shadow

விவசாயத்திற்கு உயிர்கொடுத்த தமிழ்வாணன்! தருமபுரி மாவட்ட தனி ஒருவன்

1தருமபுரி மாவட்டம் பி.துரிஞ்சிப்பட்டியைச் சேர்ந்த தமிழ் வாணனுக்கு தண்ணீர் மீது காதல். விவசாயியான அவர், தன் குடும்பத்தை விடுத்து ஊரில் உள்ள நிலங்கள் வறண்டு கிடப்பதை பார்த்துப் பரிதாபப்பட்டார். துரிஞ்சிப்பட்டியில் ஒன்பதரை ஏக்கர் நிலப்பரப்பில் இருக்கும் கிருஷ்ணசெட்டி ஏரியில் தண்ணீர் நிரப்பினால் ஏரியைச் சுற்றியுள்ள 450 ஏக்கர்களுக்கு நிலத்தடி நீரை பரவச்செய்ய முடியும். ஆனால், மேட்டுப்பகுதியில் இருக்கும் கிருஷ்ணசெட்டி ஏரியில் மழைக்காலத்தில் கூட தண்ணீர் நிற்காது.

அந்த ஏரியில் இருந்து இரண்டரை கிலோ மீட்டர் தொலைவிலேயே சேர்வராயன் மலையிலிருந்து பிறக்கும் வேப்பாடி காட்டாறு ஓடுகிறது. பருவ மழைக்காலங்களில் வேப்பாடி ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடினாலும் கூட அது கிருஷ்ண செட்டி ஏரியைப் பொருத்தவரையில் கைக்கு எட்டா கனியாவே இருந்தது.

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் காவிரி படுகைகளில் நீரேற்று முறையைப் பார்த்த தமிழ்வாணன் அதே போன்ற நீரேற்று முறையில் வேப்பாடி ஆற்றிலிருந்து கிருஷ்ணசெட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வந்துவிடலாமென திட்டம் தீட்டியிருக்கிறார். மழைக்காலங்களில் ஊற்றெடுத்து நிற்கும் வேப்பாடி ஆற்றையொட்டி அமைந்திருக்கும் பஞ்சாயத்து கிணற்று நீர் யாருக்கும் பயன்படாமல் இருக்கிறது. அதிலிருந்து கிருஷ்ண செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு போக முடிவு செய்திருக்கிறார். அதை அரசாங்க உதவியின்றி சாதித்தும் காட்டிவிட்டார்.

அந்தத் திட்டத்துக்கு ஒரு கோடிக்கும் மேல் செலவாகியிருக்கிறது. தமிழ்வாணன் தனி ஒருவரால் அந்த தொகையை புரட்ட முடியாது என்பதால் 40 விவசாயிகளை ஒன்றிணைத்து விடியல் நீரேற்றுப் பாசனம் மற்றும் நிலத்தடி நீர்வள பாதுகாப்புச் சங்கம் என்ற ஒன்றை ஆரம்பித்து, அவர் வேலை பார்க்கும் கூட்டுறவு வங்கியில் 40 லட்சம் கடன் வாங்கியிருக்கிறார். மீதித் தொகையைத் தன் பெயரில் கடனாக நண்பர்களிடம் வாங்கி இதை சாதித்திருக்கிறார். தமிழ்வாணனுக்கு ஒத்துழைப்புக் கொடுத்த 40 விவசாயிகளில் ஒரு சிலரே இப்போது தமிழ்வாணனுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். ஏரிக்கு அருகில் உள்ள நில உரிமையாளர்கள் கூட இந்த திட்டத்திற்குப் பணம் தரவில்லை என்ற நிலையிலும், இது நிகழ்ந்துள்ளது.

ஆனால், தமிழ்வாணனோ “ இதை விளம்பரத்திற்காகவோ சுயநலத்திற்காகவோ செய்யவில்லை. நமக்குப் பின் வரும் நம் சந்ததிகள் இதைப் பயன்படுத்திக்கொண்டால் அதுவே போதுமானது. இதற்காக எங்க வீட்டில் பல பிரச்னைகள் எதிர்ப்புகள் எல்லாவற்றையும் மீறி இதைச் செய்திருக்கிறேன். இது என் 25 ஆண்டுகால கனவு. பல நண்பர்கள், விவசாயிகள் இதற்காக உதவி செய்திருக்கிறார்கள். அப்படியும் தொகை போதுமானதாக இல்லை. இந்தத் தண்ணீரால் பயனடைபவர்கள் கூட பணம் தர மறுக்கிறார்கள். முன்பே அரசாங்கத்தின் மூலம் முயற்சி செய்திருக்கலாம். ஏன் இதை நாமே செய்துவிடலாமே 200 விவசாயிகள் ஆளுக்கு ஒரு லட்சம் கொடுத்தாலே போதுமே என்று நினைத்தேன். ஆனால், யாரும் இப்போது கை கொடுக்கவில்லை. இந்தச் செயல் அரசாங்கத்தைச் சென்றடைந்தால் அதுவே போதும், மற்ற ஊர்களில் உள்ள விவசாயிகள் இதேபோன்ற திட்டத்தைச் செயல்படுத்தி விவசாயத்தைச் செழிக்க செய்தால் எனக்கு அதுவே போதும். யாருக்கு வேண்டுமானாலும் வழிகாட்ட தயராகவே இருக்கிறேன்” என்றார்.

தமிழ்வாணன் போல் ஊருக்கு ஒருவர் இருந்தால், விவசாயம் புத்துயிர் பெறும்!

Leave a Reply