shadow

ரூ.50 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுவோர் வாங்கும் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்: மத்திய நேரடி வரி ஆணையம் வலியுறுத்தல்

Income-Tax-Raid
பணக்காரர்கள் வாங்கும் விலை அதிகமான சொத்துக்கள் விவரங்களையும் இனிமேல் வரி தாக்கலில் குறிப்பிட வேண்டும் என மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் கூறியுள்ளது. குறிப்பாக ஆண்டு வருமானம் ரூ.50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தாங்கள் வாங்கும் நிலம், கட்டிடம் மற்றும் தங்க நகைகள் எவ்வளவுக்கு வாங்கப்பட்டது என்கிற விவரங்களை வருமான வரி தாக்கலில் குறிப்பிட வேண்டும். 2016-17 மதிப்பீட்டு ஆண்டிலிருந்து இந்த விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. வருமான வரி தாக்கல் செய்வது தொடர்பான புதிய விதிமுறைகளை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது.

விலை உயர்ந்த பொருட்கள் என்கிற வகையில் பாத்திரங்கள், அணிகலன்கள், பர்னிச்சர்கள் மற்றும் வைர கற்கள், தங்கம், வெள்ளி பிளாட்டின ஆபரண நகைகள் மற்றும் இதர விலை மதிப்பற்ற கற்கள் என எல்லா வகைகளையும் வரித் தாக்கலில் குறிப்பிட வேண்டும்.

இந்த சொத்துக்களின் உண்மையான மதிப்புக்கான செலவு அறிக்கையை வருமான வரிதாக்கல் செய்பவர் அளிக்க வேண்டும் என கூறியுள்ளது. ஒருவேளை வருமான வரி தாக்கல் செய்பவருக்கு இந்த சொத்துக்கள் அன்பளிப்பாக கிடைத்திருப்பின் அதை அளித்தவர்கள் அதற்காக செலவிட்ட தொகை குறித்த விவரத்தை அளிக்க வேண்டும். இல்லையென்றால் வருமான வரி செலுத்துபவரது சொத்து மதிப்பிலேயே சேர்க்கப்படும்.

ஒருவேளை அன்பளிப்பாக கிடைத்த சொத்தின் மதிப்பு அதை அளித்தவரிடமிருந்து விசாரித்தறிய முடியவில்லை அல்லது அதற்குரிய சொத்து வரி கட்டவில்லை என்றால் அந்த சொத்தின் சந்தை மதிப்பு அல்லது அந்த பகுதியில் நிலவும் மதிப்பில் ஏதாவது ஒன்று கணக்கிடப்படும். மேலும் அந்த சொத்தின் அதிகரிக்கும் மதிப்பையும் சொத்தை வாங்கிய நாளிலிருந்து அல்லது மார்ச் 31, 2016 வரை வருமான வரி செலுத்துபவர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

வருமான வரி செலுத்துபவர் வரித்தாக்கலில் சொத்து வாங்கிய விவரங்களை இணைக்கும்போது அதற்குரிய சொத்து வரி முன்னதாக செலுத்தியிருக்க வேண்டும்.

வருமான வரித்துறை இந்த புதிய விதிமுறைகளை மதிப்பீட்டு ஆண்டு 2016-17லிருந்து அறிவித்துள்ளது. இதற்காக வருமான வரி அறிக்கை படிவத்தில் புதிய இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆண்டிறுதியில் உள்ள சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் என தனி வரிசை உருவாக்கப்பட்டுள்ளன. ஆண்டு வருமானம் 50 லட்சத்துக்கும் அதிகரிக்கும்பட்சத்தில் இது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய வருவாய் துறை செயலர் ஹஸ்முக் ஆதியா ஏற்கெனவே இது தொடர்பாக கூறியபோது இந்தியாவில் 1.5 லட்சம் பேர்தான் 50 லட்சத்துக்கும் மேல் வருமானம் ஈட்டுகிறார்கள். இது பணக்காரர்களுக்கு மட்டுமே பொருந்தும். இதர பொதுமக்களுக்கு பொருந்தாது என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த புதிய விதிமுறைகள்படி தனிநபர்கள் தங்களது மொத்த வருமானத்துக்குள் அசையும் மற்றும் அசையா சொத்துக் களின் செலவு மதிப்பு அடங்கியுள்ளதா என குறிப்பிட வழி ஏற்பட்டுள்ளது முக்கிய மானது.

Leave a Reply