shadow

வீட்டு பத்திரங்களை பாதுகாப்புடன் வைத்து கொள்வது எப்படி?

வீட்டு பத்திரங்களை பாதுகாப்புடன் வைத்து கொள்வது எப்படி?மொத்தம் எவ்வளவு ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வங்கி லாக்கரில் வைக்கலாம்? அப்படியெல்லாம் எந்த வரைமுறையும் இல்லை. பலரும் தங்கம் மற்றும் வைர நகைகளைப் பாதுகாப்பாக வைக்கத்தான் வங்கி லாக்கர்களைப் பயன்படுத்துகிறார்கள். வேறு பல முக்கிய விஷயங்களுக்கும் வங்கி லாக்கரைப் பயன்படுத்துவது குறித்து இங்கு யோசிக்கலாம்.

உங்கள் உயிலை வங்கி லாக்கரில் வைப்பதில் சில வசதிகள் உண்டு. நீங்கள் உயிரோடு இருக்கும்வரை வேறு யாரும் அதைப் பார்க்கக் கூடாது என்றால் அதற்கு வங்கி லாக்கர் ஏற்றதுதான். ஆனால், நீங்கள் இறந்து விட்டாலோ, செயலிழந்துவிட்டாலோ இது பிரச்சினையைத் தோற்றுவிக்கலாம். சில நேரம் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுத்தான் உங்கள் லாக்கரை உடைக்க முடியும். அப்போது தாமதம் ஏற்படலாம்.

முக்கியமாக நீங்கள் இறந்து சில நாட்களிலேயே ஏதாவது செய்யப்பட வேண்டுமென்று நீங்கள் எண்ணியிருந்தால் அவற்றை நிறைவேற்றுவதில் காலதாமதமோ பிரச்சினையோ உண்டாகலாம். இவற்றை வீட்டிலேயே பாதுகாப்பான ஒரு லாக்கரில் பூட்டி வைத்துவிட்டு மிகவும் நம்பகமான ஓர் உறவினர் அல்லது நண்பரிடம் இது குறித்துச் சொல்லி வைக்கலாம் (என்ன எழுதினீர்கள் என்பதைச் சொல்ல வேண்டும் என்பதில்லை. எங்கே இருக்கிறது என்பதை மட்டுமே சொன்னால்கூடப் போதும்).

மதிப்புமிக்கப் பொருட்களை லாக்கரில் வைக்கும்போது அவற்றைப் பட்டியலிட்டு அந்தப் பட்டியலையும் லாக்கரில் வையுங்கள்.

ரொக்கப் பணத்தை லாக்கரில் ஏன் வைக்க வேண்டும்? சட்டப்படி அப்படி வைப்பது தவறல்ல. ஆனால், வங்கிக் கணக்கில் போட்டால் கொஞ்சமாவது வட்டி வருமே.

நீங்கள் அடிக்கடி வெளிநாடுகளுக்குப் போகாதவராக இருந்தால் உங்கள் பாஸ்போர்ட்டைக்கூட வங்கி லாக்கரில் வைக்கலாம். வீட்டில் எங்காவது வைத்து தொலைந்துவிட்டால் மறு பாஸ்போர்ட் பெற மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்.

டைரி, அந்தரங்கக் கடிதங்கள் போன்றவற்றை வீட்டில் உள்ளவர்கள் படிக்கக் கூடாது என்பதற்காக லாக்கரில் வைப்பது புத்திசாலித்தனம் அல்ல. உங்களுக்குப் பிறகு லாக்கர் உடைக்கப்பட்டு அந்த ஆவணங்கள் பிறரால் படிக்கப்பட வாய்ப்பு உண்டு.

வீடு தொடர்பான ஆவணங்களை (விற்பனைப் பத்திரம் போன்றவை) வீட்டில் எங்காவது வைத்து அவற்றைக் கரையான் அரித்துவிட்டாலோ, அவற்றில் ஈரம் பட்டுவிட்டாலோ சிக்கல். எனவே, அவற்றை வங்கி லாக்கரில் வைப்பது நல்லது. உங்கள் பிறப்புச் சான்றிதழ், திருமணப் பதிவுச் சான்றிதழ், முக்கிய கல்விச் சான்றிதழ்கள் போன்றவற்றையும் வங்கி லாக்கரில் வைப்பது நல்லது.

தீவிபத்து, நிலநடுக்கம் போன்றவை உங்கள் வீட்டுக்கு ஏற்படாமலிருக்கட்டும். ஆனால், ஒருவேளை அப்படி நேர்ந்துவிட்டால்? எனக்குத் தெரிந்த ஒரு நண்பரின் வீடு புஜ் (குஜராத்) பூகம்பத்தில் இடிந்து விழுந்துவிட்டது. தன் வங்கி டெபாசிட் விவரங்கள்கூட அவரிடம் இல்லாமல் போனது. காப்பீடு பெறுவதற்குக்கூடச் சில விவரங்கள் தேவைப்படும். அவைகூட அவரிடம் இல்லை.

எல்லாவற்றையும் ஒரு பீரோவில் உள்ள நோட்டுப் புத்தகத்தில்தான் குறித்து வைத்திருந்தார். இந்தத் தவறை நாம் செய்யக் கூடாது. முக்கிய விவரங்களைக் கணினியில் சேமித்து வைப்பதுடன் அந்த விவரங்களை ஒரு பட்டியலாக்கி வங்கி லாக்கரிலும் வைத்துவிடுங்கள்.

Leave a Reply