shadow

வயிற்றுப்புண் – வீட்டு சிகிச்சை முறைகள்

1
வாய்ப்பகுதி முதல் வயிறு வரை உள்ள உணவுக்குழாயின் சுவர்கள் மென்மையானவை. வயிற்றுவலி, வயிற்றெரிச்சல், வாய்வுக்கோளாறு, அஜீரணம், நடு இரவில் (12 – 3 மணிக்குள்) வயிற்றுவலியால் தூக்கம் கெடுதல், சாப்பிட்டதும் வயிற்றுவலி குறைதல், செரிக்காத உணவை வாந்தி எடுத்தல், ரத்த வாந்தி எடுத்தல், எடை குறைதல் (திடீரென 2 – 3 கிலோ குறைதல்), உணவு உண்டபின் மூன்று, நான்கு மணி நேரம் கழித்து வலி ஏற்படுதல் ஆகியவை அல்சருக்கான அறிகுறிகள்.

குளிர்ந்த பால் குடிப்பது வலியைக் குறைக்கும். வயிற்று எரிச்சலைப் போக்கும். உணவில் நெய் சேர்த்துக்கொள்ளலாம். ஒருவேளை, நெய் ஜீரணமாகாவிட்டால், சுடுநீர் சேர்த்து எடுத்துக்கொள்வது நல்லது.

நெல்லிக்காய்ச் சாற்றை பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும், வில்வ இலைகள் மற்றும் பழங்கள் சேர்த்துச் சாப்பிட்டால் வயிற்றுப்புண் குணமாகும்.

மாதுளம் பழச்சாறு, பாதாம் பால் குடிப்பது அல்சருக்கு நல்லது.

வாழைப்பழம் அதிக அமிலத்தைச் சரிப்படுத்தும் என்பதால், இரண்டு மூன்று வாழைப்பழங்கள் பாலுடன் சேர்த்துக்கொள்வது நல்லது. அதிலும், மஞ்சள் வாழைப்பழத்தைவிட பச்சை வாழைப்பழம் சிறந்தது.

ஒரே வேளையாக அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்து, இடைவெளி விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுவது நல்லது.

அல்சர் இருப்பவர்கள், புளிப்புச்சுவை உடைய திராட்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, பப்பாளி, அன்னாசி போன்றவற்றைத் தவிர்த்து, ஆரோக்கியமான சரிவிகித உணவைச் சாப்பிடுவது எப்போதும் நல்லது.

வயிற்றுப்புண்ணைப் பொறுத்தவரையில், தொடர் சிகிச்சைகள் மூலம் எளிதில் குணப்படுத்திவிடலாம். சில நேரங்களில் அல்சர், வயிறு மற்றும் சிறுகுடல் சுவர்களை ஊடுருவி உட்சென்று, கணையம், கல்லீரலை பாதிக்கக்கூடும். இதனால், தீவிர வலி ஏற்படும். அல்சர் பாதித்த இடத்தைச் சுற்றியுள்ள திசுக்கள் வீங்கி, வயிறு மற்றும் சிறுகுடல் பாதையை அடைக்கக்கூடும். சாப்பிட்டவுடன் வயிறு மிகவும் கனமாகவும், உப்புசமாகவும் இருப்பதே இதன் அறிகுறி.

Leave a Reply