shadow

வணிகப் பண்டங்களில் இருந்து விலகி நிற்க என்ன செய்ய வேண்டும்?

பள்ளிக்குப் போகும் குழந்தைகளின் அன்றாட காலை உணவு மிகப்பெரும் பிரச்சினையாக இருக்கிறது. தனிப்பயிற்சி, வீட்டுப்பாடம் என வேலைகள் அனைத்தையும் முடித்த பின்னர்த் தங்களைத் தளர்த்திக்கொள்வதையும் ஒரு வேலையாகவே அவர்கள் செய்ய வேண்டியிருக்கிறது. தொலைக்காட்சி பார்ப்பது, கம்ப்யூட்டர் கேம் விளையாடுவது, தலையைப் போனுக்குள் நுழைத்துக்கொள்வது என மீண்டும் குழந்தைகள் மன அழுத்தத்துக்கு உள்ளாகிக் கிட்டத்தட்ட நள்ளிரவில்தான் படுக்கவே செல்கிறார்கள்.

நள்ளிரவில் தூங்கச் செல்லும் குழந்தைகளைக் காலையில் பள்ளிக்கு அனுப்புவதற்கு, இரக்கமில்லாமல் அடித்து எழுப்ப நேர்கிறது. குளியல், காலைக்கடன் கழிப்பது போன்றவற்றை அரைகுறையாகவே முடித்த நிலையில் பிளஸ் டூ பையனுக்கும்கூட அம்மாவே ஊட்டினாலும் அந்த உணவு அரைத் திடப்பொருளாகத்தான் வயிற்றுக்குள் இறங்குமே தவிர, உணவாக இரைப்பையைச் சென்றடையாது.

குழந்தைகளின் படிப்பில் அக்கறையுள்ள பெற்றோர் அவர்களது முக்கியப் பருவமான பள்ளி வயதில் உடல்நலனில் கண்டிப்பான அக்கறையைக் காட்ட வேண்டும். அவர்களது எதிர்காலத்திற்கென்று காசைக் கொட்டுகிறோம், கடன்படுகிறோம். ஆனால் நிகழ்காலத்தில் அவர்களது உடலைப் பாழ்படுத்துவதை ‘வேறு என்ன செய்வது?’ என்று கேள்விகளுடனேயே தொங்கலில் நிறுத்துகிறோம்.

மதிய உணவு முழு ஆற்றல் தருமா?

காலை 7 – 9 மணிக்குச் சிறுகுடல் ஆற்றலுடன் இயங்கும் நேரம். அந்த நேரத்தில் கடனே என உணவு திணிக்கப்பட்டால், அது ஒட்டுமொத்த உடலையும் கண்டிப்பாகப் பாதிக்கும். சரி, காலை உணவுதான் பொருத்தமாக இல்லை. மதிய உணவாவது முழு ஆற்றலை வழங்கக்கூடியதாக இருக்கிறதா என்றால், அதுவும் இல்லை. இந்த அம்சங்களைத் தெளிவாக உணர வேண்டும் என்பதற்காகவே இங்கே விரிவாகப் பேசுகிறோம்.

பல லட்சங்கள் நுழைவுக் கட்டணமாகவும், பதினாயிரங்களை மாதாந்திரக் கட்டணமாகவும் கல்விக்குச் செலுத்தினாலும் சர்வதேசப் பள்ளிகள் உட்படப் பெரும்பாலான பள்ளிகளில் மதிய உணவு உடனடியாகச் சமைத்து வழங்கப்படுவதில்லை. அதற்கு நம் அரசுப் பள்ளிகளே தேவலாம். சத்துணவு என்ற பெயரில் ஓரளவு ஒப்புக்கொள்ளும் உணவை வழங்குகின்றன.

இப்போது சில பள்ளிகள், குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுகிறேன் என்ற பெயரில், ஒவ்வொரு நாளும் என்ன மெனு என்பதைப் பட்டியலிட்டுக் கொடுத்து மதிய நேரத்தில் கண்காணிக்கிறார்கள். இதை அவர்கள் அக்கறையாகவே செய்தாலும், அது அராஜகமான ஒன்றாகவே தோன்றுகிறது. குழந்தை கள் அனைவரும் ஒரே உணவைக் கொண்டுவந்தால் எப்படித் தங்களுக்குள் பரிமாற்றம் செய்துகொண்டு, நிறைவாக உண்ண முடியும் என்பதை அவர்கள் கவனத்தில் கொள்வதில்லை.

உணவில் சத்துக் கணக்கைவிட மன நிறைவுக்குத்தான் முதலிடம் என்பதை உணரும் பக்குவத்தை நம் தனியார் பள்ளிகள் ஒருபோதும் அடைந்துவிட முடியாது.

தீவிரக் கட்டுப்பாடு அவசியமா?

ஒவ்வொரு நாளும் விதவிதமான காய்கறிகளை உண்ண வேண்டும் என்று நிர்பந்திக்கின்றன சில பள்ளிகள். சதை பிடித்து வளர்கிற பருவத்தில் குழந்தைகள் வயிற்றை எளிதில் அடைக்கும் நார்ச்சத்து மிகுந்த உணவை வெறுப்பது இயல்புதான்.

பெரியவர்களுக்கான நல்ல உணவு என்று சொல்லப்படுபவை அத்தனையும் குழந்தைகளுக்கும் பொருத்தமானவையல்ல. காய்கறி, கீரை நல்ல உணவு என்று சொல்லித் தலையணைக்குள் பஞ்சை திணிப்பதுபோல, குழந்தைகளின் வாயில் காய்கறிகளைத் திணிக்க முயற்சிக்கக் கூடாது.

