shadow

ரஜினிக்கு எதிராக ரசிகர்களை திருப்பிவிடும் முயற்சியில் திமுக

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ரஜினி ரசிகர் மன்றத்தில் பல ஆண்டுகளாக இருப்பதால் மட்டும் மக்கள் மன்றத்தில் பதவி பெறவோ அரசியலில ஈடுபடவோ தகுதி பெற முடியாது என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கை குறித்து திமுக நாளேடு ஒரு கட்டுரையை பதிவு செய்துள்ளது. இந்த கட்டுரை மூலம் ரஜினி ரசிகர்களை ரஜினிக்கு எதிராக திருப்பும் முயற்சியில் திமுக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த கட்டுரை இதுதான்:

என்ன தலைவா கடைசியில் இப்படி காலை வாரி விடுகிறாய். கொடி பிடித்து கோ‌ஷம் போட்டு உன் பெயரை எங்கள் பெயர் முன் இணைத்தோம். ஊர் ஊராக தெருத்தெருவாக உனக்கு மன்றம் அமைத்து உன் படம் ரிலீஸ் ஆகும் அன்று வாண வேடிக்கை எல்லாம் நடத்திய எங்களை இப்படி கேவலப்படுத்துவது நியாயமா?

குடும்பத்தை பராமரிக்காமல் மன்றப் பணிக்காக யாரும் வரவேண்டாம். செலவு செய்ய வேண்டாம் என்கிறாய். நீ சொல்லாவிட்டாலும் தலைவா இத்தனை ஆண்டு காலம் நாங்கள் செலவு செய்து உன் புகழ்பாடி போஸ்டர் ஒட்டியதை எல்லாம் பார்த்து ரசித்துக் கொண்டு தானே இருந்தாய்.

வாயை கட்டி வயிற்றை கட்டி உனக்காக எவ்வளவு செலவு செய்தோம் என்பதை நீ அறியமாட்டாயா? அப்போது வாய்மூடி இருந்து விட்டு இப்போது புத்திமதி சொல்கிறாயே இதுதான் நியாயமா?

நீ திரையில் தோன்றிய போது கற்பூரம் காட்டி, ஆரத்தி எடுத்து விசில் அடித்து ஆரவாரம் செய்து கோ‌ஷம் எழுப்பிய எங்களை தகுதியற்ற கூட்டம் ஆக்கி விட்டாயே. 30, 40 வருடங்கள் திரையில் நடித்தது மட்டும் முதல்வர் ஆவதற்கு தகுதி என நீ கருதும் போது இத்தனை ஆண்டுகள் உன்னை உயர்த்திப்பிடித்த எங்களுக்கு தகுதி இல்லை என்பது என்ன நியாயம் தலைவா?

குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள் என்கிறீர்கள். உங்கள் குடும்பத்தை, மனைவி, மருமகனை பார்த்துக் கொண்டு நீங்கள் இருக்க வேண்டியது தானே? ஏன் நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று மற்றவர்கள் எங்களைப் பார்த்து கேட்டால் நாங்கள் என்ன பதில் சொல்வது? ஊருக்கு தான் உபதேசம் உங்களுக்கு இல்லையா? ‘வர வேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்’ என்று சொல்லி வருவதற்கு முன்பே எங்களுக்கு ஆப்பு வச்சுட்டீங்களே தலைவா? இது சரிதானா?

மன்ற கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டவர்களைத்தான் நீக்கி இருக்கிறோம் என்கிறீர்கள். இந்த மன்றத்துக்கு எப்போதாவது கொள்கையை அறிவித்து இருக்கிறீர்களா? சிஸ்டம் சரியில்லை மாற்றப் போகிறேன் என்று சொல்லி விட்டு இஷ்டத்துக்கு செயல்படுவது நேர்மையான அரசியலா?

அரசியலுக்கு வருவது பதவி வாங்க அல்ல என்றால், வரும் சட்டமன்ற தேர்தலில் எல்லா தொகுதி களிலும் போட்டியிடுவோம் என அறிவித்தது ஏன் தலைவா? பதவிக்காக அரசியல் இல்லை என்றால் பெரியாரைப் போல கட்சி ஆரம்பித்து கொள்கையில் உறுதியாக நின்று போராட வேண்டியதுதானே.

உங்களுக்கு மட்டும் அமைச்சர் பதவி வேண்டும். அதற்கு நாங்கள் உழைக்க வேண்டும். ஆனால் நாங்கள் மட்டும் பதவிக்கு ஆசைப்படக்கூடாது என்பது எந்த ஊர் நியாயம் தலைவா? எங்களை உடைத்து எறிந்து விட்டு கார்பரேட்டுகள் துணையில் கட்சி ஆரம்பிக்க நினைக்கிறாய்.

‘பஞ்ச்’ வசனங்களை நம்பி உன்னை யாராலும் ஆட்ட முடியாது, அசைக்க முடியாது என நினைத்தோம். ‘பெயரைக் கேட்டா சும்மா அதிருதுல்ல’ என்றாய் உண்மைதான் தலைவா. உன் அறிக்கையை பார்த்து நாங்கள் எல்லாம் அதிர்ந்து கிடக்கிறோம்.

மன்றத்துக்காக உண்மையாக உழைக்கும் எல்லோருடைய செயல்பாடுகளையும் நன்கு அறிவேன் என்று சொல்கிறீர்கள். முதலில் உங்களை சுற்றி இருப்பவர்களை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் தலைவா.

தமிழருவி மணியன் சென்ற இடம் எதுவும் உருப்பட்டதா? ஊடகங்களில் உனக்காக குரல் எழுப்புபவர்கள் எல்லாம் மத வெறியர்கள். சாதி, மதம் கடந்து ஒற்றுமையாக வாழும் தமிழ் சமுதாயத்தை கலவர பூமியாக்கிட நினைப்பவர்கள்.

இது பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோர் பதப்படுத்திய மண். திராவிடத்துக்கு எதிராக செயல்படும் எவரும் தலை தூக்க முடியாது. ஆனால் ஒரு கூட்டம் எங்களால் ஏற்பட்ட உங்கள் புகழை அழிக்க நினைக்கிறது.

அந்த கூட்டத்தின் கைப்பாவையாகி அவர்கள் ஆட்டுவிக்கும்படி ஆடுவது உங்கள் புகழின் அழிவுக்கு வழி வகுத்து விடும் என்பதை தலைவா உணர்ந்து கொள்.

உன்னை எங்களின் சுவாசக் காற்றாய் நினைத்து செயல்பட்ட எங்களை தூக்கி எறிந்து விட்டாய். தலைவா, உன்னை நம்பி நாங்கள் ஆடிக் கொண்டு இருந்தோம். ஆனால் நீயோ யாருடைய கயிற்று அசைவிலோ ஆடும் பொம்மையாகி விட்டாய்.

Leave a Reply