shadow

வெயிலோடு விளையாடு! – அப்பார்ட்மென்ட் சிண்ரோம் அலெர்ட்!

வசதியான தொழிலதிபர் அவர்… சில வருடங்களுக்கு முன்பு, நகரத்தின் மையப் பகுதியில், அதிக விலை கொடுத்து வசதியான அப்பார்ட்மென்டில் வீடு வாங்கியிருந்தார். அவருக்கு, இரண்டு வருடங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. முதல் ஆறு மாதங்களுக்கு குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே புகட்டி வளர்த்தனர். திரும்பிப் படுப்பது, தவழ்வது என்று குழந்தை, வளர்ச்சியின் ஒவ்வொரு மைல்கல்லையும் நல்லபடியாக கடந்துவந்தான். ஒன்பதாவது மாதத்தில் சுவரைப் பற்றி எழத் தொடங்கியபோது, கால்கள் உறுதி இல்லாமல் நெகிழ்வுடன் வளையத் தொடங்கின. பதற்றம் அடைந்த பெற்றோர், குழந்தையை டாக்டரிடம் தூக்கி வந்தனர்.

“குழந்தையை வீட்டில் எப்படிப் பராமரிக்கிறீர்கள்?” என்று கேட்டபோது, “வெளியே எப்போதாவது தூக்கிட்டுப்போவோம்… மத்தபடி வீட்ல எப்போதும் ஏ.சி அறையிலதான் இருப்பான். இன்ஃபெக்‌ஷன் ஆகிடாம ரொம்ப ஜாக்கிரதையா பார்த்துக்கிறோம்” என்றார். ஏ.சி அறையிலேயே வைத்து இருந்ததால் குழந்தைக்கு வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டு எலும்புகள் வலுவில்லாமல் இருப்பது தெரிய வந்தது. பிறகு எலும்புகள் உறுதிபெற குழந்தைக்கு சிகிச்சை கொடுக்க வேண்டியிருந்தது.

பெருநகரங்களில் மட்டுமே அப்பார்ட்மென்ட் இருந்த நிலை மாறி, சிறிய நகரங்களிலும் கூட அப்பார்ட்மென்ட்கள் வர ஆரம்பித்துவிட்டன. நாகரிக, பரபரப்பு வாழ்க்கையில், பக்கத்து வீட்டில் இருப்பவர்களின் பெயர் அல்ல, முகம்கூட தெரியாத அளவுக்கு அப்பார்ட்மென்ட் கூண்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள் மனிதர்கள். அப்பார்ட்மென்ட் குழந்தைகளின் நிலைமை இன்னும் மோசம். அவர்களின் பொழுதுபோக்கு என்பது தொலைக்காட்சியும் கணினியுமே என்றாகிவிட்டது. வெயில் பார்க்காத மற்றும் சக குழந்தைகளுடன் பழக வாய்ப்பே இல்லாத நிலைமை, அவர்களின் உடல், மனநலத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

பள்ளிப் பேருந்துகளில்கூட ஏ.சி. பெரும்பாலான பள்ளிகளில் விளையாட்டு வகுப்புகளே கிடையாது. நிறையப் பள்ளிகளில் மைதானங்கள் இல்லை. அப்பார்ட்மென்ட்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு நண்பர்களே இல்லாத நிலை. இப்படி அனைத்துச் சூழல்களும் காலை முதல் இரவு வரையிலும் அவர்களை வெயில் படாமலேயே வைத்திருப்பதால், இன்று பல குழந்தைகளுக்கு வைட்டமின் டி குறைபாடு ஏற்படுகிறது. இதனால், ‘ரிக்கெட்ஸ்’ எனப்படும் பாதிப்பு ஏற்படுகிறது.

முன்பெல்லாம் சிறுவர்கள் தங்கள் தெருக்களில் உள்ள நண்பர்களுடன் வெளியில் உள்ள மைதானத்தில் விளையாடுவார்கள். இப்போது அப்படி எந்த மைதானமும் இல்லை என்பதுடன், இருக்கும் இடங்களுக்கும் செல்ல விடாமல் பெற்றோர் தடுத்து வைக்கின்றனர். இதனால் இன்றைய சிறுவர்களுக்கு இயல்பாகவே வைட்டமின் டி குறைபாடு அதிகமாக இருக்கிறது. அதனால் இப்போது பெரும்பாலான மருத்துவர்கள், தங்களிடம் வரக்கூடிய குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு நோய்க்கான மருந்துடன் வைட்டமின் டி மாத்திரையையும் சேர்த்தே கொடுத்து வருகிறார்கள்.

நமது உடலில் உள்ள எலும்புகளுக்கும் புதிய எலும்புகள் உருவாவதற்கும் கால்சியம் மற்றும் பாஸ்பேட் அவசியம். கால்சியம் மூலமாகவே எலும்புகள் மற்றும் பற்கள் உறுதித் தன்மையை அடைகின்றன. இது தவிர நமது உடலின் மிக முக்கிய பாகங்களான இதயம், மூளை உள்ளிட்ட பல உறுப்புகள் சிறப்பாகச் செயல்பட கால்சியம் மிகவும் அவசியம். நமது ரத்தத்தில் உள்ள கால்சியத்தை, உடல் செயல்படக் காரணமாக இருக்கும் இந்த முக்கியமான உறுப்புகள் எடுத்துப் பயன்படுத்துகின்றன. உணவில் இருந்து கால்சியத்தை கிரகிக்க வைட்டமின் டி அவசியம். தாய்ப்பாலில் மிகமிகக் குறைந்த அளவிலேயே வைட்டமின் டி இருக்கிறது. வெயிலில் செல்லும்போது, நம்முடைய சருமமே வைட்டமின் டியை உற்பத்தி செய்துகொள்ளும்.

