shadow

வீடு மாறும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்

வாடகைக்கு இருக்கும் பலர் ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டுக்கு மாறும்போது பெரும் சிரமத்தை சந்திப்பது உண்டு. வீட்டில் உள்ள பொருட்களை சேதமடையாமல் புதிய வீட்டுக்கு கொண்டு செல்வது என்பது ஒரு பெரிய ரிஸ்க். இதுபோன்று வீடுமாறும்போது கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்களை தற்போது பார்போம்

விலை மதிப்புள்ள பொருட்களை முதலிலேயே பத்திரப்படுத்தி விடுங்கள். தங்க நகை, வெள்ளிப் பாத்திரங்கள், வீடு சம்பந்தமான ஆவணங்கள் போன்றவற்றைத் தனியாக வையுங்கள்.

விலை உயர்ந்தவை இல்லைதான், ஆனால் இன்றைய காலத்தில் அத்தியாவசியமான பான் கார்டு, ஆதார் அட்டை, பற்றுக் கடன் அட்டைகள், மருத்துவ அறிக்கைகள், எக்ஸ்ரே, ஸ்கேன் இவற்றையும் ஒரு பெட்டிக்குள் வைத்துவிடுங்கள். (அடையாளம் தெரிவதற்காகப் பெட்டி மேல் ஒரு தாளை ஒட்டிவிடுங்கள்.)

சோபா, நாற்காலி, பீரோ போன்றவற்றை எடுத்துச் செல்லும்போது சோபா உறைகள், பீரோவிலுள்ள உடைகள் போன்றவற்றைப் பிரித்து வையுங்கள். இத்தகைய கனமான பொருட்களைக் காலின் கீழ் வேறு ஏதாவது மாட்டி அழுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

புது வீட்டுக்குக் குடிபோனவுடன், உடனடியாகத் தேவைப்படும் சமையல் சாமான்களைத் தனிப் பையில் கொண்டுபோவது அவசியம். மைக்ரோ வேவ் அடுப்பு, கேஸ் சிலிண்டர் போன்றவற்றைக் கையாளும்போது கூடுதல் எச்சரிக்கை தேவை.

சில பொருட்கள் மீது ஒருவித உணர்வுபூர்வமான தொடர்பிருக்கும். மர டெஸ்க், பழைய மர இழுப்பறை, புராதன குக்கர் இவற்றை எடுத்துப் போகும்போது சம்பந்தப்பட்ட பெரியவர்களின் மனம் நோகாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.

மேலே குறிப்பிட்டவை போலத்தான், ஸ்தோத்திர நூல்கள், கேசட்டுகள் போன்றவை. என்னதான் சகலமும் கணினியில் பார்க்கலாம் என்றாலும் கணினி மூலம் தெரிந்துகொள்வது அனைவராலும் இயலாது. பெரிய பையில் போட்டு மேலே எழுதிவிடுங்கள். புது இல்லத்தில் குடியேறிய பின்பு மண்டையைக் குடைந்துகொள்ள வேண்டாம்.

கணினி, மடிக் கணினி, சலவை இயந்திரம், பிரிட்ஜ் – இவற்றைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்லுங்கள். மேலும், புதிய இல்லத்தில் எந்தெந்தப் பொருட்களை எங்கெங்கு வைக்க வேண்டும் என்று முன்பே தீர்மானியுங்கள். அவ்விதம் செய்தால்தான் வேலையாட்களின் பணி எளிதாக அமையும். (முன்கூட்டியே குடும்ப அங்கத்தினர்களுடன் பேசிக் கலந்து ஆலோசிப்பது நல்லது).

இன்வெர்ட்டர், டி.வி. பிற மின்சாதனப் பொருட்களைக் கொண்டுபோகும்போது, குடும்ப உறுப்பினர்கூடச் செல்வது அவசியம்.

Leave a Reply