shadow

வீடு என்பது அடிப்படை உரிமையா?

home_2378432fஇந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் வாழ்வதற்கான உரிமையை அரசியலமைப்புச் சட்டத்தின் 21-ம் பிரிவு வழங்கியிருக்கிறது. வாழ்வதற்கான உரிமை என்பது உடலோடு உயிர் ஒட்டியிருக்கும் நிலையை மட்டும் குறிப்பது அன்று. உண்ண உணவு, உடுத்த உடை ஆகியவற்றோடு தங்குவதற்கு ஏற்ற நல்ல உறைவிடத்தையும் பெறுகின்ற உரிமையே உயிர்வாழ்வதற்கான உரிமை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றமும் தனது தீர்ப்புகளில், இத்தகைய பொருள் விளக்கத்தையே அளித்து வருகிறது. எனவே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி எழுத்துரிமை, பேச்சுரிமை போல வீட்டிற்கான உரிமையும் அடிப்படை உரிமைகளில் ஒன்று.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள்

சாந்திஸ்தர் பில்டர்ஸ் எதிர் நாராயண் தோடமே (1990) என்ற வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம், ‘மனிதனின் அத்தியாவசியத் தேவைகளாக உணவு, உடை, உறைவிடம் ஆகியவை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. எந்தவொரு நாகரிக சமூகத்திலும் வாழ்வதற்கான உரிமை உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அத்தகைய உரிமையானது, உணவுக்கான உரிமை, உடைக்கான உரிமை மற்றும் கவுரவமான வாழ்விடச் சூழல் மற்றும் வாழ்வதற்குத் தேவையான உறைவிடம் ஆகியவற்றை உள்ளடக்கியதே ஆகும்’ என்று தெளிவுபடுத்தியிருக்கிறது. மேலும், ‘உறைவிடத் தேவை என்பதில் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே வேறுபாடு உள்ளது.

விலங்குகளுக்குப் போதுமான பாதுகாப்பு அவசியமானது. ஆனால் மனிதனுக்கோ உடல், மனம், அறிவுத்திறன் என அனைத்தும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் முழுமையான மேம்பாட்டினை அடைவதை உறுதிப்படுத்துவதே அரசியலமைப்பின் நோக்கம். அப்படியென்றால், ஒரு குழந்தை சரியான உறைவிட வசதி பெற்றிருந்தால் மட்டுமே அதன் மேம்பாடு சாத்தியம்.

இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரும் மிகவும் சிறப்பாகக் கட்டப்பட்ட வீடுகளில் வசிக்க வேண்டும் என்று அவசியமில்லை. களிமண் சுவரால் கட்டப்பட்ட வீடுகள் அல்லது தீப்பற்றிக்கொள்ளாத களிமண் சுவர் வீடுகளாகவும்கூட அவை இருக்கலாம்’ என்று தீர்ப்பு வழங்கியது.

1996-ம் ஆண்டில் அதே உச்ச நீதிமன்றம், சமேலி சிங் மற்றும் பலர் எதிர் உத்தரப் பிரதேச மாநில அரசு என்ற வழக்கில், ‘உடல், மனம், அறிவுத்திறன் ஆகியவற்றோடு ஆன்மீக ரீதியாகவும் வளர்வதற்குரிய வாய்ப்புகளைக் கொண்டதாக வீடு அமைந்திருக்க வேண்டும்’’ என்று தம்முடைய முந்தைய தீர்ப்பின் பரப்பை மேலும் விரிவுபடுத்தியது. இவ்வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி, ‘உறைவிடத்திற்கான உரிமை என்பது போதுமான பரப்பளவைக் கொண்ட வசிப்பிடம், பாதுகாப்பான மற்றும் கௌரவமான கட்டமைப்பு, தூய்மையான மற்றும் கௌரவமான சூழல், போதுமான வெளிச்சம், தூய்மையான காற்று, நீர், மின் வசதி, சுகாதார வசதிகள் ஆகியவற்றோடு எளிதாக மற்ற பகுதிகளுக்குச் சென்று வருகின்ற வகையில் சாலை வசதிகளையும் கொண்டிருக்க வேண்டும்’

பி.ஜி.குப்தா எதிர் குஜராத் மாநில அரசு (1995) என்ற வழக்கில், உச்சநீதிமன்றம் உறைவிடத்திற்கான உரிமையை 19 (1) (e) மற்றும் 21 ஆகிய பிரிவுகளின் கீழாகவும் அடிப்படை உரிமையாக அறிவித்தது.

பன்னாட்டு ஒப்பந்தங்கள்

அரசியமைப்புச் சட்டத்தால் மட்டுமின்றி சர்வதேச உடன்படிக்கைகளிலும் வீட்டிற்கான உரிமை வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் 1948-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதியன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட அனைத்துலக மனித உரிமை பிரகடனத்தின் 25-ம் பிரிவு உணவு, உடை ஆகியவற்றுடன் குடியிருப்புக்கான உரிமைக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று உறுப்பினர் நாடுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

1966-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதியன்று ஐ.நா. பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்ட சர்வதேச பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் பற்றிய உடன்படிக்கையில் உறுப்பினர் நாடுகள் அனைவருக்கும் குடியிருப்பு வசதி வழங்கவும் வாழிடச் சூழலை தொடர்ந்து மேம்படுத்தவும் ஒத்துக்கொண்டுள்ளன.

பாகுபாடு காட்டக் கூடது

அடிப்படை உரிமையைப் பெறுவதில், சாதியோ மதமோ தடையாக இருக்கும் என்றால் அதுவும் அரசியலமைப்பிற்கு எதிரானதுதான்.

உயர்ஜாதி இந்துக்கள், பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், முஸ்லிம்கள் என்று இந்தியா முழுவதும் குடியிருப்புப் பகுதிகள் தனித்தனியாகப் பிரிந்துகிடக்கின்றன. கிராமங்களில் மட்டுமின்றி, மாநகரங்களிலும்கூட இதுதான் பொதுவான நிலையாக இருக்கிறது. மும்பை போன்ற பெருநகரங்களிலும்கூட முஸ்லிம்களுக்குப் பொதுவான குடியிருப்புகளில் வீடு வாங்கவோ, வாடகைக்குத் தங்கவோ வாய்ப்பு இல்லாத சூழல் நிலவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வாடகைக்கு வீடு தேடும்போது ஜாதி, மதம் ஆகியவற்றோடு பாலின பேதங்களின் அடிப்படையிலும் பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது. ஆண்களுக்குத் தனியாக வீடு கிடைப்பது சிரமம் என்றால், பெண்களுக்குத் தனியாக வீடு கிடைப்பது பெரும் சிரமம்.

வீட்டிற்கான உரிமை என்பது குடிமகனின் அடிப்படை உரிமையென்றால் அதைச் செய்து தர வேண்டிய பொறுப்பு அரசுக்குக் கண்டிப்பாக உண்டு என்பதுதான் நேரடி அர்த்தம். மேலும் அரசுக்குக் கூடுதலாக ஒரு பொறுப்பும் உண்டு. வீடுகளை விற்பனை செய்வதிலும் வாடகைக்கு விடுவதிலும் காட்டப்பட்டு வரும் அரசியலமைப்புக்கு எதிரான பாகுபாடுகளை நீக்கவும் முயற்சிகளை எடுக்க வேண்டும்.

Leave a Reply