shadow

வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்’ – ஆசையைத் தூண்டும் மோசடி கம்பெனிகள்

p86aஒரு பொருளுக்கு சந்தையில் மவுசு கூடினால்… அதில் போலிகளும் கலப்படங்களும் பெருகிவிடும். நீக்கமற நிறைந்திருக்கும் இந்த ‘ஏமாற்று தந்திரம்’ வேலைவாய்ப்பு துறையையும் விட்டுவைக்கவில்லை. குறிப்பாக, ‘கம்ப்யூட்டர் தெரியுமா… வீட்டிலிருந்தபடியே லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்’ என்று வரும் கவர்ச்சிகர விளம்பரங்கள் அந்த ரகம்தான்.

‘வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டும்’ என்ற ஆசை உள்ள பெண்கள் பலருக்கும் அந்த வாய்ப்பு அமைவதில்லை. கணவன், குழந்தை என வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்க வேண்டிய சூழ்நிலையில்… ‘வீட்டிலிருந்தே வேலை’ எனும் விஷயம் அவர்களின் ஆர்வத்தை இன்னும் அதிகமாக்குகிறது. இங்குதான் தொடங்குகிறது, ஏமாற்றுக்காரர்களின் சதி வேலை. இப்படி ஆசைப்பட்டு பணத்தை இழந்தவர்கள்… ஏராளம்!

இந்த மோசடி குறித்து சில முன்னெச்சரிக்கை விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார், ‘சைபர் சொசைட்டி ஆஃப் இந்தியா’ நிறுவனத்தின் முன்னாள் செயலாளர் மற்றும் ஐ.டி.எம்.ஆர்’-ன் (ITMR – Institute of Technology Management & Research) முதன்மை செயலாளர் டாக்டர் முத்துக்குமரன். இவர், ஆன்லைன் மோசடி வழக்குகள் பலவற்றிலும் காவல்துறைக்கு உதவி வருகிறார்.

“தற்போது ஆன் லைனில் ரெஸ்யூம் அப்லோட் செய்து வேலைக்காக விண்ணப் பிப்பது பெருகி வருகிறது.

அப்படி அப்லோட் செய்யும் நபர்களைத் தான் ஏமாற்று பேர் வழிகள் முதலில் குறிவைக் கிறார்கள். வேலைக்காக காத்திருப்பவர்களிடம்… சர்வே வேலை, ஃபார்ம் ஃபில்லிங் வேலை, டேடா என்ட்ரி வேலை என பல வேலைகள் அளிப்பதாகச் சொல்லி செல்போனிலேயே பணம் பறிக்கப் பார்ப் பார்கள். இப்படி செல் போனில் மட்டுமே பேசுபவர்களிடம் கண் டிப்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களை நம்பி பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்யக் கூடாது. உண்மையில் எந்த ஒரு நேர்மையான நிறுவனமும் வேலைக் காக ஊழியர்களிடம் பணம் கேட்பது இல்லை.

பெரும்பாலும் ‘மெடிக்கல் ட்ரான்ஸ் கிரிப்ஷன்’ வேலையைச் சொல்லித்தான் அதிக ஏமாற்று வேலைகள் நடக்கின்றன. இந்த வேலையைப் பெற்றுத்தருகிறோம் என்று சொல்லி ஆயிரக்கணக்கான ரூபாயை கமிஷனாகப் பெற்றுக்கொண்டு கம்பி நீட்டும் மோசடிப் பேர்வழிகள் ஏராளம். மெடிக்கல் ட்ரான்ஸ்கிரிப்ஷன் நுணுக்கமான வேலை. அதற்குத் தனிப் பயிற்சி தேவை. நம்மிடம் எந்தத் தகுதியையும் எதிர்பார்க்காமல் வேலை கொடுக்கிறேன் என்று சொன்னால், அது நிச்சயம் ஏமாற்று வேலையாகத்தான் இருக்கும்.

அடுத்தது, ‘இமேஜ் டு வேர்ட் ஃபைல் கன்வர்ஷன்’. ஏதேனும் ஒரு பிரின்ட் செய்யப்பட்ட மேட்டரைக் கொடுத்து அதை டைப் செய்யச் சொல்வார்கள். இந்த வேலைக்காகவும் டெபாசிட் கொடுத்து ஏமாந்தவர்கள் அதிகம். பெரும்பாலும் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என்ற மனநிலையில் இருப்பவர்கள்தான் அதிகமாக ஏமாற்றப்படுகிறார்கள். ஏமாற்றுக்காரர்கள், ‘பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும்’ என்று சொல்லி வலை வீசும்போது, குறைந்த அளவே கல்வி கற்றவர்கள் வேலை ஆசையில் எளிதில் ஏமாந்துவிடுகிறார்கள்” என ஏமாற்று விஷயங்கள் குறித்துச் சொன்ன முத்துக்குமரன், இவற்றில் கடைப்பிடிக்க வேண்டிய எச்சரிக்கை விஷயங்களைப் பட்டியலிட்டார்…

* வேலை கொடுப்பவர்கள் உண்மையானவர்களா… அந்த நிறுவனம் உண்மையான நிறுவனமா என்று தெரிந்துகொள்வது அவசியம்.

* வேலை தருகிறேன் என்பவர்கள் செல்போன் மூலம் மட்டுமே பேசிக்கொண்டிருந்தால் நம்பாதீர்கள். நேரில், குறிப்பாக, அவர்களின் அலுவலகத்தில் சந்திக்க வேண்டும் என்று கேளுங்கள். இப்படிக் கேட்டாலே பாதி மோசடியாளர்கள் எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.

* குறிப்பிட்ட நிறுவனத்தின் வெப்சைட் முகவரி கொடுக்கப்பட்டால்… அந்த தளத்தின் சான்றையும், டொமைனையும் சரிபார்க்க வேண்டும். அந்த வெப்சைட்டுக்குள் போகும்போது, பிரவுசர் அட்ரஸ் பாரில் பச்சை நிற பூட்டு இருக்கிறதா என உறுதிபடுத்த வேண்டும்.

* எந்த வலைதளத்திலும்… வங்கிக் கணக்கு, கிரடிட் கார்டு, டெபிட் கார்டு சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பதிவிடக்கூடாது.

* முன்பணம் கேட்கும் நிறுவனங்கள் பெரும்பாலும் போலியானவையாகத்தான் இருக்கும்.

வெப்சைட்டை எப்படி `செக்’ செய்வது?

குறிப்பிட்ட வெப்சைட்டுக்குள் போகும்போது பிரவுசரின் அட்ரஸ் பாரில் உள்ள பச்சை நிற பூட்டை க்ளிக் செய்தால், ‘More information’ என்ற லிங்க் வரும். அதை க்ளிக் செய்தால், ஒரு டயலாக் பாக்ஸ் ஓபன் ஆகும். அதில், ‘view certificate’ லிங்க்கை க்ளிக் செய்தால் இன்னொரு பாக்ஸ் ஓபன் ஆகி, அதில் அந்த நிறுவனத்தின் சான்று, காலாவதி நாள் ஆகிய விவரங்கள் இருக்கும்.

அந்த வெப்சைட் முகவரியை காப்பி செய்து, ‘who.is’ என்ற வெப்சைட்டில் சென்று பேஸ்ட் செய்து தேடினால், அந்த வெப்சைட் உரிமையாளர் பெயர், பதிவு செய்யப்பட்ட தேதி, பதிவு செய்யப்பட்ட நாடு, தொடர்பு எண்கள், இ-மெயில் முகவரிகள் போன்ற விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியும்.

Leave a Reply