shadow

ஷார்ஜாவில் சர்வதேச புத்தகக் கண்காட்சி: மு.க. ஸ்டாலின் பங்கேற்பு

ஷார்ஜாவில் 36-வது சர்வதேச புத்தகக் கண்காட்சியை ஷார்ஜாவின் ஆட்சியாளர் ஷேக் சுல்தான் பின் முகம்மது அல் காஸிமி மற்றும் இந்த வருடத்திற்கான கலாச்சார ஆளுமையாக ஷார்ஜா அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட எகிப்தின் முன்னாள் அமைச்சர் முகம்மது சபீர் அரப் நவம்பர் மாதம் முதல் தேதியில் தொடங்கி வைத்தனர்.

இப்புத்தகக் கண்காட்சி நவம்பர் 11 ஆம் தேதி வரை ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் நடைபெற உள்ளது. கண்காட்சியின் நேரம் தினமும் காலை 10 முதல் இரவு 10 வரை. இதில் 1,600 நேரடி பொழுதுபோக்கு மற்றும் அறிவார்ந்த நிகழ்ச்சிகளை குழந்தைகளையும் பெரியவர்களையும் கவரும் வண்ணம் அமைத்துள்ளனர். இப்புத்தகக் கண்காட்சிக்கு 60 நாடுகளிலிருந்தது 1,650 பதிப்பகங்கள் பங்கேற்கின்றன.15 லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

உலகிலேயே மூன்றாவது பெரிய புத்தகக் கண்காட்சியாக ஷார்ஜா புத்தகக் கண்காட்சி திகழ்கிறது. இது வெறும் புத்தகக் கண்காட்சியாக மட்டுமில்லாமல் இதில் புத்தக வெளியீடுகள், கலாச்சார நிகழ்ச்சிகள், எழுத்து, கலை மற்றும் எழுத்துப்பட்டறைகள், பிரபலங்களுடன் உரையாடல்கள், கருத்தருங்கங்கள் என்று பலவிதமான நிகழ்வுகளையும் விழா அமைப்பினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

14,625 சதுர மீட்டரில் (கிட்டத்தட்ட ஒன்றரை லட்ச சதுர அடி) அமைந்துள்ள இப்புத்தகக் கண்காட்சிக்கு அரசியல் தலைவர்கள், அனைத்து மொழிகளையும் சார்ந்த எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், படைப்பாளிகள் என்று 48 நாடுகளிலிருந்து 393 சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருக்கின்றனர்.

இதில் தமிழகத்திலிருந்து ஷார்ஜா அரசின் சிறப்பு விருந்தினராக தமிழக சட்ட மன்ற எதிர்க்கட்சி தலைவர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். ‘ஸ்டாலினுடன் ஒரு மாலை’ என்ற நிகழ்வின் சிறப்பு விருந்தினராக அவரை அழைத்துள்ளனர். இவ்வழைப்பினை ஏற்று அவர் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணியளவில் ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி வளாகத்தில் சிறப்புரையாற்றுகின்றார். இவ்விழாவிற்கு அனைத்து தமிழர்களும் ஒன்று திரண்டு சிறப்பிக்க வேண்டுமென்ற முனைப்போடு அமீரகத் தமிழர்களை ஒன்றுதிரட்டி ஒருங்கிணைக்கிறார் அரிகேசவநல்லூர் எஸ்.எஸ்.மீரான்.

வெள்ளிக்கிழமை நவம்பர் 3 ஆம் தேதி அதே தினத்தில் அதே வளாகத்தில் ஆனால் வேறு அரங்கில் மாலை 8.30 மணிக்கு எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் உரையாற்றுகிறார். எனவே, வெள்ளிக்கிழமை மாலைப்பொழுது தமிழர்களின் செவிகளுக்கு விருந்தென்பதில் ஐயமில்லை.

Leave a Reply