shadow

வீட்டுக் கடனுக்கு டாப்-அப் வேண்டுமா?

இன்றைக்குப் பெரும்பாலான நடுத்தர வர்க்க மக்கள் சொந்த வீடு கட்ட, வாங்க வங்கிக் கடனையே சார்ந்திருக்கிறார்கள். அதிலும் 80 சதவீதம் மட்டுமே வங்கிக் கடனாகக் கிடைக்கும். மீதித் தொகையை அப்படி இப்படித்தான் தயாராக்க வேண்டும். சிறு சேமிப்பு இல்லையென்றால் தனி நபர்க் கடன் மூலம்தான் ஆரம்ப வேலைகளைச் சமாளிக்க முடியும். ஆனால் என்னதான் நாம் முன்கூட்டியே திட்டமிட்டாலும் கட்டுமானச் செலவு கைமீறிப் போய்விடும்.

நாள்தோறும் கட்டுமானப் பொருள்கள் விலையேறிக்கொண்டிருப்பது, மணல் தட்டுப்பாடு பல்வேறு காரணங்களால் திட்டமிட்ட தொகையைக் காட்டிலும் கூடுதல் ஆகிவிடுகிறது. பொதுவாக வீட்டுப் பணிகளுக்குத் திட்டமிடும்போதும் தோராயமாகத்தான் தீர்மானிப்பார்கள். மேலும் வீட்டின் முகப்புத் தோற்றத்தைப் பொறுத்தும் தொகை கூடுவதற்கான வாய்ப்புள்ளது. பொதுவாகச் சாதாரண விதத்தில் வீட்டின் முகப்பை வடிவமைக்கும்போது அதற்குக் கூடுதல் செலவு ஆவதில்லை. ஆனால் திட்டமிட்டு நவீன ரீதியில் வடிவமைக்கும்போது கூடுதல் செலவு ஆகும். உதாரணமாக கண்ணாடிகள், கிராணைட் கற்கள் போன்றவற்றைப் பயன்படுத்தும் வகையில் முகப்புத் தோற்றத்தை வடிவமைத்தால் அதை வாங்குவதற்கான செலவு மற்றும் அதைச் செய்வதற்கான கூலி எல்லாம் சேர்த்துக் கூடுதல் வந்துவிடும்.

மேலும் வீடு கட்டுபவர்கள் முதலில் குடியேறுவதற்கான குறைந்த அளவிலான வசதிகளை மட்டும் உருவாக்கிவிட்டுப் பாலைக் காய்ச்சிவிடுவார்கள். குடியேறிய பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீதி வேலைகளை முடிக்கலாம் என நினைப்பார்கள். உதாரணமாக சமையலறையைப் பொருத்தவரை அங்கு மரத்தால் சில அலமாரிகள் உருவாக்க வேண்டியிருக்கும். அதையெல்லாம் பிற்பாடுதான் உண்டாக்குவார்கள். அந்தச் சமயத்தில் அதற்கான செலவு பட்ஜெட்டைத் தாண்டியிருக்கும். வீட்டு உள் அலங்காரம், உதாரணமாக மரப் பலகையால் வீட்டு வரவேற்பறையை அழகாக்க முடிவெடுத்திருப்பீர்கள். இன்றைக்கு மரப் பலகையால் சுவர் அலங்காரம் செய்ய ரூ.300 முதல் ரூ.500 வரை செலவு ஆகும். ஆக, இதற்கு மட்டும் செலவு லட்சங்களைத் தொட்டுவிடும்.

அதனால் இந்த மாதிரியான உள் அலங்கார வடிவமைப்பு போன்ற சில வேலைகளை, ‘பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்று கிடப்பில் போட்டுவிடுவார்கள். இல்லையெனில் வீட்டுக்குத் தேவையான அறைக்கலன்கள், குளிர்பதனப்பெட்டி போன்ற பயன்படுபொருள்கள் ஆகியவற்றை வாங்குவதைத் தள்ளிப்போட்டுவிடுவார்கள். இம்மாதிரியான தேவைகளுக்காகத்தான் வீட்டுக் கடனில் டாப்-அப் என்ற வசதி இருக்கிறது. ஏற்கனவே வாங்கிய வீட்டுக் கடனை மாதா மாதம் ஒழுங்காகக் கட்டிவரும் பட்சத்தில் இந்த டாப் அப் வசதி எளிதில் கிடைக்கும்.

எது எதற்கு கடன் வாங்கலாம்?

வீடு கட்டி முடித்த பிறகு வீட்டுக்குள் செய்யும் சிறிய சிறிய மாற்றங்களுக்கு டாப் அப் கடன் பெற்றுக்கொள்ள முடியும். உதாரணமாக சமையலறையை முறையாக மாடுலர் சமையலறையாக மாற்றுவதாக இருக்கும்பட்சத்தில் அதற்குக் கடன் பெற்றுக்கொள்ளலாம். இல்லையெனில் கூடுதலாக ஒரு அறையை உருவாக்க நினைத்தால் அதற்கும் இந்த வசதியைப் பயன்படுத்தலாம். மட்டுமல்லாமல் அறைக்கலன்கள் வாங்குவதற்கும் இந்த டாப் அப் வசதியைப் பயன்படுத்த முடியும். மேலும் உங்கள் வீட்டின் பின்பகுதியில் அல்லது முற்றப்பகுதியில் ஒரு சிறிய அளவில் ஒரு அறை எடுக்க விரும்பினாலும் அதற்காகவும் இந்த டாப் அப் கடன் வசதியைப் பயன்படுத்த முடியும். கார் நிறுத்தத்தை உருவாக்க விரும்பினாலும் அதற்காகவும் இந்தக் கடன் வசதியைப் பயன்படுத்த முடியும்.

எவ்வளவு கிடைக்கும்?

வீட்டுக் கடன் வாங்கி குறைந்தது 6 மாதம் ஆகியிருக்க வேண்டும் அப்படியானால்தான் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் எனச் சொல்லப்படுகிறது. வீட்டுக் கடன் வாங்கிய ஆண்டுகளைப் பொறுத்து கடன் அளிக்கப்படுகிறது. அதாவது முதலில் வாங்கிய வீட்டுக் கடன் தொகையிலிருந்து 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. வங்கிகளைப் பொறுத்தும் முந்தைய கடனில் கட்டி வரும் காலத்தைப் பொறுத்தும் இது மாறுபடும். 50 சதவீதத்துக்கும் கூடுதலாகக் கிடைப்பதாகவும் சொல்லப்படுகிறது.

டாப் அப் கடனை வீட்டுப் பணிகளுக்காகப் பயன்படுத்தும் பட்சத்தில் இந்தக் கடனுக்கு வரிச் சலுகையும் பெற வாய்ப்புள்ளது. ஏற்கனவே வாங்கி வீட்டு கடன் வட்டியிலிருந்து 1 சதவீதம் அளவுக்குக் கூடுதலாக இருக்க வாய்ப்புள்ளது. இது வங்கிகளைப் பொருத்து மாறுபடும். இந்தக் கடன் பெறுவதற்கு தனியாக ஆவணங்கள் சமர்பிக்கத் தேவையில்லை. ஏற்கனவே வாங்கிய கடனுக்காகச் சமர்ப்பித்திருக்கும் ஆவணங்களே போதுமானது.

Leave a Reply