் 500 பேருக்கு அன்னக் கஞ்சி வழங்கப்படுகிறது.

 

”வள்ளலார் பக்தர் என்கிறீர்களே… வடலூருக்குச் சென்றதுண்டா?” என்று கேட்டதும், பரவசமாகிறார் அர்த்தநாரிசாமி.

 

”வருஷம் தவறாமல் வடலூர் சுத்த சன்மார்க்க சங்கத்துக்குச் செல்வேன். கடந்த ஐந்து வருடங்களாகத்தான் முதுமையின் காரணமாக அங்கு போக முடியவில்லை. அதனால் என்ன… இந்தச் சேவையின் மூலம் எப்போதும் அவர் என்னோடு இருப்பதாகவே உணர்கிறேன்” என்கிறார் கண்களில் நீர்மல்க.

 

‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்பது வள்ளலார் வாக்கு. அவர் வழியில், பசிப்பிணி போக்கும் அரும் பணியை யக்ஞமாகவே செய்துவரும் அர்த்தநாரிசாமியும் வாழும் வள்ளலாராகத் திகழ்கிறார். தொடரட்டும் அவரது சேவை!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *