shadow

வானவில் பெண்கள்: கல்விக்காகப் போராடும் நரிக்குறவப் பெண்!

நிலமும் கல்வியும் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்கால வாழ்க்கைக்கான ஆதாரம் என்பதைத் தன்னுடைய செயல்களால் நிரூபித்துக்காட்டியிருக்கிறார் விஜயா. நரிக்குறவர் சமூக மக்களுக்காக மாநில அரசு கொடுத்த விவசாய நிலத்தைப் பல ஆண்டுகளாகப் பயன்படுத்திவந்துள்ளனர் பெரம்பலூர் மாவட்டம் முப்பத்தியாறு எறையூரைச் சேர்ந்த நரிக்குறவர் சமூகத்தினர். ஆனால், சமூகத்தினர் அதே அரசு ஜவுளிப் பூங்கா அமைப்பதற்காக அந்த விவசாய நிலத்தை எடுத்துக்கொள்ள முயன்றது. சுமார் 200 குடும்பங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதாரமாக இருந்த நிலத்தை அரசு எடுத்துக்கொள்ள அவர்கள் அனுமதிக்கவில்லை. நிலத்தை மீட்பதற்கான போராட்டத்தில் முன்னணியில் நின்றவர்களில் விஜயாவும் ஒருவர்.

“நரிக்குறவர்கள் தொன்றுதொட்டு நிரந்தரமாக வசிக்க ஒரு இடம் இல்லாமல் ஊர் ஊராகச் சென்று வியாபாரம் செய்துவந்தனர். அரசு வழங்கிய நிலத்தால்தான் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நிரந்தரமாக விவசாயம் செய்து, தங்களின் வாழ்க்கையை நடத்திவந்தனர். இந்த நிலையில் அரசு எங்களுக்குக் கொடுத்த நிலத்தை மறுபடியும் கேட்டபோது, நாங்கள் கொடுக்கத் தயாராக இல்லை. அந்த விவசாய நிலத்தை நம்பித்தான் எங்களின் வாழ்க்கையே இருக்கிறது” என்கிறார் விஜயா.

ஜவுளிப் பூங்காவை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி உண்ணாவிரதம் உள்ளிட்ட பல போராட்டங்களில் ஈடுபட்டனர். ‘நரிக்குறவர் நாடோடிகள் நலச் சங்கம்’ என்ற அமைப்பொன்றை ஆரம்பித்தனர். இந்தப் போராட்டங்களில் பெண்களைத் திரட்டுவதில் முன்னணியில் இருந்தார் விஜயா. நரிக்குறவர் சமுதாயத்தில் படிக்கத் தொடங்கிய முதல் தலைமுறையினரில் விஜயாவும் ஒருவர்.

“என் அம்மா பல ஊர்களுக்குச் சென்று வியாபாரம் செய்துவருவார். அப்படிச் சென்ற இடங்களிலிருந்து என் அம்மா கற்றுக்கொண்ட பாடம், தன் பிள்ளைகளைப் படிக்கவைக்க வேண்டும் என்பதுதான். கட்டுப்பாடுகள் நிறைந்தது எங்கள் சமூகம். அப்படியிருந்தும் நான் சென்னை சைதாபேட்டையில் உள்ள மகளிர் அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை விடுதியில் தங்கிப் படித்தேன். ஒரு பெண்ணை இப்படிப் படிக்க வைக்கலாமா என்று என் அம்மாவிடம் பலரும் கேட்டார்கள். அதற்கெல்லாம் அஞ்சாமல் என்னை அவர் அந்தக் காலத்தில் படிக்கவைத்ததை நான் பெருமையாக நினைக்கிறேன்” என்கிறார் விஜயா.

தனக்கு முழுமையாகக் கிடைக்காத கல்வியைத் தன்னுடைய பிள்ளைகளுக்கு அதிகமாகவே கொடுத்துள்ளார் விஜயா. முதல் மகனை எம்.ஃபில், இரண்டாவது மகனை பிளாஸ்டிக் தொழில்நுட்பம் படிக்கவைத்துள்ளார்.

விஜயாவின் கல்வி அறிவாலும் சிந்தித்துச் செயல்படும் திறமையாலும் போராட்டக் களத்துக்குப் பெண்கள் ஏராளமானோரை வரவழைக்க முடிந்தது. தொடர் போராட்டங்களால் முப்பத்தியாறு எறையூர், தமிழக மக்களின் கவனத்தைப் பெற்றது. இந்தப் போராட்டத்துக்கு அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தினர் துணை நின்றனர். தொடர் போராட்டங்களின் பலனாக, சென்னை உயர்நீதிமன்றம் விவசாய நிலத்தில் ஜவுளிப் பூங்கா அமைக்கத் தடை விதித்தது. விவசாய நிலத்தை மீட்ட மக்கள் தற்போது அதில் பயிர் செய்துவருகின்றனர்.

“நாங்கள் அனைவரும் ஒன்றாகத்தான் பயிர் செய்வோம். சமீபத்தில் பயிர் செய்த சோளத்தில் ஒருவருக்கு முப்பது முதல் நாற்பது முட்டைகள் வரை கிடைத்தன” என்று மகிழ்ச்சியாகச் சொல்லும் விஜயா, பள்ளியில் இடைநின்ற மாணவர்களை ஒருங்கிணைப்பதில் முழுமையாக ஈடுபட்டுவருகிறார்.

“பல்வேறு காரணங்களுக்காக மாணவர்கள் பள்ளியிலிருந்து பாதியில் நிற்பது அதிகமாக இருந்தது. இதற்காக சர்வ சிக்‌ஷ அபியான் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தை மக்களுக்குப் புரியவைத்து, ஒருங்கிணைப்பதில் நான் முழு வீச்சில் ஈடுபட்டேன். அதற்குப் பலனாகப் பல மாணவர்கள் தாங்கள் விட்ட படிப்பை மீண்டும் தொடர்ந்தார்கள். ஒரு மாணவி பி.காம். வரை படித்தார். ஆனால்,

எங்களின் நில மீட்புப் போராட்டத்துக்குப் பிறகு தற்போது இந்தத் திட்டம் எங்கள் பகுதியில் செயல்படவில்லை” என்று சொல்லும்போது விஜயாவின் குரலில் வருத்தம் தெரிந்தது.

இந்தத் திட்டம் மறுபடியும் தங்கள் பகுதி குழந்தைகளுக்கு வேண்டும் என்று வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை முறையிட்டும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

“எங்கள் குழந்தைகள் கொஞ்சம் தாமதமாகத்தான் பாடங்களைப் புரிந்துகொள்வார்கள். ஆனால் பழகிவிட்டால் வேகமாகக் கற்றுக்கொள்வார்கள். இப்போது பள்ளியிலிருந்து இடையில் நிற்பது முன்பைவிட அதிகரித்துள்ளது. எங்கள் பகுதிக்கு மீண்டும் அந்தத் திட்டம் வந்தால் பலரும் கல்வி பயில வாய்ப்புள்ளது. இல்லையென்றால் தங்கள் பெற்றோர்களைப் போல் நாடோடிகளாக மாற வேண்டியிருக்கும். கல்வியால் மட்டுமே நாங்கள் முன்னேற முடியும்” என்கிறார் துணிச்சலான போராட்டக்காரர் விஜயா.

Leave a Reply