ஓடியாடி உடலாற்றலை எரிக்கும் பருவத்தில் எரிமச் சத்து (கார்போஹைட்ரேட்) உணவையும், உடல் கட்டுமானத்துக்குரிய கடினத்தன்மை கொண்ட கிழங்கு போன்றவற்றை வறுவலாகவும் உண்ணக் குழந்தைகள் விரும்புவது இயற்கையே. குறிப்பிட்ட வயதில் குறிப்பிட்ட உணவை அறிவார்த்தமாகத் தேர்வு செய்வதில்லை. அப்படித் தேவையும் இல்லை.

துரித உணவுக்கு மாற்று?

அப்படியானால் பளபளப்பான காகிதங்களில் சுற்றிவரும் சக்கைப் பண்டங்களையே குழந்தைகள் விரும்புகிறார்களே, அது சரியா என்ற கேள்வி எழுகிறது. சரியல்லதான். `ஜங்க் ஃபுட்’ எனப்படும் இந்த வணிகப் பண்டங்கள் எந்தச் சத்துகளையும் தருவதில்லை என்பதுடன், குழந்தைகளின் மென்மையான உள்ளுறுப்புகளை மோசமாகச் சிதைத்து நிரந்தர நோயாளிகளாக்கி விடுகின்றன. வேறு நல்ல பண்டங்களை உண்ண விடாத அளவுக்கு நாவின் சுவை மொட்டுகளையும் சுரண்டி கெடுத்துவிடுகின்றன.

குழந்தைகளை எப்படித் தமது தயாரிப்புக்கு அடிமையாக்குவது என்று பரிசோதனைக்கூடத்தில் தலையைக் கசக்கிக் கொண்டிருப்பவர்களை ஆராய்ச்சியாளர்கள் என்று சமூகம் நம்பிக்கொண்டிருப்பதே இதற்குக் காரணம். இந்த நம்பிக்கை அனைத்துத் துறைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது.

வணிக நொறுவைப் பண்டங்களில் இருந்து நம் குழந்தைகளை மீட்டெடுப்பது எப்படி என்று நம் பெற்றோர்கள், வணிக நிறுவனங்களைக் காட்டிலும் கூடுதல் சிரத்தையுடன் சிந்தித்து, செயல்பட வேண்டியிருக்கிறது. இயற்கையான, விதம்விதமான சுவை கொண்ட உணவைப் பச்சிளம் பருவத்தில் இருந்தே குழந்தைகளுக்குப் பழக்கிவிட்டால் வணிகப் பண்டங்களை நிச்சயமாக அவர்கள் விரும்ப மாட்டார்கள்.

சாக்லேட் விரும்பாத சிறுவன்

சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னர்ச் சிங்கப்பூர் சென்று திரும்பி இருந்தேன். நம்மவர்களிடம் உள்ள அதே வழக்கத்துடன் வயதானவர்களுக்குக் கோடாலித் தைலம், நண்பர்களுக்கு டி சர்ட், பெண்களுக்குப் புடவை, பிள்ளைகளுக்குச் சாக்லேட் வாங்கி வந்திருந்தேன்.

என்னைக் காண ஒரு நண்பர் வந்திருந்தார். உடன் அவரது ஆறு வயதுப் பையனும். என் அக்கம்பக்க வீட்டுக் குழந்தைகள் நாவில் உமிழ்நீர் ஊற, நான் வாங்கி வந்த சாக்லேட்களின் ஜிகுஜிகுப்பான உறைகளைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள். நண்பரின் பையன் கைக்குச் சில சாக்லெட் பார்களை எடுத்து நீட்டினேன்.

நண்பர் மிகுந்த மென்மையான சுபாவம் கொண்டவர். அதே பண்புடன் பதற்றமின்றி “இதெல்லாம் வேண்டாம் … அவன் சாப்பிட மாட்டான்” என்றார். அப்படிச் சொல்லிக் கொண்டி ருக்கும்போது அவனும் மற்றக் குழந்தைகளைப்போல மினுமினுப்பான காகிதத்தை ஆர்வத்துடன் பிரித்துக் கொண்டிருந்தான்.

“குழந்தைகளின் சின்னச் சின்ன விருப்பங்களுக்கு நாம் பெரிய கட்டுப்பாடு விதிக்க வேண்டியதில்லை” என்று நண்பரிடம் தத்துவார்த்தமாகப் பேசிக் கொண்டிருந்தேன். பாரின் காகிதத்தைப் பிரித்த பையன், சாக்லேட்டை வாயில் வைத்தானே தவிர, அவனால் அதைச் சுவைக்க முடியவில்லை. உதட்டில் அரக்கு நிறத்தில் கூழாக வழிய விட்டான். கண் விழிகள் பிதுங்கின.

நண்பர் சிரித்தபடியே “நான் சொன்னேனில்லையா….. சிறுவயது முதற்கொண்டே இதைச் சுவைத்துப் பழக்கமில்லாததால் மற்றக் குழந்தைகளைப் பார்த்து ஆர்வத்தில் முயன்றாலும், இது போன்றவற்றின் சுவையை அவனது நாவும் உடலும் ஏற்றுக் கொள்வதில்லை” என்றார்.

இந்நிகழ்வு எனக்கு மிகப்பெரிய படிப்பினையைக் கொடுத்தது. நமது ஏட்டுப் படிப்புகளை மட்டுமல்ல, ‘நெட்’ மேய்ச்சலையும் கள அனுபவங்களுடன் பொருத்திப் பார்த்த பிறகே பின்பற்றத் தொடங்க வேண்டும்.

Leave a Reply