shadow

விஜய் மல்லையா கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை: அருண் ஜேட்லி விளக்கம்

1விஜய் மல்லையாவின் கடன் உட்பட ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ரூ.7,000 கோடியை தள்ளுபடி செய்யவில்லை, ரைட்-ஆஃப் என்பது வேறு, தள்ளுபடி அல்ல என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி மாநிலங்களவையில் விளக்கம் அளித்தார்.

மல்லையா விவகாரம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலிருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு அளிக்கப்பட்டது என்று சாடினார் அருண் ஜேட்லி.

சிபிஎம் தலைவர் சீதாராம் யெச்சூரி, முதலைகளுக்கு சாதகம் ஆனால் சிறிய மீன்கள் செத்துக் கொண்டிருக்கின்றன என்று ரூபாய் நோட்டு நடவடிக்கை குறித்து விமர்சனம் வைத்த நிலையில் அருண் ஜேட்லி இந்த விளக்கத்தை முன்வைத்தார்.

“எஸ்பிஐ ரூ.7,000 கொடி செயல்படாத சொத்துகளை தள்ளுபடி செய்துள்ளது” என்றார் யெச்சூரி, அப்போது குறுக்கிட்ட அருண் ஜேட்லி, “ரைட்-ஆஃப் என்பது தள்ளுபடி அல்ல. அதாவது கடன் என்பது கடன் இல்லாமல் ஆக்கப்பட்டது என்று அதற்கு அர்த்தமல்ல. அதாவது செயல்படும் சொத்துக்கள் என்பதிலிருந்து செயல்படாத சொத்து என்பதாக வங்கி இருப்பு நிலைக்குறிப்பில் மாற்றப்படுகிறது. ரைட்-ஆஃப் என்பதை அப்படியே தன்மை நவிற்சிப் பொருளில் புரிந்து கொள்ளப் படகூடாது ரைட்-ஆஃப் என்பது தள்ளுபடி அல்ல” என்றார்.

மேலும் அரசு தொடர்ந்து வாராக்கடனை வசூலிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும், கணக்குப் புத்தகத்தில் அது செயலில் இல்லாத சொத்துகளாகிவிடும் அவ்வளவே கடன் பெற்றவர்கள் திருப்பி கொடுக்க வேண்டும் என்பதோ, அரசு தொடர்ந்து அந்தக் கடனை மீட்கும் என்பதிலோ இருவேறு கருத்துகள் இருக்க முடியாது என்றார் அருண் ஜேட்லி.

Leave a Reply