shadow

வட்டத்துக்கு வெளியே: சட்டைப்பையிலும் அரசியல்

1அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளின்டன் கலந்துகொள்கிற நிகழ்ச்சிகளைப் பற்றி செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. பொது நிகழ்ச்சிகளுக்கு அவர் அணிந்துவரும் ஆடைகளில் பைகள் இல்லை என்ற விஷயம் இப்போது விவாதத்துக்குரியதாக மாறியிருக்கிறது.

ஆண்களின் உடைகள், பைகள் இல்லாமல் முழுமை அடைவதில்லை. ஆனால், பெண்களின் உடைகளில் மட்டும் பைகள் வைத்துத் தைப்பதைப் பற்றி ஏன் யோசிப்பதில்லை? பெண்கள் காலம்காலமாகத் தோள்களிலும் கைகளிலும் பைகளைச் சுமந்து திரிந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் தோள்பைகள் ஒருபோதும் சட்டைப் பைகளுக்கு இணையாகாது.

இன்றும் நாம் அணிகிற பெரும்பாலான ஆடைகள், மேற்கத்திய பாணிகளைப் பின்பற்றித் தயாரிக்கப்படுபவை. எனவே இந்தக் கேள்விக்கான விடையையும் ஐரோப்பிய வரலாற்றிலிருந்தே கண்டறிய முடியும்.

முந்தைய காலத்தில் ஆண்களும் பெண்களும் கையில் எடுத்துச் செல்லும் பைகளை மட்டுமே பயன்படுத்தி னார்கள். மத்திய காலகட்டத்தில்தான் (கி.பி.476-1500) எடை குறைவான பொருட்களை வைக்கும் வகையில் சட்டைப்பைகளையும் இடுப்பு பெல்ட்டுடன் இணைக்கப்பட்ட சிறு பைகளையும் பயன்படுத்த ஆரம்பித் தார்கள். திருடர்களிடமிருந்து பணத்தைப் பாதுகாப்பதற்காக, சட்டையின் உட்புறமாகப் பைகளைத் தைக்கும் வழக்கமும் தொடங்கியது. பெண்களும்கூட தங்கள் ஆடைகளில் இப்படி உள்பைகளைத் தைத்துக்கொண்டார்கள்.

17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் ஆண்களின் கோட், வெயிஸ்ட் கோட், பேன்ட் என்று எதுவாக இருந்தாலும் அதில் கண்டிப்பாகப் பைகள் இருந்தாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் பெண்களின் பைகளுக்கு மட்டும் அவர்களது ஆடைகளுக்கு இடம்மாறும் வாய்ப்பு அமையவில்லை.

18-ம் நூற்றாண்டில் நடந்த பிரெஞ்சு புரட்சியின்போது ஆடை வடிவமைப்பிலும் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது. பெண்களின் ஆடைகள் கொஞ்சம் கொஞ்சமாக உடலை இறுக்கிப் பிடிக்க ஆரம்பித்தன. எனவே பெண்கள் தங்களது உடைகளுடன் பைகளை இணைத்துக்கொள்ளும் வாய்ப்பு இல்லாமலே போனது.

இந்தக் காலகட்டத்தில் மிகவும் அழகிய வடிவமைப்புகளோடு பெண்களுக்கான பிரத்யேக பர்ஸ் பிரபலமானது. அதன் காரணமாகவே, ஆண்கள் பர்ஸ் வைத்திருப்பது பொருட்களை வைத்திருப்பதற்காக, பெண்கள் பர்ஸ் வைத்திருப்பது அழகுக்காக என்ற கருத்தும் தோன்றியது. ஆண்களின் உடை பயன்பாட்டுக்காக, பெண்களின் உடை அழகுக்காக என்ற கருத்தின் நீட்சியே இது. அதாவது, பெண்கள் அழகுக்காக உடைகள் அணியும்போது அவற்றில் சட்டைப்பைகள் தேவையே இல்லை.

ஆனால் சட்டைப்பைகள் என்பவை பெண்ணின் அலங்காரத்தோடு முடிந்துபோகிற விஷயமில்லை. அதில் ஓர் அரசியலும் இருக்கிறது. ஒரு பெண் பொதுவெளியில் தனது ஆடைக்குள் எதையும் எடுத்துச் செல்லக் கூடாது; அவள் எதையும் மறைத்து வைத்துக்கொள்ளக் கூடாது. பணம் தொடங்கி துப்பாக்கி வரைக்கும் எந்தவிதமான பொருளையும் பயன்பாட்டுக்காகவோ பாதுகாப்புக்காகவோ வைத்துக் கொள்ள அவளுக்கு உரிமை யில்லை. கண்களுக்குத் தெரியாத இந்தக் கட்டுப்பாடே, இன்றும் ஆடை வடிவமைப்புத் துறையை இயக்கிவருகிறது. இதைக்காட்டிலும் முக்கியமான இன்னொரு காரணமும் உண்டு.

பெண்களின் ஆடையில் பைகள் இல்லையென்றால், அவர்களால் ஆண்களைப் போல பைகளுக்குள் கைகளை விட்டுக்கொண்டு நிற்க முடியாது. அமெரிக்க அதிபராக இருந்தாலும், பெண் எப்போதும் தனது பணிவடக்கத்தை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம்தான், ஹிலாரி கிளின்டன் ஆடைகளில் பைகள் இல்லாததற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

Leave a Reply