shadow

வாடகை கார் சந்தையில் புதிய யுத்தம்

7இந்தியாவில் ஓலா மற்றும் உபெர் ஆகிய நிறுவனங்கள் போட்டியாளர்கள். ஆனால் ஓலாவில் முதலீடு செய்திருக்கும் டிடி சக்ஸிங் நிறுவனத்தில் 17.7 சதவீதம் உபெருக்கு பங்கு இருக்கும் பட்சத்தில் ஓலாவில் உபெருக்கும் பங்கு இருக்கிறது என்பதுதானே அர்த்தம்.

தலைப்புக்கு சம்பந்தம் இல்லாத சில விஷயங்கள் குறித்து விரிவாக விவரித்தால்தான் தலைப்பை நோக்கி செல்லமுடியும். வாடகை டாக்ஸியில் சர்வதேச அளவில் முக்கியமான நிறுவனம் உபெர். இந்த நிறுவனம் அமெரிக்கா மட்டுமல்லாமல் இந்தியா, சீனா, கனடா உள்ளிட்ட பல நாடுகளில் செயல்பட்டு வருகிறது. அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் லாபமீட்டி வந்தாலும், மற்ற வளரும் நாடுகளில் பெரிய அளவிலான வளர்ச்சி இல்லை. குறிப்பாக சீனாவில் இந்த நிறுவனத்தின் வளர்ச்சி மிகக் குறைவே.

ஒட்டுமொத்த சீனாவின் வாடகை டாக்ஸி சந்தையில் சுமார் 8 சதவீத சந்தையை மட்டுமே இந்த நிறுவனம் வைத்திருக்கிறது. கடந்த வருடம் 11.5 சதவீத சந்தையை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. சீன சந்தையில் 85 சதவீதம் சீனாவை சேர்ந்த டிடி சக்ஸிங் வசம் இருக்கிறது.

சர்வதேச அளவில் பெரிய வெற்றியை அடைந்த அமெரிக்க நிறுவனங்கள் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் சீனாவில் வெற்றி அடைவது கஷ்டம். அலிபாபாவுக்கு முன்னால் அமேசான் நெருங்கவே முடியாது. கூகுள், பேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் சீனாவில் செயல்படவே முடியாது. கடந்த இரு வருடங்களில் 200 கோடி டாலர் செலவழித்து சீனாவில் வெற்றி அடைய முடியாது என்ற உண்மையை உபெர் கண்டுபிடித்தது. அதனால் சந்தையில் முதல் இடத்தில் இருக்கும் டிடி சக்ஸிங் (Didi Chuxing) நிறுவனத்திடம் விற்றுவிட்டது.

அதாவது இந்த இரு நிறுவனங்களும் இணைந்து விட்டன. இணைந்த இரு நிறுவனங்களின் சந்தை மதிப்பினை முறையாக வெளியிடவில்லை என்றாலும் 3,500 கோடி டாலர் இருக்கும் என சந்தை வல்லுநர்கள் கணித்திருக்கிறார்கள். டிடி சக்ஸிங் நிறுவனத்தில் உபெருக்கு 17.7 சதவீத பங்குகள் ஒதுக்கப்படும். இதன் மூலம் டிடி சக்ஸிங் நிறுவனத்தில் அதிக பங்குகள் வைத்திருக்கும் முதலீட்டாளராக உபெர் உயரும். தவிர டிடி சக்ஸிங் நிறுவனம் உபெர் நிறுவனத்தில் (சர்வதேசம்) 100 கோடி டாலர் முதலீடு செய்யும்.

மேலும் டிடி சக்ஸிங் நிறுவனத்தின் நிறுவனர் செங் வேய் (Cheng Wei) உபெர் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலும், உபெர் நிறுவனத்தின் நிறுவனர் டிராவிஸ் கலாநிக் (Travis Kalanick), டிடி நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலும் இணைவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

யார் இந்த செங் வேய்?

சமீப காலங்களில் சீனாவின் மிகச்சிறந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான டிடி சக்ஸிங் யை உருவாக்கியவர் செங் வேய். இவரின் வயது 33. மூன்று வருடங்களுக்கு முன்புதான் இந்த நிறுவனத்தை உருவாக்கினார். 1983-ம் ஆண்டு பிறந்தவர். பெய்ஜிங் பல்கலைக்கழகத்தில் வேதியியல் தொழில்நுட்பம் படித்தவர். ஹெல்த்கேர் நிறுவனத்தில் பணிபுரிந்தார். எதிர்பார்த்த அளவு வேலை இல்லை என்பதால் மசாஜ் நிறுவனத்தின் தலைவருக்கு உதவியாளராக சேர்ந்தார். அந்த வேலையும் பிடிக்கவில்லை என்பதால் அலிபாபா நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக சேர்ந்தார். அதனை தொடர்ந்து மேலாளராக பதவி உயர்ந்தார். அலிபாபாவின் ஆன்லைன் பேமெண்ட் நிறுவனமான அலிபே நிறுவனத்தின் துணை பொதுமேலாளராக சேர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து 2012-ம் ஆண்டு டிடி டாஷே (Didi Dache) என்னும் நிறுவனத்தை தொடங்கினார். 2015-ம் ஆண்டு யூயாய்டி டாஷே (Kuaidi Dache) என்னும் நிறுவனத்தை இணைத்தார். இணைக்கப்பட்ட பிறகு டிடி சக்ஸிங் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

உபெர் நிலைமை?

