shadow

வாஷிங் மெஷின் செய்ய 2000 ரூபாய் போதும்… பள்ளி மாணவியின் ‘வாவ்’ கண்டுபிடிப்பு!

பள்ளிநாட்கள்ல எத்தனை விஷயங்கள் படிச்சிருப்போம்? ஆனா எதையாவது நடைமுறை வாழ்க்கைக்கு பயன்படுத்தி பார்த்திருப்போமா? அப்படி செய்திருந்தால் நாமும் கேரளாவை சேர்ந்த ரம்யா ஜோஸ் போல தேசிய அளவில் கவனம் பெற்று, பல விருதுகளை வாங்கியிருக்கலாம்.

ரம்யா பத்தாவது படிக்கும்போது அவரது அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. பொதுத்தேர்வுக்கு ரம்யா தயாராக வேண்டும். தினமும் மூன்று பேருந்துகள் மாறிச்சென்று படிக்க வேண்டும். வீடு திரும்பியதும் வீட்டு வேலைகளையும் முடிக்க வேண்டும். மற்ற வேலைகள் எல்லாம் ரம்யாவுக்கு சிரமமாக தெரியவில்லை. துணி துவைப்பதுதான் சிக்கல்.

துணி துவைக்கும் போது உடலுக்குத்தானே வேலை? ரம்யாவின் மூளை அந்த வேலையையும், அவர் பள்ளியில் படித்த விஷயங்களையும் சேர்த்து அசைப்போட்டது. விளைவு? இந்த ‘செம’ வாஷிங் மெஷின்.

அது என்ன செம வாஷிங் மெஷின்?

வாஷிங் மிஷினுக்கு மின்சாரம் தேவை. அது இல்லாமல் ஒன்றை செய்ய வேண்டும். அப்படி ஒரு விஷயத்தை யோசித்து அதை லைன் ட்ராயிங்காக வரைந்தார். அதை பார்த்த ரம்யாவின் அப்பா ரம்யாவை திட்டவில்லை. மாறாக, அந்தப் படத்தை லோக்கலில் இருக்கும் ஒரு மெக்கானிக்கிடம் கொண்டு சென்றார். தேவையான பொருட்களை வாங்கி வர சொன்னார் ரம்யா. அவை வந்ததும், என்ன செய்ய வேண்டும் என்பதையும் அவரே விளக்கினார். முடிவில், வாஷிங் மெஷின் உருவானது.

ரம்யாவின் கண்டுபிடிப்பில் இருந்தது இதுதான். ஒரு அலுமினியம் கேபின். அதனுள் wire cylinder எனப்படும் உருளை. அந்த உருளையுடன் இணைக்கப்பட்ட ஒரு சைக்கிள் பெடல். அழுக்குத்துணிகளை அந்த கேபிணுக்குள் போட வேண்டும். உடன், நீரையும் டிடர்ஜெண்ட்டையும் சேர்க்க வேண்டும். பின் கேபினை மூடி 10 நிமிடம் ஊற விட வேண்டும். அதன் பின் பெடலை மிதிக்க வேண்டியதுதான். சில நிமிடங்கள் தண்ணீரை வெளியேற்ற வேண்டும். அதற்கென தனி வழி உண்டு. சுழற்சியால் துணிகளின் இருக்கும் ஈரமும் 80% குறைந்துவிடும். எனவே உலர்த்துவதும் எளிது.

எத்தனை கிராமங்களுக்கு இது பயன் உள்ளதாக இருக்கும் என நினைத்துப் பாருங்கள். இதற்கு ஆகும் மொத்த செலவு எவ்வளவு தெரியுமா? 2000ரூபாய். இதை எளிதில் தூக்கிச் செல்லலாம் என்பதும் இன்னொரு சிறப்பு. குளக்கரையில், ஆற்றங்கரையில் என தண்ணீர் கிடைக்கும் இடங்களுக்கு எடுத்துச் சென்று துவைக்கலாம். முக்கியமாக, சத்தமே வராது. டிஸ்கவரி சேனலில் வெளியான இந்த வீடியோவை, ஒரு பயனர் யூடியூபில் 2010-ம் ஆண்டு அப்லோடு செய்து இருக்கிறார்.

இந்த கண்டுபிடிப்புக்காக பல விருதுகளை வாங்கியிருக்கிறார் ரம்யா. இது கொஞ்சம் எளிமையான கண்டுபிடிப்புதானே என நமக்கு தோன்றலாம். ஆனால், மூளையில் உதிக்கும் ஐடியாவை செயல்படுத்துவதுதான் மிகப்பெரிய சவால். அதை சாதித்திருக்கும் ரம்யா போன்ற மாணவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

Leave a Reply