shadow

வீட்டு கடன் வாங்கியவர்கள் டாப்-அப் லோன் பெறலாம்

1வங்கியில் வாங்கிய வீட்டுக்கடனை திருப்பி செலுத்திக்கொண்டிருக்கும் காலகட்டத்தில், அதே கடன் கணக்கில், அவசர தேவைகளுக்காக மற்றொரு கடனை பெறும் முறையானது ‘டாப்-அப் லோன்’ என்று குறிப்பிடப்படும். முன்னர் பெற்ற கடனை கச்சிதமாக திருப்பி செலுத்தியதன் அடிப்படையில் இவ்வகை கடன் தரப்படுகிறது. கடன் இருக்க இன்னொரு கடன் வாங்கும் முறையாக இருந்தாலும், அவசர பொருளாதார தேவைகளுக்கு இந்த வழியை பயன்படுத்த வங்கிகள் தங்கள் சேவையை வழங்கி வருகின்றன. அது பற்றிய சில தகவல்களை இங்கே காணலாம்.

எவற்றுக்காக வாங்கலாம்..? :

அவசரமான பொருளாதார தேவைகளுக்காக பெறலாம் என்றாலும் வீட்டு விரிவாக்கம், கல்விக்கட்டணம் மற்றும் மருத்துவ செலவுகளுக்காக ‘டாப்-அப் லோன்’ தரப்படுகிறது. மேலும், வீட்டை ஒட்டி இடம் வாங்குவது, ‘பர்னிச்சர்’ அல்லது மின்சாதன பொருட்கள் வாங்குவது, வாகனம் நிறுத்துவதற்கான இடம் வாங்குவது, வீட்டை ‘ரீ-மாடலிங்’ செய்வது மற்றும் ‘மாடுலர் கிச்சன்’ அமைப்பது ஆகியவற்றுக்காகவும் ‘டாப்-அப் லோன்’ பெறலாம். முதலில் தரப்பட்ட கடன் பெற்று, ஆறு மாதம் முதல் ஒரு ஆண்டு ஆகிறது என்றால் பழைய கடன் தொகை மதிப்பில் 10 சதவிகித அளவு கடனாக கிடைக்கும். ஒரு வருடத்திற்கு மேல் இரண்டு ஆண்டுகளுக்குள் என்றால் மொத்த கடன் மதிப்பில் 20 சதவிகிதம் வரையிலும், இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் என்றால் 75 சதவிகிதம் வரையிலும் கடன் கிடைக்கும்.

கணக்கிடப்படும் விதம் :

‘டாப்-அப் லோன்’ தரப்படுவதற்காக வங்கிகள் முன்னர் தரப்பட்ட கடனை கணக்கில் கொண்டு அதன் மொத்த அளவிற்கேற்ப ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை ஒதுக்கீடு செய்கின்றன. பொதுவாக ஒருவர் ஆண்டு வருமானமாக ரூ.5லட்சம் பெறுகிறார் என்றால், அவருக்கு ரூ.25லட்சம் வரையிலும் வீட்டுக்கடன் பெறும் வாய்ப்பு இருக்கிறது.

அவர் ரூ.23லட்சம் அளவுக்கு வங்கியில் வீட்டு கடன் பெற்று 3 ஆண்டுகள் வட்டியும், முதலும் திருப்பி செலுத்தியிருக்கிறார் என்ற நிலையில் ரூ.18லட்சம் கடன் தொகை நிலுவையில் இருப்பதாக கொள்வோம். மேலும் கடந்த மூன்றாண்டுகளில் அவரது ஆண்டு வருமானம் ரூ.6லட்சம் என்ற அளவில் அதிகரித்து விட்டது. இந்நிலையில் அவர் ‘டாப்-அப் லோன்’ பெற விரும்புகிறார் என்றால் அவருக்கு எவ்வளவு தொகை கடனாக கிடைக்க வாய்ப்புள்ளது..?

அவரது அப்போதைய ஆண்டு வருமானம் ரூ.6லட்சம் என்ற நிலையில் அவர் வங்கியிலிருந்து ரூ.27லட்சம் வரை கடன் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதன் அடிப்படையில், அவருக்கு ‘டாப்-அப் லோனாக’ ரூ.9லட்சம் வரை பெறும் வாய்ப்பு உள்ளது. அதாவது ரூ.27லட்சம் என்ற தொகையில் இருந்து அப்போதைய கடன் நிலுவை தொகையான ரூ.18லட்சத்தை கழித்தால் (27,00,000 – 18,00,000 = 9,00,000) வரும் தொகைதான் அது. அதற்காக மொத்த தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவிகித அளவு வங்கி நடைமுறை கட்டணமாக பெறப்படும்.

வரிச்சலுகைகள் :

‘டாப் அப் லோனுக்கு’ வரிச்சலுகை கிடைக்க வேண்டுமானால் அந்த தொகையானது வேறு வீடு வாங்குவதற்கோ அல்லது வீட்டின் மராமத்து பணிகளுக்காகவோ பயன்படுத்தப்பட வேண்டும். அதன் மூலம் வரிச்சலுகை பெறலாம்.

வட்டி கணக்கீடு :

முன்னர் வாங்கிய வீட்டு கடனுக்கான வட்டி எவ்வளவு கணக்கிடப்பட்டதோ அதிலிருந்து 1 சதவிகிதம் அல்லது 2 சதவிகித அளவுக்கு அதிகமாக இருக்கலாம். அதாவது 12 சதவிகிதம் முதல் 14 சதவிகிதமாக கணக்கிடப்படும். வட்டி விகிதமானது வங்கிகளுக்கேற்ப மாறும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

நடைமுறை சுலபம் :

‘டாப்-அப் லோனுக்காக’ தனிப்பட்ட முறையில் ஆவணங்கள் ஏதும் வங்கிக்கு தரவேண்டியதில்லை. முன்னர் வாங்கிய கடனுக்காக ஒப்படைக்கப்பட்ட ஆவணங்களே போதுமானது. அந்த ஆவணங்கள் பழைய கடனை திருப்பி செலுத்திவிட்டால் மட்டும் திருப்பி தரப்பட மாட்டாது. ‘டாப்-அப் லோன்’ தொகையையும் முற்றிலும் செலுத்தும்போதுதான் ஆவணங்கள் திருப்பி தரப்படும்.

Leave a Reply