உபெர் சர்வதேச நிறுவனமாக இருந்தாலும், அந்த நிறுவனத்திடம் நிதி இருந்தாலும், சீனா பிரிவு என்பது தனி நிறுவனம். அதற்கென பிரத்யேகமாக முதலீட்டாளர்கள் இருந்தனர். சிக்கலான சீன சந்தையில் முதலீடு செய்வதற்கு அமெரிக்க முதலீட்டாளர்களின் அனுமதியை வாங்குவது கடினம் என்பதால் சீனப்பிரிவை விற்றது உபெர். தொடர்ந்து நஷ்டம் அடைந்து வந்த சீனப்பிரிவை விற்றுவிட்டதால், அடுத்த வளரும் சந்தைகளில் உபெர் கவனம் செலுத்தும். வளரும் சந்தை என்றால் இந்தியாதானே. இந்தியாவில் முதலீடு செய்ய ஏற்கெனவே இந்த நிறுவனம் 100 கோடி டாலர் நிதி ஒதுக்கி இருக்கிறது. தவிர இதுவரை இந்த நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படவில்லை. அதனால் அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

இந்த இரு நிறுவனங்களின் இணைப்புக்கு சீன அரசு ஒப்புதல் வழங்கவேண்டும். காரணம் 90 சதவீத சந்தை ஒரே நிறுவனத்திடம் இருக்கும் பட்சத்தில் மோனோபோலி நிலைமை உருவாகும். அதனால் வாடிக்கையாளர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கலாம். பணியாளர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

இந்தியாவில் என்ன பாதிப்பு?

சீனாவில் செயல்படும் இரு நிறுவனங்கள் இணைகிறது என்று ஒதுக்கி தள்ள முடியாத அளவுக்கு பிரச்சினை மிக நெருக்கமானது. அமெரிக்காவில் தொடங்கப்பட்ட உபெர் நிறுவனம் எப்படி சர்வதேச நிறுவனமாக உயர வளரும் சந்தைகளாக இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் முதலீடு செய்கிறதோ, அதேபோல சீன நிறுவனமான டிடி சக்ஸிங் விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அதற்காக இந்தியாவில் ஓலா (ரூ.64 கோடி), அமெரிக்காவில் எல்ஒய்எப்டி (lyft) மற்றும் சிங்கப்பூரில் கிராப்டாக்ஸி ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.

இந்தியாவில் ஓலா மற்றும் உபெர் ஆகிய நிறுவனங்கள் போட்டியாளர்கள். ஆனால் ஓலாவில் முதலீடு செய்திருக்கும் டிடி சக்ஸிங் நிறுவனத்தில் 17.7 சதவீதம் உபெருக்கு பங்கு இருக்கும் பட்சத்தில் ஓலாவில் உபெருக்கும் பங்கு இருக்கிறது என்பதுதானே அர்த்தம்.

பிரச்சினை இங்கு தொடங்குகிறது. ஓலாவில் முதலீடு செய்திருக்கும் டிடி சக்ஸிங் போட்டி நிறுவனங்களான உபெர், மெரு கேப்ஸ், மேக் மை டிரிப் உள்ளிட்ட நிறுவனங்களில் சில காலத்துக்கு முதலீடு செய்யக்கூடாது என்ற விதி இருக்கிறது. ஆனால் இந்த விதியை ஓலா மற்றும் டிடி நிறுவனங்கள் மாற்றி அமைத்திருக்கிறதா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. இந்த சிக்கல் குறித்து இரு நிறுவனங்களும் இதுவரை பொதுவெளியில் தகவல் தெரிவிக்கவில்லை.

– செங் வேய்

அதே சமயத்தில் ஓலாவில் முதலீடு செய்துள்ள டைகர் குளோபல், டிஎஸ்டி குளோபல், சாப்ட்பேங்க் ஆகியவை உபெர் நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளன. (வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் ஒரே துறையை சேர்ந்த பல நிறுவனங்களில் முதலீடு செய்வது அனுமதிக்கப்பட்டவைதான்.)

இரு நிறுவனங்களிலும் பொதுவான முதலீட்டாளார்கள் இருப்பதால் லாப நோக்கத்துடன் இரு நிறுவனங்களும் இணைவதற்கான வாய்ப்பை மறுக்க முடியாது. இப்படித்தான் ஓலாவும், டாக்ஸி பார் ஷூர் நிறுவனங்களும் இணைந்தன.

இப்போது ஓலாவும் உபெர் நிறுவனம் எப்படி இந்திய சந்தையை அணுகப்போகின்றன என்பதுதான் அடுத்தகட்ட கேள்வி?

Leave a Reply