shadow

ஸ்மார்ட்போனில் தானாக கான்டாக்ட்ஸ் பகுதியில் பதிவான எண்: அதிர்ச்சியில் பொதுமக்கள்

நேற்று இந்தியா முழுவதும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரது ஸ்மார்ட்போனில் ஒரு எண் தானாகவே கான்டாக்ட்ஸ் பகுதியில் பதிவானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த எண், ஆதார் ஆணையத்துடன் தொடர்பு கொள்வதற்கான எண்ணாக இருந்ததால் அவர்களிடையே மேலும் குழப்பம் அதிகரித்தது.

இதனையடுத்து பொதுமக்கள் தங்களுடைய ஆதார் பதிவு தகவல் அனைத்தும் திருடப்பட்டு இருக்குமோ என்ற சந்தேகம் ஸ்மார்ட்போன் வைத்திருப்போருக்கு ஏற்பட்டது. ஆதார் ஆணையத்தை ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் தொடர்பு கொண்டு தங்களது ஸ்மார்ட் போனில் தானாக ஆதார் ஆணைய இலவச உதவி அழைப்பு எண் பதிவானது பற்றி கேள்விக்கணைகளால் துளைத்து எடுத்தனர்.

இது குறித்து ஆதார் ஆணையம் கூறியிருப்பதாவது:

ஆதார் ஆணையத்தின் பயன்பாட்டில் இல்லாத பழைய உதவி எண் ஸ்மார்ட்போனில் தானாக பதிவானதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஆதார் ஆணையம் சார்பாக எந்தவொரு செல்போன் நிறுவனத்திடமோ அல்லது செல்போன் சேவை வழங்கும் நிறுவனத்திடமோ இதுபோன்ற வசதியை இணைக்குமாறு அறிவுறுத்தப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

ஸ்மார்ட்போன்களில் பதிவான எண் என குறிப்பிடப்படும் 1800-300-1947 என்பது ஆதார் ஆணையத்தின் சரியான இலவச அழைப்பு எண் அல்ல. மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் வேண்டாத இந்த வீண் வேலையை சிலர் செய்துள்ளனர்.

மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உபயோகத்தில் இருக்கும் ஆதார் ஆணையத்தின் சரியான இலவச உதவி அழைப்பு எண் 1947 ஆகும்.

இதேபோல் பொதுச் சேவை எண்கள் பட்டியலிலும் 1800-300-1974 அல்லது 1947 என்ற எண்களை இணைக்குமாறு எந்தவொரு தொலைத் தொடர்பு நிறுவனத்திடமோ அல்லது செல்போன் தயாரிப்பு நிறுவனத்திடமோ ஆதார் ஆணையம் சார்பில் வலியுறுத்தப்படவில்லை.

Leave a Reply