shadow

வீடு வாங்க இது நல்ல நேரம்!

முதலீட்டு நோக்கத்துக்காக இல்லாமல், சொந்தப் பயன்பாட்டுக்காக வீடு வாங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகத் திட்டமிட்டு வருபவர்களுக்கு, தற்போதைய சூழல் மிகவும் சாதகமாக இருக்கிறது. வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் வெகுவாகக் குறைக்கப்பட்டது, மத்திய அரசின் வீட்டு வசதித் திட்டங்கள் அமலுக்கு வந்திருப்பது, ரியல் எஸ்டேட் துறையில் நீடிக்கும் தேக்கநிலை எனப் பல்வேறு காரணங்களை இதற்குச் சாதகமாகக் குறிப்பிடலாம்.

ரியல் எஸ்டேட் தொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் குறிப்பிடப்பட்டபடி, 12 முதல் 18 மாதங்களுக்கு, தனி வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளின் விலையில் பெரிய மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் துறையில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் தேக்க நிலை, ஜி.எஸ்.டி., ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்ட அமலாக்கம் ஆகியவற்றால் ரியல் எஸ்டேட் துறை ஆரோக்கியமான சூழலுக்குத் திரும்ப, பல மாதங்கள் பிடிக்கும் என்பதே இதற்குக் காரணம்.

கடந்த 3 ஆண்டுகளைப் பொறுத்தவரை சென்னையில் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி 2.2% என்ற அளவிலேயே இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் வீடு அல்லது மனையில் செய்யப்பட்ட முதலீடு, வங்கி அல்லது பங்குச் சந்தையைவிட மிகக் குறைந்த லாபத்தையே முதலீட்டாளர்களுக்குக் கொடுத்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரத்தில் முதலீட்டு நோக்கத்துக்காக அல்லாமல், சொந்தப் பயன்பாட்டுக்காக வீடு வாங்கியவர்கள் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி பற்றிப் பெரிய அளவில் கவலைகொள்ளத் தேவையில்லை. ஏனென்றால், வீட்டு வாடகைப் பணம் மிச்சம் செய்யப்படுவதுடன், 15 அல்லது 20 ஆண்டுகளில் வங்கிக் கடனை நிறைவுசெய்யும் போது, அந்த வீட்டின் மதிப்பு வெகுவாக உயர்ந்திருக்கும். முதலீட்டு நோக்கத்துக்காக அல்லாமல் சொந்த பயன்பாட்டுக்காக வீடு வாங்க நினைப்பவர்களுக்கு, இந்தக் காலகட்டம் பொன்னான வாய்ப்பாகவே கருதப்படுகிறது.

வங்கிகள் தரப்பில் அளிக்கப்படும் வீட்டுக் கடனுக்கான வட்டி 8 சதவிகிதம் என்ற அளவுக்கு அருகிலேயே இருப்பதால், மாதாந்திரத் தவணைத் தொகையும் குறைவாகக் கட்டினாலே போதும் என்ற சூழல் நிலவுகிறது. இதுமட்டுமின்றி, சென்னை போன்ற பெருநகரங்களில் ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்டு விற்பனைக்குத் தயாராக இருக்கும் வீடுகள் அல்லது அடுக்குமாடிக் குடியிருப்புகளின் எண்ணிக்கை 28 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது. எனவே, கட்டுநர்கள் தரப்பில் வீட்டின் விலையை அடுத்த ஓரிரு ஆண்டுகளில் உயர்த்துவதற்குப் பெரிய அளவில் முகாந்திரம் இல்லை. மேலும், வங்கிக் கடனுதவியுடன் கட்டுமானப் பணிகளை நிறைவுசெய்து விட்டு, விற்பனைக்காகக் காத்திருக்கும் சில கட்டுநர்கள், பெரிய அளவில் லாபத்தை எதிர்பார்க்காமல், கிடைத்த லாபத்துக்கு வீட்டை விற்கத் தயாராக இருப்பார்கள் என்பதால், அனைத்து வசதிகளுடனும் கூடிய ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டை நடுத்தர குடும்பத்தினர் எளிதாகக் கண்டறியும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது.

ஜி.எஸ்.டி. முறையின் காரணமாக, ரியல் எஸ்டேட் துறையில் இன்னும் ஒரு ஆண்டு வரை விலை இறக்கம் ஏற்பட வாய்ப்பில்லை என்றே முன்னணிக் கட்டுமான நிறுவனங்கள் கருதுகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட தேக்கம் காரணமாகப் பொருளாதாரரீதியிலான நெருக்கடியில் சிக்கியிருக்கும் சிறிய, நடுத்தரக் கட்டுநர்கள், ஜி.எஸ்.டி.யால் கிடைக்கும் லாபத்தை, வீட்டை வாங்குபவர்களுக்கு விட்டுத் தர முன்வர மாட்டார்கள் என்பதே இதற்குக் காரணம். எனவே, குறைந்தபட்சம் 18 மாதங்கள் முடிந்த பிறகே, ஜி.எஸ்.டி.யால் கிடைக்கும் பணப் பயன்கள் வீடு வாங்குபவர்களுக்குக் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் இன்னும் சில மாதங்களுக்கு வீட்டு விலை குறைய வாய்ப்பில்லை.

எனவே, 12 முதல் 18 மாதங்கள் என்ற காலக்கெடுவில் பார்க்கும்போது வீட்டு விலையில் மிகப் பெரிய அளவில் ஏற்ற இறக்கம் இருக்காது என்பதும், வீட்டுக் கடனுக்கான வட்டி 8 சதவீதத்துக்குக் கீழாகக் குறைய வாய்ப்பில்லை என்பதும், சொந்தப் பயன்பாட்டுக்காக வீடு வாங்க நினைப்பவர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பை உருவாகியிருக்கிறது. நீண்ட நாட்களாக வீடு வாங்க வேண்டும் என்ற திட்டமிடலுடன் இருக்கும் நடுத்தர குடும்பத்தினர், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அடுத்த ஓராண்டுக்குள் வீடு வாங்குவது சிறந்த முடிவாகவே இருக்கும்.

Leave a Reply