shadow

வேர்களை வலுப்படுத்த வேண்டும்: சச்சின் பைலட்

கல்வியின் வேர்களான தொடக்கக் கல்வியை வலுப்படுத்த வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சச்சின் பைலட் கூறினார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ’திங்க் எடு – 2017′ கான்கிளேவ் மாநாட்டில் அவர் பேசியது:
உயர்கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதும் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டியதும் அவசியமான ஒன்றுதான். ஆனால் ஒரு மரத்தின் வேர்களை வலுப்படுத்தாமல், கிளைகளையும் பூக்களையும் பழங்களையும் மட்டும் கவனம் செலுத்தினால் சிறந்த விளைச்சலைப் பெற முடியாது.
எனவே, கல்விக்கு ஆதாரமான தொடக்கக் கல்வியை வலுப்படுத்துவதற்கு அரசு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பஞ்சாயத்துக்குட்பட்ட ஓர் அரசுப் பள்ளியின் தரத்தையாவது முதலில் உயர்த்த வேண்டும்.
நமது நாட்டில் 5 வயதுக்குட்பட்ட 43 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் காணப்படுகின்றனர். இதுபோன்ற குழந்தைகளால் எவ்வாறு திறம்பட படிக்க முடியும். இதுபோன்ற அடிப்படை விஷயங்களில் முதலில் கவனம் செலுத்த வேண்டும்.
கல்வி பொதுப்பட்டியலில் உள்ளது. அதனால் கல்வி நிறுவனங்களை நடத்துவோர் லாபத்தை எதிர்பார்க்கக் கூடாது என்று கூறி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம்.
பள்ளிகளை நடத்துவதற்கான வளங்களைப் பெற்றிருப்பவர்கள் தரமான பள்ளிகளைத் தொடங்க வேண்டும். கல்வியை லாபமானது, லாபம் இல்லாதது என்ற குறுகிய வட்டத்துக்குள் சுருக்க வேண்டாம் என்றார் அவர்.

Leave a Reply