shadow

வீடுகளில் முதியவர்களுக்கான புதிய லிப்ட்

புதிதாக வீடு கட்டுபவர்கள் பலரும் முதியவர்களுக்கான வசதிகளையும் செய்யும் காலம் இது. வெஸ்டர்ன் கழிவறை, குளியலறையில் சொரசொரப்பான் டைல்ஸ், சுவர்களில் கைப்பிடி அமைப்பது, லிப்ட் ஆகியவை முதியவர்களுக்கான தேவையாகிவிட்டன. இந்த வரிசையில் ‘ஸ்டேர் லிப்ட்’ என்ற புதிய வரவும் வெளி நாடுகளில் இடம் பிடிக்கத் தொடங்கிவிட்டது. ஸ்டேர் லிஃப்ட் என்றால் என்ன?

‘ஸ்டேர் லிப்ட்’ என்பது இன்று நாம் தளங்களுக்குச் செல்ல பயன்படுத்தும் வழக்கமான லிப்ட் அல்ல. ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்துக்குச் செல்ல உதவும் சிறிய வகை இயந்திர அமைப்பு. லிப்ட் இல்லாத இடங்களில் பயன்படுத்தக்கூடியது இந்த ஸ்டேர் லிப்ட். இந்த ஸ்டேர் லிப்டில் ஒருவர் மட்டுமே செல்ல முடியும். இது மேஜை வடிவிலான லிப்ட்.

ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்துக்குப் படிக்கட்டுகள் வழியாகச் செல்ல வேண்டும் என்றால் முதியவர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள். மூட்டு வலி, முதுகு வலி போன்ற பிரச்சினையால் அவதிப்படுபவர்களும் மாடியில் ஏற கஷ்டப்படுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த ஸ்டேர் லிப்ட் ஏற்றது. எல்லா இடங்களிலும் லிப்ட் வசதி இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், ஸ்டேர் லிப்ட் என்பது மாடிப் படிக்கட்டுகள் வழியாக எந்த இடத்தில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

மாடிப் படிக்கட்டுகளின் வழியாக இதை இயக்க முடியும். இதற்காகப் பிரத்யேக உலோக தண்டவாளமானது மாடியின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதியோடு நேராகவோ அல்லது வளைவுகள் கொண்டதாகவோ இணைக்கப்பட வேண்டும். அதில் உட்கார்ந்துகொள்பவர் தமது கைகளை வைப்பதற்காக உள்ள பகுதியில் இருக்கும் சிறிய ‘லிவரை’ தேவைக்கேற்ப இயக்கி மேலே ஏறவும் செய்யலாம் அல்லது கீழே இறங்கவும் செய்யலாம். 150 கிலோ முதல் 225 கிலோ எடை வரையில் இந்த ஸ்டேர் லிப்ட் எடையைத் தாங்கும்.

ஸ்டேர் லிப்ட் படிக்கட்டுகள் அமைக்கப்பட்ட விதத்திற்கேற்ப இயங்கும் வகையிலேயே வடிவமைக்கப்படுகின்றன. இந்த லிப்டுகளில் மூன்று வகைகள் உள்ளன. ஒன்று, நேராக ஏறக்கூடியது. இரண்டு, படிகளின் வளைவு தன்மைக்கேற்ப வளைந்து ஏறுவது, மூன்று, வீட்டுக்கு உட்புறப் பயன்பாடு அல்லது வெளிப்புறப் பயன்பாடு ஏற்ப பயன்படுத்துவது. வீட்டு கட்டுமானங்களில் உள்ள படிக்கட்டுகள் எல்லாமே ஒரே நேராக இருக்காது. ஆனால், வளைவாக இருக்கும் படிகளில் ஏறும் வகையில் ஸ்டேர் லிப்ட் வடிவமைக்கப்பட்டிருப்பது தனிச்சிறப்பு. அதற்கு ஏற்ப தண்டவாளங்கள் அமைக்கப்படுகின்றன.

படிக்கட்டில் ஏற முடியாதவர்கள் மேஜை வடிவில் உள்ள இந்த லிப்டில் ஏறி உட்கார்ந்துகொண்டால் போதும், லிப்ட் மூலம் மேல் தளத்துக்குச் சென்றுவிடலாம். இந்த ஸ்டேர் லிப்டைப் பயன்படுத்தாத நேரங்களில் மடித்தும் வைத்துகொள்ளலாம். இந்த வகை லிப்ட்டில் முட்டிகளை மடக்கி உட்கார முடியாமல் உள்ளவர்கள் வசதியாக நின்றபடியே செல்லக்கூடிய வசதிகளுடனும் தயாரிக்கப்படுகின்றன. பேட்டரி மூலமே ஸ்டேர் லிப்ட் செயல்படுகிறது என்பதால் மின் சப்ளை துண்டிக்கப்பட்டுப் பாதியில் நிற்கும் என்ற கவலையும் இல்லை.

இந்த வகை லிப்ட் அமெரிக்கா போன்ற வெளி நாடுகளில் பிரபலமாகிவிட்டது. ஆனால், இந்தியாவில் இன்னும் பிரபலமாகவில்லை. இந்த வகைத் தானியங்கி படியேறும் லிப்ட்டின் விலை கொஞ்சம் அதிகம். அதன் காரணமாக எல்லோராலும் இதைப் பயன்படுத்திவிடமுடிவதில்லை. ஆனால். முதியவர்களின் தேவையைக் கருத்தில்கொண்டு ஸ்டேர் லிப்ட் உலகெங்கும் பரவலாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply