shadow

வீட்டுக்கு வயரிங் செய்யப்போறீங்களா?

1புது வீடு கட்டிக் குடியேறும்போதுதான், பார்த்துப் பார்த்துக் கட்டிய வீட்டில் என்னவெல்லாம் குறை உள்ளது என்பதைக் கண்டறிய முடியும். அடடா, இதைக் கவனிக்காமல் போய்விட்டோமே என அலுத்துக்கொள்வோம். ஆகவே, முடிந்தவரை இத்தகைய விஷயங்களில் கவனம் செலுத்தினால் இந்த மனக் குறையைச் சிறிது போக்கலாம்.

உதாரணமாக வீட்டின் மின் இணைப்புகள் குறித்த விஷயங்களை எடுத்துக்கொள்ளுங்கள். ஓர் அறைக்கு என்ன என்ன சுவிட்சுகள் தேவைப்படும் என்பதை எந்த அறையில் எந்த மின் சாதனங்களை வைக்கப் போகிறோம் என்பதைப் பொறுத்து முடிவுசெய்வோம். அப்படி முடிவுசெய்வதற்கு முன்னர் சற்று நிதானமாக யோசித்து மிகச் சரியாக முடிவுசெய்தால் வீட்டில் குடியேறிய பின்னர் சில அவதிகளைக் குறைக்கலாம்.

ஓர் அறைக்கு என்னென்ன மின்சாதனங்கள் பொருத்தப்பட உள்ளன, எவை அவசியம் போன்ற அனைத்து விதமான விஷயங்களுக்கும் குறிப்பு எடுத்துக்கொண்டு எதையும் மறந்துவிடாமல் மின் இணைப்பைப் பணிகளை மேற்கொள்ளும் தொழிலாளியிடம் தெரிவித்தால் அவரது பணியும் எளிதாகும். படுக்கையறையில் குளிர்சாதன வசதி வேண்டாம் என்று முடிவுசெய்துவிட்டு அதற்கான மின் வசதிகளைச் செய்யாமல் விட்டுவிட்டு வீட்டில் குடியேறிய பின்னர் அங்கு குளிர்சாதன வசதியைப் பொருத்த நினைக்கக் கூடாது.

அதைவிட குளிர்சாதன வசதி தேவைப்படுகிறதோ இல்லையோ அதற்கான மின் இணைப்பு வசதிகளைச் செய்துவிட்டால். குளிர்சாதன வசதி தேவைப்படும்போது, அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இது போல் ஒவ்வொரு விஷயத்திலும் அக்கறை எடுத்து கவனித்துக்கொள்ள வேண்டும்.

சுவிட்சு போர்டுகளில் மின்விளக்கு, மின்விசிறி போன்றவற்றுக்கான சுவிட்சுகளையும் மின்விசிறிக்கான ரெகுலேட்டர், ப்ளக் பாயிண்டுகள் போன்றவற்றையும் அமைப்பது வழக்கம். இந்த சுவிட்சு போர்டுகளே விதவிதமாக கிடைக்கின்றன. இவை தரமானதாகவும் வசீகரமானதாகவும் இருக்க வேண்டியது அவசியம். வீட்டுக்கு நல்ல வண்ணத்தைப் பூசிவிட்டு அந்த அறையில் சுவிட்சு போர்டுகளை மிகவும் சாதாரணமாக அமைத்தால் வீட்டின் அழகை அது பாதிக்கும். இப்போது, வெள்ளை, பழுப்பு, கறுப்பு, சில்வர் போன்ற வண்ணங்களிலும் பொன்னிறத்திலும் சுவிட்சு போர்டுகள் கிடைக்கின்றன. அறையின் வண்ணப்பூச்சுக்கு ஏற்ற வகையில் அவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

எமர்ஜென்சி லைட் எனச் சொல்லப்படும் அவசர கால விளக்குகளுடன் இணைந்த சுவிட்சு போர்டுகள்கூட இப்போது கிடைக்கின்றன. திடீரென மின்சாரம் தடைப்பட்டாலும் இந்த விளக்கின் ஒளி ஓரளவுக்கு அறைக்கு வெளிச்சம் தரும். ஆகவே, இந்த வகை சுவிட்சு போர்டுகளைப் பொருத்துவது ஆபத்துக் காலத்துக்கு உதவும். எமர்ஜென்சி லைட் என்பது ஒரு சுவிட்சு அளவுக்கே இருக்கும். அதே போல் சுவிட்சு போர்டுகளில் மற்றொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். அது தொலைக்காட்சி, கணினி, மடிக்கணினி போன்றவற்றுக்கு மின் இணைப்புத் தரும் ப்ளக் பாயிண்டுகள். நமது ஊரில் வட்ட வடிவமான ப்ளக்குகளைப் பயன்படுத்துகிறோம்.

ஆகவே இதற்கான ப்ளக் பாயிண்டுகள் வட்ட வடிவ ப்ளக்குகளைப் பொருத்தும் வகையிலேயே இருக்கும், ஒருவேளை நீங்கள் தொலைக்காட்சி, மடிக் கணினி போன்றவற்றை வெளிநாடுகளிலிருந்து வாங்கி வந்திருந்தால் அவை சதுர வடிவ ப்ளக்குகளைக் கொண்டிருக்கும். அதற்கேற்ற வகையில் சதுர வடிவ ப்ளக் பாயிண்டுகளை அமைத்துக்கொள்ளவேண்டும். அதே போல் அவசியமான சுவிட்சுகளையும் ப்ளக் பாயிண்டுகளையும் மட்டுமே பொருத்துங்கள், அவசியப்படாத இடத்தில் எல்லாம் தாறுமாறாகப் பொருத்தினால் அதனால் பொருளிழப்புதான் ஏற்படும்.

அதே போல் சுவிட்சு போர்டுகள் சரியான இடத்தில் அமைக்கப்படுவதும் அவசியம். கதவைத் திறந்து உள்ளே நுழைந்த உடன் எந்த இடத்தில் சுவிட்சு இருந்தால் அன்றாட நடவடிக்கைக்கு எளிதாக இருக்குமோ அந்த இடத்தில் சுவிட்சு போர்டை அமைக்க வேண்டும். தவறான இடத்தில் அமைத்துவிட்டால் அனுதினமும் போராட்டம்தான். விளக்குகள், மின்விசிறிகள் போன்றவற்றுக்கான சுவிட்சுகள் இரண்டையும் சரியாகச் சோதித்துக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் எந்த சுவிட்சைப் போட்டால் விளக்கு எரியும், எந்த சுவிட்சு மின்விசிறிக்கானது என்பது தெரியாமல் நிலைமை சிக்கலாகிவிடும்.

அது மாத்திரமல்ல, படுக்கையறையின் விளக்குக்கான சுவிட்சு வரவேற்பறையில் இருக்கும். இப்படியான சிக்கல்களை எல்லாம் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். இதையெல்லாம் தவிர்க்க வேண்டுமானால் சோம்பேறித்தனமின்றி எல்லாவற்றையும் நேரடியாக நாமே சோதித்தறிந்துகொள்ள வேண்டும். இது சற்றுத் தொந்தரவு தரும் வேலைதான், இதை மேற்கொள்ளாவிட்டால் அன்றாடமும் நமக்குத் தொந்தரவாக அமைந்துவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

Leave a Reply