shadow

வரதட்சணையை வரவேற்கும் பெண்கள்! – `நீயா நானா’ சரிதானா?

ஒரு குறிப்பிட்ட விஷயத்தை எடுத்து அலசும் விஜய் டி.வி `நீயா நானா’வில், அண்மையில் பேசப்பட்ட ‘வரதட்சணையை விரும்பும் பெண்கள்’ டாபிக்கை சமூக வலைதளங்கள் முதல் ஆபீஸ் டீ-பிரேக் சகாக்கள், காலேஜ் பசங்க, வீட்டில் இருக்கிற பெரியவங்க, சின்னஞ்சிறுசுங்க வரை எல்லோருமே அலசி, அடித்து, துவைத்து, காயவே போட்டுட்டாங்க. வழக்கம்போல ஒரு விஷயத்தை ஒரு வாரம் பேசிட்டு அடுத்த வாரம் வேற விஷயத்துக்கு ஜம்ப் பண்ணிடும் மக்கள், கிட்டத்தட்ட மூணு, நாலு வாரமா இந்த விஷயத்தை ட்ரெண்டுல வெச்சிருக்காங்க. பெண் விடுதலை, சம உரிமைன்னு பெண்களுக்காகப் போராடிக்கிட்டிருக்கிற இந்தத் தருணத்துல, நம்ம மக்கள் கருத்துகளைக் கேட்டோம்.

பெத்தவங்களை கஷ்டப்படுத்திட்டு நிம்மதியா இருக்க முடியுமா?

அம்சவேணி (மென்பொருள் நிறுவன ஊழியர், சென்னை)

“எதிர்பார்க்கிறது தப்பில்ல. முடியவே முடியாத விஷயங்களை எதிர்பார்க்கிறது ரொம்பவே தப்பு. `கிடைச்சா நல்லா இருக்குங்கிறது’ ஆசை. `கண்டிப்பா கிடைச்சே ஆகணும்’னு நினைக்கிறதை என்னன்னு சொல்றது? கூலி வேலை பார்க்கிற அப்பா தன்னோட சக்திக்கு மீறி 20 பவுன் நகை போடுறதே பெரிய விஷயம்னு சொல்லுறப்போ, `நீ கடனை வாங்கி 80 பவுன் போடு’னு சொல்றதெல்லாம்?!

நான் இன்ஜினீயரிங் படிச்சேன்… வேலைக்குப் போறேன்… வெளிநாட்டுக்குப் போய் சம்பாதிச்சு என்னோட கல்விக்கடன், வீட்டுக்கடன் எல்லாம் அடைச்சேன். இப்போ என்னோட கல்யாணத்துக்குத் தேவையான செலவை நானே சேர்த்து வெச்சுக்கிட்டு இருக்கேன். `இவ்ளோ கொண்டு வா’னு டிமாண்ட் பண்ணா கண்டிப்பா ‘நோ’ சொல்லிடுவேன். என்னால கொண்டு வர முடிஞ்சதை ஏத்துக்கிறவங்களுக்குதான் என்னோட ‘யெஸ்’!’’

வளர்த்த விதம் சரியில்லை!

புவனேஸ்வரி கலையரசன் (மென்பொருள் நிறுவனப் பொறியாளர், பர்மிங்ஹாம், யு.கே.)

“யாரு உதவியும் இல்லாம சுயமா சம்பாதிச்சு, தன் திரு மணத்துக்கான அத்தனை செலவையும் ஏத்துக்குற பொண்ணுங்க நிறையப் பேர் சமூகத்துல இருக்காங்க. இதே சமூகத்துல, ‘அப்பா எத்தனை நாள் உயிரோட இருப்பார்னு தெரியலை… அவர் போறதுக்கு முன்னாடி அந்தச் சொத்தை எனக்கு எழுதி கொடுத்துடணும்’கிற தொனியில பொண்ணுங்க பேசுறது எல்லாம் கொடுமையின் உச்சம்!

`பொம்பளப்புள்ள உனக்கு எதுக்கு… எல்லாம் அவனுக்குத்தான்’னு பெத்தவங்களும் சமூகமும் சொல்லிச் சொல்லி அவங்களை இப்படி பேச வெச்சிருக்கு. சொத்து, பணம், நகை எல்லாம் தாண்டி மனித உறவுகள், பாசம், நேசம்னு அவர்களைச் சரியான பாதையில் வளர்த்திருக்கணும்.’’

வரதட்சணையை நியாயப்படுத்துவது வேதனை!

அபிமதி ஜீவானந்தம் (எம்.இ., முதலாமாண்டு மாணவி, பொள்ளாச்சி)

“அவசியம் எது… அநாவசியம் எதுன்னுகூட தெரியாம இருக்கும் சில பொண்ணுங்களைப் பார்க்கும்போது வருத்தமாதான் இருக்கு. `அண்ணனுக்குத் தர்றே… எனக்கு ஏன் தர மாட்ற?’ன்னு படிப்புலயோ, பாக்கெட் மணியிலயோ கேக்காம, கல்யாணத்துலயா கேக்குறது? வரதட்சணை ஒழிப்புக்குப் போராடிட்டு இருக்குற காலத்துல, பொண்ணுங்களே அதை வற்புறுத்திக் கேட்கறது வேதனையா இருக்கு. பெற்றோரை விரும்புற, குடும்பத்தை நேசிக்கிற, கஷ்டமான சூழ்நிலையில படிச்சு வளர்ந்த பொண்ணுங்களோட குரலை அந்த நிகழ்ச்சி எழுப்பல!”

`வரதட்சணை தர மாட்டோம்’னு சொல்லியிருக்கணும்!

