shadow

லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா ஆஜர்: இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா?

இந்தியாவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து சுமார் 9,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, கடனை திருப்பிச் செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பியோடினார். மல்லையா மீது பண மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. ஆகியவை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தன.

இங்கிலாந்து நாட்டுக்கு தப்பிச் சென்ற விஜய் மல்லையா, தற்போது லண்டனில் தஞ்சமடைந்து வசித்து வருகிறார். அவரை நாடு கடத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. மல்லையாவை நாடு கடத்த வேண்டும் என இங்கிலாந்து அரசை மத்திய அரசு வலியுறுத்தியதுடன், இதுதொடர்பாக லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்துள்ளது. மல்லையாவை நாடு கடத்துவதற்கு தேவையான ஆதாரங்களையும் கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளது. இந்தியா கொடுத்த புகாரின்பேரில் மல்லையாவை ஸ்காட்லாந்து யார்டு போலீசார் கைது செய்து, பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.

இந்நிலையில், வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் மல்லையா ஆஜர் ஆனார். அப்போது தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், நீதிமன்றத்தில் அனைத்தும் தெளிவாகும் என்றும் கூறினார்.

இதையடுத்து இவ்வழக்கில் அதிகாரப்பூர்வ விசாரணை டிசம்பர் 4-ம்தேதி தொடங்கி 14-ம் தேதி வரை நடைபெறும் என்றும், அதன்பின்னர் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது, இந்தியா சார்பில் பிறகு கூடுதல் ஆதாரங்களை கொடுக்கப்படலாம் என்று மல்லையா கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை தாமதப்படுத்தும் என்பதால் இந்தியா புதிய ஆவணங்களை கொண்டு வரக்கூடாது என உத்தரவிட்டார்.

Leave a Reply