குழந்தைகள், சிறுவர்களை மட்டும் அல்லாமல் பெண்கள், முதியவர்களையும் அதிகமாக பாதிக்கும் பிரச்னை, ஆஸ்டியோபொரோசிஸ். அத்துடன், ஐ.டி நிறுவனங்களில் வேலை செய்பவர்களும் காலை முதல் இரவு வரையிலும் அறைக்கு உள்ளேயே முடங்கிக் கிடப்பதால் இந்த நோயின் பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகம். ஆனாலும், தொடர் சிகிச்சை மூலமாக இந்த நோயை எளிதில் குணப்படுத்தி விடலாம்.

இந்த நோயைத் தவிர்க்க, காய்கறிகள், கீரை, பால் போன்றவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளை வெளியில் விளையாட விடுவது அவசியம்.

அப்பார்ட்மென்ட் சிண்ட்ரோம், குழந்தைகளுக்கு அதிகமான மனப் பிரச்னையையும் உருவாக்கும் என எச்சரிக்கிறார், மனநல மருத்துவர் சிநேகா பன்னீர்செல்வன். “நமது சுற்றுச்சூழலுக்கும் மன நலனுக்கும் நிறைய தொடர்பு உள்ளது. நல்ல உடற்பயிற்சி, நண்பர்களுடன் அரட்டை அடித்தல், சிறப்பான பொழுதுபோக்கு போன்றவை குழந்தைகள், சிறுவர்களுக்கு அவசியம். ஆனால், இன்றைய அப்பார்ட்மென்ட் கலாச்சாரத்தில் அதற்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.

நமது உடலில் பல ஹார்மோன்கள் சுரக்கின்றன. அவை ஒவ்வொன்றும் ஒரு செயலைச் செய்கின்றன. ஹார்மோன்களின் சுரப்பு குறைந்தால் அல்லது அதிகமானால் அது பல பிரச்னைகளை ஏற்படுத்தும். குழந்தைகள், சிறுவர்களை அதிகம் வெளிச்சம் இல்லாத அப்பார்ட்மென்ட்களில் அடைபட்டு கிடக்கச் செய்வதால், அவர்களுக்கு மெலட்டோனின் என்ற ஹார்மோன் சுரப்பில் மாறுபாடு ஏற்படும். அப்பார்ட்மென்ட் குழந்தைகளுக்கு இந்த ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது.

அதிக ஹார்மோன் சுரப்பு காரணமாக, குழந்தைகளுக்கு தூக்கம் அதிகம் வரும். யாரையும் நேருக்கு நேர் சந்திக்க தயக்கமும் பயமும் ஏற்படும். யாரிடமும் பேச மாட்டார்கள். பசிக்காது. ஒருவித குழப்பத்துடனேயே இருப்பார்கள். இது தொடர்ந்தால், மனநோயாக மாறிவிடும் ஆபத்து இருக்கிறது. பொதுவாக இப்பிரச்னையை சந்திக்கிற குழந்தைகள் படிப்பிலும் ஆர்வம் இல்லாமல் இருப்பார்கள். கவனமின்மை ஏற்பட்டு திணறுவார்கள். நினைவாற்றல் குறையும். வீட்டில் சின்ன பிரச்னை என்றாலும் அதிகமாகக் கோபப்படுவார்கள். காரணமே இல்லாமல் தனியாக அறைக்குள் சென்று முடங்குவார்கள்.

குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைப் போலவே மன வளர்ச்சியும் மிகவும் அவசியம். குழந்தைகளின் மன ஆரோக்கியம் மேம்பட, காலையில் பெற்றோர் தங்களுடன் குழந்தைகளையும் வாக்கிங் கூட்டிச் செல்லலாம். அதனால் அவர்களின் மன அழுத்தம் குறையும். நிறைய மனிதர்களைப் பார்க்கும்போது அவர்களிடம் இருந்து நிறைய விஷயங்களை குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள். அதனால், வெளியிடங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும்.

பொதுவாக குழந்தைகள் ஒரு மணிநேரத்துக்கு மேல் டி.வி பார்ப்பதை அனுமதிக்கக் கூடாது. அதே போல கம்யூட்டர் கேம்ஸ் விளையாடவும் அதிக நேரம் அனுமதிக்கக் கூடாது.

தொடர்ந்து வீட்டுக்குள்ளே அடைபட்டு இருக்கும் குழந்தைகளுக்கு சக மனிதர்களுடன் பழகும் வாய்ப்பு குறைவாகவே கிடைக்கிறது. அதனால் குடும்ப நிகழ்ச்சிகள், நண்பர்களின் வீட்டு விசேஷங்களுக்கு குழந்தைகளையும் கூட்டிச் சென்று பிறருடன் பழக வைக்க வேண்டும்.

மொத்தத்தில், வீட்டுக்குள் வைத்து குழந்தைகளை வளர்ப்பது அவர்களின் உடல்நலம், மனநலம் இரண்டுக்குமே ஆரோக்கியமானது அல்ல என்பதை அப்பார்ட்மென்ட் பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.”

Leave a Reply