ஷீபா (சாஃப்ட்வேர் இன்ஜினீயர், ஸ்ரீவில்லிபுத்தூர்)

“இப்போ சமூக வலைதளம், டி.வி, பத்திரிகை பேட்டிகள்னு சாமானியப் பெண்களோட குரலை உலகம் கேட்க ஆரம்பிச்சிருக்கு. இந்தத் தருணத்துலப் பொண்ணுங்க எல்லாம் `நாங்க வரதட்சணை தர மாட்டோம். எங்க அப்பா அம்மாவைக் கஷ்டப்பட விட மாட்டோம்’னு சொல்லியிருக் கணும். ஆனா, வரதட்சணையை நியாயப்படுத்திப் பேசுனது வருத்தமா இருக்கு…

”எனக்கு எங்கப்பா அம்மாகிட்ட இருந்து ஒரு பைசா வேணாம்!

கயல்விழி (சமூக ஆர்வலர், மதுரை)

“சங்ககாலத்துல கூட வரதட்சணைன்னு எதுவும் கிடையாது. பெண் வீட்டார் அன்பளிப்பா கொடுக்கிற விஷயத்தை, காலப்போக்குல மாப்பிள்ளை வீட்டார் கட்டாயப்படுத்திக் கேட்க ஆரம்பிச்சதுதான் வரதட்சணை. கிட்டத்தட்ட பல நூறு வருஷங்களா கொடுத்துக் கொடுத்தே அடிமையா கிடந்த நாம, இப்போதான் வரதட்சணையை எதிர்த்துப் போராடிட்டு இருக்கோம். இன்னிக்குப் பசங்களுக்கு முன்னாடியே `அவங்க கேக்குறாங்களோ இல்லையோ… எங்களுக்கு இது இது கொடுத்துருங்க’னு பொண்ணுங்க கேக்குறதெல்லாம் நாம போராடுனதுக்குக் கிடைச்ச மிகப்பெரிய அவமானமா நெனைக்கிறேன். நான் அந்த புரோகிராம்ல பங்கேற்று இருந்தா, `எனக்கு எங்கப்பா அம்மாகிட்ட இருந்து ஒரு பைசா வேணாம். என் சொந்த சம்பாத்தியத்தில என்னால முடிஞ்ச அளவு என் கல்யாணத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கிப்பேன்’னு சொல்லியிருப்பேன்.’’

அவங்க இப்படி பேசினதுக்கு வெட்கப்படறேன்!

சிவகாமி (காக்னிசன்ட், சென்னை)

“நானும் ஒரு பொண்ணுங்குற அடிப்படையில, அந்த நிகழ்ச்சியில பேசின பொண்ணுங்களை நெனச்சி வெட்கப்படறேன். இவங்க பெரும்பான்மை பெண்களைப் பிரதிபலிக்கலை. டி.வி சேனல் டி.ஆர்.பி-க்காக பண்ணதாக்கூட இருக்கட்டும். இவ்வளவையும் சொன்னது அந்தப் பொண்ணுங்கதானே… `பெத்த அப்பா அம்மா, உடன்பிறந்த அண்ணன் தம்பி கஷ்டப்பட்டாலும் பரவாயில்ல… நான் போற வீட்டுல நல்லா இருக்கணும்’னு சொல்றதெல்லாம் எவ்வளவு பெரிய சுயநலம். மைக் கிடைச்ச ஆர்வத்துல குடும்பத்தைப் பற்றிய கவலையும், சமூகத்தைப் பற்றிய அக்கறையும் கொஞ்சம்கூட இல்லாம, ஒட்டுமொத்தப் பெண்கள் மேல ஒரு தவறான பார்வையை விதைச்சுட்டுப் போயிருக்காங்க.”

டி.ஆர்.பி ரேட்டிங்குக்காக பொறுப்பு உணர்வை புறக்கணிக்கிறார்கள்!

கார்த்திகேயன் (பிரிட்டிஷ் ஏர்வேஸ், லண்டன்)

“நிகழ்ச்சியில பேசின பொண்ணுங்க மேல எனக்கு கோபமோ, வருத்தமோ இல்ல. நிகழ்ச்சி ஹிட் அடிக்கணும், டி.ஆர்.பி ரேட்டிங் அதிகமா இருக்கணும்னு சில பொண்ணுங்களைத் தூண்டிவிட்டுப் பேச வெச்சு, அவர்களோட தனிப்பட்ட சில விருப்பங்களை, எண்ணங்களை பொண்ணுங்களோட பொதுவான விருப்பமா சித்திரிச்சு, பெரிய அளவில மார்க்கெட்டிங் செஞ்ச அந்தத் தொலைக்காட்சிக்குத்தான் என்னோட கண்டனம். நிகழ்ச்சியைப் பார்க்கிற விவரம் தெரியாத ஸ்கூல் பையன், `அப்போ பொண்ணுங்களே இப்படித்தானா’னு நினைக்க மாட்டானா..? வளர்ந்து வர்ற மாணவர்களுக்கு நம்ம சமூகத்தின்மீதும், பெண்கள்மீதும் தவறான கண்ணோட்டம் ஏற்படுமே! `அரசியல்வாதிகளுக்குப் பொறுப்பு இருக்கணும்; மக்களுக்குப் பொறுப்பு இருக்கணும்; அரசுக்கும் அதிகாரிகளுக்கும் பொறுப்பு இருக்கணும்’னு அடிக்கடி சொல்லுற மீடியாவுக்கு, கொஞ்சமாவது சமூக அக்கறையும் பொறுப்பும் இருந்திருந்தா, இந்த மாதிரி ஒரு டாப்பிக்ல நிகழ்ச்சியை ஒளிபரப்புமா..?”

Leave a Reply